திரை விமர்சனம்

ஒரு கனவிற்கான இரங்கற்பா


கலையின் பணி தீர்வுகளைச் சொல்வதல்ல. அப்படியெனில் அதன் பணி கேள்விகள் கேட்பதா என்றால், ம்… கேட்கலாம் என்பதே பதில். அதாவது அதுவும் கூட அதன் ‘செய்தே ஆக வேண்டிய’ வேலையல்ல. கலையின் பணி தொந்தரவு செய்வது. நம்மையே பிரச்சனைகளை இனங்காணச் செய்து சிந்திக்கத் தூண்டி, தீர்வுகளை நோக்கி நகர்த்துவது. இதனைத் திறம்பட செய்கிற படைப்பை நாம் கலை முக்கியத்துவமுள்ள படைப்பென நினைவுகூர்கிறோம். 

போதை அடிமைத்தனம் (drug addiction) எத்தனை கொடூரமானது, அது மனித வாழ்க்கையை எந்த அளவிற்கு சிதைக்கவல்லது; தரங்கேட்ட ஆளவிற்கு போதை அடிமைகளின் ஆளுமையை சரித்து அவர்களே கற்பனை செய்திடாத அளவிற்கு இழி நிலைக்குத் தள்ளிடக்கூடியது என்பதை என் பார்வையனுபத்தில் இப்படத்தின் அளவிற்கு வீரியமாகச் சொன்ன பிறிதொரு படைப்பை இன்றுவரை கண்டதில்லை. 1978 ஆம் ஆண்டு Hubert Selby Jr. எழுதிய நாவலை அதே பெயரில் டேரன் அரோனாஃப்ஸ்கியால் திரையாக்கம் செய்யப்பட்டது. சுயாதீன திரைக்கலைஞர்களில் தனித்துவமான குரல் கொண்ட ஆளுமை டேரன். இதுதான் அவரது இரண்டாவது படைப்பு என்றால் ஆச்சரியமாக இருக்கும். சொல்ல வருகிற கதையை காட்சிப்பூர்வமாக எவ்வளவு நேர்த்தியாக ஒரு பார்வையாளருக்கு கடத்த முடிகிறது என்பது தான் திரைமேதைமையின் மிக முக்கிய அம்சம். அது டேரனின் காட்சியாக்கத்தில் கச்சிதமாக தொழில்பட்டிருப்பதை படத்தைப் பார்த்தால் நமக்கே புரியும். 

தனிமை சூழ்ந்த, புறக்கணிப்பின் கசப்பை மட்டுமே ருசிக்க வாய்த்துள்ள வாழ்வை கடத்துகிற மனிதர்கள் தான் இக்கதையின் மையப்பாத்திரங்கள். ஹெராயினுக்கு அடிமையான நாயகன் ஹாரியின் தாயார் சாரா கோல்ட்ஃபார்ப். பெரும்பாலும் வீடடையாமல் தனது நண்பன் டைரனுடன் மட்டுமே சுற்றுகிற ஹாரியின் இன்மையை தொலைக்காட்சியைக் கொண்டு இட்டு நிரப்ப முயலுகிற சாராசரித் தாய். 

ஆடை வடிவமைப்பாளரான மேரியான் ஹாரியின் காதலி. அவளுக்கென்று ஒரு விற்பனையகத்தைத் திறப்பதே அவர்களின் கனவு. நண்பர்கள் இருவரும் தங்கள் கனவு வாழ்க்கையை நிர்மாணிக்க ஹெராயின் விற்பனை வளையத்திற்குள் நுழைகிறார்கள். இந்த மூவருமே போதை அடிமைகள். வாங்கும் வஸ்துகள் விற்பனைக்கு மட்டுமல்ல; இவர்களுக்கும்தான். சரக்கின் தரத்தை பரிசோதிப்பதான பாவனையில் அதீதமாய் போதையில் அமிழ்கிறார்கள். அவர்கள் சொல்படி கேளாத வாழ்க்கையை சரி செய்ய முனைகின்றனர். இன்னொருபுறம் போதையின் கிடுக்குப்பிடி இறுகிக் கொண்டே வருகிறது. 

அவர்கள் போதைப் பொருட்களை உபயோகிப்பதை, மிகத் துரிதமான சின்னஞ்சிறு துண்டு காட்சிகளாகக் கோர்க்கப்பட்ட விதத்தில் கையாளப்பட்டிருக்கும் படத்தொகுப்பு உத்தி (ஒரு பதமாக இவ்வகை உத்தியை Hiphop Montage என்கிறார்கள்), போதை அடிமைகளின் அதிதீவிர கொந்தளிக்கிற மனநிலையை, கணத்தில் தறிகெடுகிற உணர்வுகளை, அதன் வழி அவர்கள் வந்தடைகிற நிரந்தரமான நிம்மதியின்மை என்று பலவற்றையும் கலவையாக உணர்த்துகிறது. 

இளையோரின் நிலை இப்படியிருக்க அங்கீகரிப்பிற்கும், துணைக்கும் ஏங்கித் தவிக்கிற முதியவள் சாரா கோல்ட்ஃபார்ப் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடப்பட்டிருந்த பொய்யான அழைப்பை தான் வாழ்வதற்கான ஒரே அர்த்தப்பூர்வ காரணமாகக் கற்பித்துக் கொள்கிறாள். இனிப்புச் சுவையுள்ள துரிதக் கொரியுணவுகளின் பொருட்டு குலைந்து போயிருப்பினும் அதன் சுவையிலிருந்து மீள விரும்பாமல் அமிழ்ந்திருக்கும் அவள் குறுக்கு வழியில் உடல் எடையைக் குறைக்கிற ஒரு கவர்ச்சி அறிவிப்பால் உந்தப்படுகிறாள். இறுதியில் அவளும் தன்னையே இழப்பதைக் கூட அறிய முடியாமல் வில்லைகள் வடிவில் இருக்கிற ஒரு போதைப் பொருளுக்கே அடிமையாகிறாள். 

இக்கதாபாத்திரங்கள் தாங்கள் எடுத்துக் கொள்கிற போதைப் பொருட்களால் எப்படி மெல்ல மெல்ல சிதைகிறார்கள் என்பதை, நாடகத்தனமான பதைபதைப்புகளுக்கு இடமளிக்காமல், மிக நெருக்கமாக கதை மாந்தர்களை சாட்சி மாத்திரமாக வெறுமனே பின்தொடர்வது போல கையாளப்பட்டிருக்கும் திரைமொழியே நம்மிடையே மிக ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. இந்த சினிமாத்தனமான கையாள்கை தவிர்க்கப்பட்டிருப்பதுதான் பார்வையாளராக நம்மை அந்த கதாபாத்திரங்களோடு பிணைத்து அவர்களின் அல்லலை நமதாக பாவிக்கும் மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. பொதுவாக டேரன் கையாளுகிற திரைமொழி பார்வையாளரை அதீதமான உணர்வுச் சுரண்டலுக்கு (emotional exploitation) ஆட்படுத்தும். அவரது கதாபாத்திரங்கள் பலவும் சகலராலும் கைவிடப்பட்டு தனிமையில் உழல்பவர்களாவும், உணர்வுக் கொந்தளிப்பின் விளிம்பு நிலையில் தத்தளிப்பவர்களாகவும் இருக்கிறபடியால் அக்கதாபாத்திரங்களோடு நமக்கு உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தும் விதத்தில் இதனை நுட்பமாக செய்வது அவரது பாணி. ஆனால் இவ்வழிமுறை வெறுமனே அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக (கேஸ்பர் நோ மற்றும் சமீப காலமாக வான் டிரியர் போன்ற இயங்குனர்கள் செய்வது போல) மட்டும் செய்யப்படுவதில்லை என்பதையும் அவசியம் சொல்லியாக வேண்டும். டேரனின் கதைக்களங்கள் இருண்மையானவை. அவர்தம் கதைமாந்தர்கள் மனிதர்களின் மிக அந்தரங்கமான, சிடுக்கான, இருள் நிறைந்த மனதின் மறு கோடியை நம் முன் திறந்து வைக்கிறார்கள். 

போதை ஒரு இறங்கும் சுழல் படிக்கட்டு. ஒரு வழிப்பாதை அது. ஒரு கட்டத்திற்கு மேல் அதில் ஏறி வருவது அசாத்தியமான மனவலிமையக் கோருவது. நிச்சயம் அது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. வெறும் நூறே நிமிடங்களில் நான்கே பாத்திரங்கள் வழியாக இதனை முகத்திலறைவது போல ஆணித்தரமாக சொல்கிறது இப்படம். 

கொஞ்சம் கொஞ்சமாக போதையின் மீதான நாட்டம்/தேவை ஒரு பக்கம் இடப்பட்ட துலாதட்டின் மறுபக்கத்தில் நிகர் செய்ய எதனை வேண்டுமானாலும் வைக்கிற நிலைக்கு இறங்குவதும், அதன் பொருட்டு தங்களது தன்மானம் சுயமரியாதை என எது சிதைவதையும் பொருட்படுத்தவியலாத பரிதாப நிலைக்குள் முழுதாய் அமிழ்ந்து அழிவதும் நம் கண் முன்னே நிகழுகிறது. அவர்கள் கையறு நிலைக்குள் புதைமணலில் சிக்கிய உயிர்களென மீள வழிதெரியாமல் மெல்லப் புதைவதை அதே அளவிலான துயரோடும் அதே போலதொரு கையறுநிலைக்குள் இருப்பதான மனோநிலைக்கு நாமும் ஆட்படுகிறோம்.

இப்படத்திற்கான தீம் இசையை டேரனின் தோழரும் இசை கலைஞருமான கிளிண்ட் மேன்செல் உருவாக்கியிருந்தார். Lux Aeterna (இந்த லத்தின் பதத்திற்கு ‘நித்திய ஒளி’ என்பது பொருளாம்.) எனும் அந்த இசைத் துணுக்கை மிகப் பிரபலமான Kronos Quartet அணியினர் இசைத்திருப்பர். மொத்தப் படத்தின் ஆன்மாவை இந்த நாலு நிமிடங்களுக்கும் குறைவான இசையே கொண்டிருப்பது போல தொனிக்கிற உன்னதம் அது. இதுவரையிலும் மேற்சொன்ன பெயர் வேண்டுமானால் உங்களுக்கு அறிமுகமாகாமல் இருந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் இந்த இசையை எங்கேனும் நீங்கள் கேட்டிருக்கக் கூடிய வாய்ப்பு மிக அதிகம். வெளியான துவக்க காலத்திலேயே இந்த இசையின் பிரபல்யம் பாப் கலாச்சார (popular culture) நீரோட்டத்திற்குள் ஊடுறுவி விட்டதால் இன்று வரை எண்ணற்ற விதத்தில் அப்படியேவும், பற்பல ரூபங்களில் மறுஆக்கம் செய்யப்பட்டும் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வருகிறது. வெறும் இந்த இசையனுபவமே நம்மை விளக்கமுடியாத ஒரு சங்கடத்திற்குள் இழுத்துச் செல்வதை உணரலாம். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின் முதலாவது ஊரடங்கு காலத்தின் போது, இப்படம் வெளியான இருபதாவது ஆண்டை முன்னிட்டு அப்போதைய கிரோனோஸ் அணியின் இசைக்கலைஞர்கள் இந்த இசைக் கோர்வையை இசைத்த காணொளியை இன்றும் நாம் காணலாம்.     

படம் வெளியாகி இதோ கால் நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது.இக்கட்டுரைக்கு தலைப்பிட நினைத்துப் பார்க்கையில் படத்தின் தலைப்பே அக்கதையின் மையக்கருவை பரிபூரணமாக முன்வைப்பதை உணர்கிறேன்.  

 முதன்முதலாக இப்படத்தை பார்த்து பேதலிப்பின் உச்சத்தில் ஏது செய்வதென அறியாமல் அப்போது தங்கியிருந்த மேன்சனின் சிறு வானம் பார்த்த முற்றத்தில் அமர்ந்து நள்ளிரவில் நட்சத்திரங்களை வெறித்தபடியே நெடுநேரம் அமர்ந்திருந்ததன் மனச்சித்திரம் இன்னும் அப்படியே அழியாமல் இருக்கிறது. இப்படத்தை மறுபடியும் பார்க்கிற தைரியத்தை திரட்ட எனக்கு பதினைந்து ஆண்டுகள் பிடித்திருக்கிறது. படைப்பு தன்  வீரியத்தை இன்னும் அப்படியே பொத்தி வைத்திருக்கிறது. இம்முறையும் நான் வானம் வெறித்தேன். 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *