ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீர் தான் மறை நீர்.
நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அதை உருவாக்கச் செலவழிக்கப் பட்ட நீர் மறைந்திருக்கிறது. நீரின்றி எதுவும் இல்லை. நிலமின்றி கூட நீரிலிருந்து விடலாம். நீரின்றி நிலவில் மட்டுமல்ல, பூமியின் நிலத்திலும் கூட இருக்க முடியாது.
நீரே ஆதாரம் அது பற்றி, அதன் போக்கு பற்றி, அதன் அழிவு பற்றி இந்த மானுடம் அதை கை கழுவி விட்டது பற்றி, பாண்டியன்…. சோழன் கட்டிய அணைகள் பற்றி, கட்டிய அணைகளின் தேவை பற்றி, .கட்ட வேண்டிய அணைகளின் தேவை பற்றி,. அல்லது அணைகளே தேவை இல்லாதது பற்றி என்று அத்தனை தகவல்களை 120 பக்கங்களில் அடுக்கிக் கொண்டே சென்றிருக்கிறார் ஆசிரியர். படித்து முடிக்கையில் உள்ளே இனம் புரியாத நடுக்கத்தை உணர்ந்தேன். இந்த போக்கு இனியும் கூடினால் நீர் இன்றி நாம் அழிவது உறுதி. மூன்றாம் உலகப்போருக்கு நீரே ஆதாரமாக இருக்கப்போவது உறுதி. நீரின் மகத்துவத்தை ரத்தம் குடித்துத் தான் புரிய வேண்டுமானால் அதையும் இந்த காலம் நமக்கு நிகழ்த்திக் காட்டும் என்று உணர்ந்த போது திக் திக் என்று ஓடிச் சென்று வீட்டில் குழாய்களை ஒரு முறை பார்த்துக் கொண்டேன். தவற விடும் ஒவ்வொரு சொட்டும் எதிர் காலத்தில் நம்மைக் கொட்டும்.
இந்த பூமி 70% நீரால் ஆனது. அதனால் தான் இது பூமியாய் ஆனது.
“நீரின்றி அமையாது உலகு” என்று சொன்ன வள்ளுவனுக்குக் கோட்டையே நீர் இருந்த இடத்தில் தான் நாம் அமைத்திருக்கிறோம் என்று மார்கழி பனி கொட்டும் நடுக்கத்தை உச்சியில் கொட்டிப் போகிறார் ஆசிரியர். மீசை முறுக்கி தமிழன் என்று கத்திக் கொள்ளலாமா…!
ஏற்றுமதி செய்ய வேண்டியதை இறக்குமதி செய்து கொண்டு இறக்குமதி செய்ய வேண்டியதை ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கும் பொருளாதார சிக்கல் நிறைந்த நாடு தான் நமது. பெரிய பெரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் வெளி நாட்டவர் இத்தூணுண்டு ஜட்டியைத் தயாரிக்க முடியாதா…? ஏன் அதை நம் திருப்பூருக்கு ஆர்டர் தருகிறார்கள். செருப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ஏன் இந்தியாவில் வைத்திருக்கிறார்கள்….?
எல்லாமே மறை நீர்..!
எந்த பொருள்களைத் தயாரிப்பதன் மூலம் நீர்நிலைகள் பாதிப்படையுமோ அந்த பொருள்களைத் தயாரிக்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டன வளர்ந்த நாடுகள். நாமும் வேலைவாய்ப்பு, பொருளாதார தத்துவம் மண்ணாங்கட்டி என்று என்னவெல்லாமோ பேசிக் கொண்டு உழைத்து வீணா போகிறோம். நீரோடு நாமும் கெட்டுப் போனது தான் மிச்சம். இரண்டாம் உலகப் போரில் மிச்சமான வெடி பொருட்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு உரமாக மாற்றம் செய்து விற்பனை செய்ததைப் படிக்கும் போது உலக அரசியல் மிகக் கொடூரமாகச் சந்தையின் பிடியில் தன்னை வார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை அச்சத்தோடு உணர முடிகிறது.
ஒரு கப் காபி குடிப்பதற்கு 140 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்கிறார் ஆசிரியர். அந்த காபியின் நுனியிலிருந்து நா நுனியில் அது காபியாய் ஆகும் வரைக்கும்…… அதன் பிறகு அந்த காபி கப்பை கழுவதற்கும் சேர்த்து ஆகும் நீரின் மொத்த அளவு 140 லிட்டர். அப்படியே ஒவ்வொரு பொருளுக்கும் கணக்குப் போடுங்கள். கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட வேண்டியது தான். அத்தனை பேராபத்தில் பூமியை அதி விரைவாக அழியும் இடத்தில் இந்தியாவை மிக அதி விரைவாகத் தமிழ்நாட்டையும் கை விட்டிருக்கிறோம்.
நீ வாழும் இடம் அழிந்தால் நீ அழிவது உறுதி. இந்த மண்ணோடு நீரோடு தான் உன் வாழ்வு. அங்க அடித்தால் இங்க வலிக்கும் கதை தான்.. இந்த பயணத்தின் உருவாக்கங்கள். மண்ணுல ஒவ்வொருத்தரா புடிச்சு புடிச்சு மனுசனா செஞ்சு வாய்க்குள்ள வாய் வெச்சு உயிரைக் கொடுத்துப் போக இனி ஏசு வர மாட்டார். நம்புவோமாக. அமீபாவாய் இருந்தது கோடி யுகமாய் தன்னை தகவமைத்துக் கொண்டே வந்து இன்றைய இந்த உருவத்தைப் பெற்றிருக்கிறோம். அதற்கு மூல காரணம் நீர். அதை விடுத்து எப்படிப் பார்த்தாலும் இந்த இனம் தப்பித்துக் கொள்ள இயலாது. நீரை ஒரு போதும் செயற்கையாக உருவாக்க முடியாது. கன்னத்தில் போட்டுக் கொண்டு கேளுங்கள்.
ஒரு வளமான அரை அங்குல மண் வளர பல்லாயிரம் காலம் எடுத்துக் கொள்கிறது என்பது கூடுதல் செய்தி. மண்ணுல சாமி செய்யலாம். நீரைச் செய்ய முடியாது..
நீரை புட்டியில் அடைத்து விற்க ஆரம்பித்த போதே மிகப் பெரிய போராட்டம் நிகழ்ந்திருக்க வேண்டும். தவற விட்ட மானங்கெட்ட தருணம் அது. இயற்கையாகக் கிடைக்கும் எதையும் விற்க வாங்க எவர்க்கும் உரிமை இல்லை. முக்கிய சில பலசாலிகளின் அதிகார இருப்பு நம்மை ஒரு சொட்டு நீருக்கு ஏங்க வைக்கப் போகிறது. அதன் ஆரம்பக் கட்டம் எப்போதோ தாண்டி விட்டது. நீருக்குப் பின்னால் இருக்கும் வணிகம், அரசியல், உள்ளீடு, வெளியீடு, உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி என்பதெல்லாம் வேற லெவல் கணக்கு. பத்து ரூபாய்க்கு டாஸ்மாக்கில் கிடைக்கும்.. பாக்கெட் தண்ணீருக்குப் பின்னால் இருக்கும் வருமானம் கணக்கில் கொள்ளாதது.
“பசுமை நீர்த்தடம்.. நீல நீர்த்தடம்…..சாம்பல் நீர்த்தடம்” என்று மூன்று வகைகளில் நீர்த்தடங்கள் உண்டென்கிறார் ஆசிரியர். அத்தனையும் நாம் ஒவ்வொருவருமே சேர்ந்து காப்பாற்ற வேண்டிய தடங்கள். நீருக்கே தடமற்று செய்து விட்ட மானுட குலத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டம் இது.
காடழிந்தால் நாடழியும் என்பது தான் வேதவாக்கு. மரங்கள் பற்றிச் சொல்கையில்… அப்பப்பா…….. படிக்கப் படிக்கக் காட்டுக்குள் தொலைந்து விடலாம் என்று கூடத் தோன்றியது. தொலைந்தால் திரும்பக் கிடைக்க மாட்டோம் என்பது நிதர்சன உண்மை. மானுடம் காட்டை விட்டு வெகு தூரம் வந்து விட்டது. காடு வேறு வனம் வேறு என்கிறார் ஆசிரியர். காடுகளில் சூரிய ஒளி ஊடுருவ முடியும். வனத்தில் முடியாது. கண்கள் விரிய உள்ளே செல்கையில்.. உயர்ந்து நிற்கும் மரங்களும்.. மலை முட்டும் மேகமும்… மழை நீரை உரிந்து வைத்துக் கொண்டு வருடம் முழுக்க ஆறாக்கி.. நதியாக்கி ஓடையாக்கி அருவியாக்கித் தரும் பசும் புல்வெளிகள்…என்று காடுகளின் சம்பவங்கள் நம்மை மிரட்டுகின்றன.
காட்டை மனிதனால் உருவாக்க முடியும். வனத்தை உருவாக்க முடியாது. வனம் கொண்ட மழைக்காடுகளை மனிதனால் உருவாக்கவே முடியாது என்கிறார் ஆசிரியர். வேண்டுமானால் இருப்பதைக் காத்துக் கொள்ளலாம். இந்த பூமி தொடர் நிகழ்வு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கண்ணி அவிழ்ந்தால் மற்றவை எல்லாம் தானாக அவிழ்ந்து நிலை குலையும். எல்லா காலத்திலும் இந்த மழைக்காடுகள் சூரிய ஒளி புகாமல் குளு குளுவென்று தான் இருக்கும். அப்படி இருப்பது தான் அதன் சுழற்சிக்கு உகந்தது. இதுதான் மழைக்கான அதிகபட்ச ஆதாரம். மலையில் மூன்றில் ஒரு பங்கு வனமாக இருக்க வேண்டும் அது தான் நாட்டின் வளத்திற்கு அறிகுறி என்கிறார் ஆசிரியர். குடம் நிறைய யோசிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறது…. தெருக்குழாய் நீருக்கு வரிசையில் நிற்கும் மானுட சமூகம்.
ஒரு மரம் என்பது இரண்டு தொழிற்சாலைகளுக்குச் சமம். ஒன்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இன்னொன்று கார்பன்டை ஆக்ஸைடை உரிந்து கொள்ளும்… என்கிறார் ஆசிரியர். மரமில்லாத மலை சூரிய வெப்பத்தை இன்னும் அதிகமாக இழுத்துத் தரும் என்கிறார். இங்க நம்ம வாகனம் வெளி விடும் புகை இமயமலைக்குப் போகும் என்கிறார். பேரதிர்ச்சியின் மத்தியில் தான் இந்த புத்தகத்தை நாம் கடக்க வேண்டி இருக்கிறது. நீரின்றி இந்த பூமியின் கட்டமைப்புக்கு வழியே இல்லை என்ற நிலை தான் எப்போதும்… இப்போதும். அரசு….. கோவையில் தண்ணீர் உரிமையை “சூயஸ்” என்ற தனியார் நிறுவனத்திடம் கொடுக்க முடிவெடுக்கப் பட்டுள்ளதாக இருக்கும் செய்தி அடிவயிற்றில் சந்தேகமேயில்லாமல் நெருப்பைக் கொட்டுகிறது. பொலிவியாவின் நிலைமை தான் நமக்கும் என்றால்… நின்று நிதானிக்க வேண்டிய நேரமல்ல. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதற வேண்டிய நேரம் இது.
உலகின் மிகப் பெரிய பம்புகள் மரங்கள்தான் என்கிறார் ஆசிரியர். அத்தனை வேகத்தில் நீரை வேரின் மூலமாக உரிந்து தனக்குப் போக மிச்சத்தை ஆவியாக்கி விடும் என்கிறார். மரங்களில் இதயம் வரைந்தது போதும் இளைய சமுதாயமே…. மரத்தை இதயத்தில் வரைவோம் என்கிறேன்.
ஆக, நமது கட்டிட அமைப்பு முறை, நமது நீர் உபயோகிக்கும் முறை நமது நீர் மேலாண்மை எல்லாம் சேர்ந்து நிலத்தடி நீரைப் பூஜ்யத்துக்குக் கொண்டு சென்று விட்டது அப் பட்டமாகத் தெரிகிறது. இது அழிவின் முதல் நிலை.
நீர் நிலைகளுக்கு முன்னோர்கள் வைத்த பெயர்கள் மலைக்க வைக்கின்றன. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் பக்கம் பத்தாது.
மழை நீர் மண்ணில் விழுகையில்…… அது மண்ணுக்குள் போகாமல்… அதை ஆறாக்கி கடத்திக் கொண்டு போவது எது என்று ஒரு கேள்வி எழுகிறது. இலைகள் விழுந்து விழுந்து அதுவே மருவி மறுநிலமாகி அது நீரை மண்ணுக்குள் புக விடாமல் தன்னையே நிலமாக்கி தன் மீதே எடுத்து சென்று கடல் வரைக்கும் சேர்க்கிறது என்பது எந்த கொம்பனும் செய்ய முடியாத தொழில் நுட்பம். இயற்கையை வியக்கிறேன்.
“தண்ணீ வீணா கடல்ல கலக்குது ” இப்படி ஒரு சொற்றொடரை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது. கடலில் சேரும் நீர் வீண் இல்லை. அது அப்படித்தான் சேர வேண்டும். அதுதான் இயற்கையின் விதி… என்று பக்கம் பக்கமாய் விளக்கம் இருக்கிறது. ஆறு, கண்மாய், குளம், . குட்டை, ஓடை, ஏரி, கடல் என்று அது அது அது அதற்கான வெளிப்பாட்டை ஒரு காலகட்டம் வரை மிக துல்லியமாகத்தான் வெளிப்படுத்தி இருந்திருக்கிறது தண்ணீர். மனிதன் கெடுத்ததில் மிக மிக மோசமான ஆக்கிரமிப்பு நீர் வளம் தான்.
நீர் எந்த திசையில் எந்த வேகத்தில் செல்லுமோ அதற்கு தகுந்தாற் போல தான் அதிலிருந்து பாசனத்துக்கு நீர் எடுக்கும் முறை பின் பற்றப்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கு உபயோகம் ஆன பின் மிஞ்சும் நீரை மீண்டும் அதே ஆற்றில் இணைக்கும்படியான நுட்பத்தை நம் முன்னோர்கள் முன்னமே செய்து வைத்திருக்கிறார்கள். முன்னோர்களின் நீர் மேலாண்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
எல்லாவற்றிலும் குளறுபடி செய்த நவநாகரீகம் நீரில் அதிகமான குளறுபடிகளைக் கொண்டிருக்கிறது. புத்தகம் விலாவாரியாக புள்ளி விவரங்களோடு முகத்தில் அறைகிறது. எப்போது பாட்டிலில் அடைத்து நீர் விற்பனையை ஆரம்பித்தானோ மனிதன் அங்கே மண்ணை தன் தலையில் கொஞ்சமும் காசு கொடுத்து வாங்கி குடிப்பவன் தலையில் மொத்தமுமாக கொட்ட ஆரம்பித்தான். மண்ணாய் போக போகும் மானங்கெட்ட சமூகம் வாட்டர் பாட்டில் வாங்கி கொண்டு அலைகிறது.
நீரை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்., இருக்கும் நீரை.. எப்படியெல்லாம் சுத்திகரிக்கலாம், உபயோகப் படுத்தலாம் என்று பல்வேறு வழிமுறைகளை மிக துல்லியமாக, அக்கறையாக, அற்புதமாக எல்லாருக்கும் புரியும் வகையில் கொடுத்த ஆசிரியர் கோ. லீலா அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரின் சமூக அக்கறைக்கு ரெட் சல்யூட்.
இப்படி நீர் பற்றிய எல்லா கோணங்களையும் இந்த “மறை நீர்” சொல்லிக் கொண்டே போகிறது. மறைநீர் என்று தலைப்பு வைத்து மறைநீரை ஒரு சேப்டரில் அடக்கி விட்டிருக்கிறார் ஆசிரியர். பிறகு இது மறை நீர் பற்றிய புத்தகம் மட்டுமல்ல. நீர் பற்றிய புத்தகம் என்று நாமே புரிந்து கொள்கிறோம். நீரற்ற வறட்சி தான் எழுத்து நடையிலும் என்பது விமர்சனம் தான்.
மற்றபடி, மறைநீர் இந்த காலகட்டத்துக்கு தேவையான தாகம் தான். தவித்தோர் நீரைப் படித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளுங்கள். மற்றோரெல்லாம் செத்து ஒழியுங்கள்.
கவிஜி
நூல் : மறை நீர்
பிரிவு: கட்டுரைகள் | சூழலியல்
ஆசிரியர் : கோ.லீலா
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
விலை: ₹ 150
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.