நூல் விமர்சனம்புனைவு

அன்று இந்த நிலத்தின் நிறம் சிவப்பு – கவிதை நூல் ஒரு பார்வை


ட்டைப் படத்திலேயே அமெரிக்காவின் பயணம் நமக்கு ஆரம்பித்து விடுகிறது.

ஆம்…! அமெரிக்க பயணத்தைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு நெடும் பயணம் நாம் போக வேண்டி இருக்கிறது. காலம் காலமாக பயணங்கள் மனிதனின் அடுத்த கட்ட நகர்வாக இருந்து வருகிறது. அதன் நீட்சி, அதன் சாட்சி தான் இந்த நூல்.

காம்டன் நகரில் இருக்கும் வால்ட் விட்மன் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த தவிப்பையும் மீறி செல்லும் நிலையிலும்.. வீட்டுக்குள் செல்ல முடியாத அமெரிக்க சூழலில் அவர் வீட்டு வாசலில் அமர்ந்து மகாகவி தமிழன்பனின் கவிதை வாசித்த தங்கமான நேரத்தையும் முன்னுரையில் எழுதி இருக்கிறார். முகம் முழுக்க பேரானந்தத்தோடு படித்தேன். ஆதிக்கு செய்யும் அர்ப்பணம் அது.

இந்த நூல் ஒரு விதமான புது அனுபவத்தை எனக்குத் தந்தது. நானும் அகன் அய்யாவின் வரிகளில் ஊர்ந்து வளைந்து அமெரிக்கா போனது போல ஒரு மிகை உணர்ச்சி. மீந்த உணர்ச்சியில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் பேரார்வம். அற்புதம் அமெரிக்காவிலும் முளைக்கும் என்று கவிதை நூல் கண் திறந்து விட்டது. ஆத்மார்த்தம் அன்று இந்த நிலத்தின் நிறம் சிவப்பெனவும் இருக்கும் போல.

பணி ஓய்வுக்கு பின் அகன் அய்யா தன் மகளின் அழைப்பின் பேரில்…. கொஞ்ச நாட்கள் அமெரிக்காவில் வலம் வந்த அனுபவம்… தீரா வனத்தில்… தீர்க்கவியலாத சொற்கள் முளைத்தது போல. திரும்பும் பக்கமெல்லாம் அவரின் உள்ளக் கிளர்ச்சியை உணர முடிந்தது. வாழ்நாளெல்லாம் கவிதை சுமந்த…. இனி வாழும் நாளெல்லாமும் கவிதை சுமக்க போகிற மனிதனுக்கு கவிதைகள் கொண்டே அமெரிக்கா சிறகு பூட்டியது என்று சொல்லலாம்.

“அமெரிக்காவில் கால் இல்லாமல் இருக்க முடியும்
ஆனால் கார் இல்லாமல் வாழ முடியாது
சட்டையில் காலர் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் கையில் டாலர் இல்லாமல் வாழ முடியாது”

என்று ஒரு கவிதையில் சொல்லும் அகன் அய்யாவின் நேரிடையான அனுபவத்தில் இன்றைய
அமெரிக்காவின் பெரிய அண்ணா முகமும் நமக்கு வெளிப்படுகிறது.

அமெரிக்கா செவ்விந்தியர்களின் நாடு என்பது நமக்கு தெரிந்ததே. அரசியலும்  அதிகாரமும் என்ன செய்து வைத்திருக்கிறது என்றும் நமக்கு தெரியும். ஆங்காங்கே இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ப அகன் அய்யாவின் மனநிலையும் மாறிக் கொண்டே வருவதை அவர் அங்கங்கே நின்று பார்த்து பதிந்த வரிகளின் மூலம் நாம் உணர்கிறோம். கவிதைக்காரனின் உள்ளத்தின் தேவை மிக மிக குறைவு. அவனுக்கு கொஞ்சம் வானமும் கொஞ்சம் வரிகளும் போதும். அது இங்கே அர்த்தம் பூசி அடுத்தடுத்து பக்கங்களாய் விரிகிறது.

தமிழும் தமிழ் சார்ந்த உறவுகளும் இருக்கும் பல இடங்களுக்கு அங்கே சென்றிருக்கிறார். எல்லையில்லாத இல்லை என்காத தமிழ் வாசம் சுவாசித்த களிப்பு அவர் வரிகளில். பயணங்கள் மிக நுட்பமான வாழ்வின் வளைவுகளை சிந்திக்கத் தூண்டுபவை. நிரம்ப தூண்டி இருக்கிறது. நிம்மதியை சுண்டி இழுக்கிறது.

நேப்பர்வில்லில் இருந்து எழுதிய கவிதையின் கடைசி வரி இப்படி இருக்கிறது.

என் மீது அடுக்கப்பட்ட எரியும் கட்டைகளின் ஊடே இன்று உணர்கிறேன்
” அன்று என்பதெல்லாம் அன்றல்ல என்பதை”

நான் இரண்டு இரவுகள் நினைத்த நேரத்தில் இந்த வரியை திரும்ப திரும்ப எடுத்து பார்த்துக் கொண்டேன். ஒருவகை நடுக்கம் ஒரு வகை.. தவிப்பு என்னுள் பரவுவதை உணர முடிந்தது. வயது ஆக ஆக.. வாழ்வின் வலை இறுகிக் கொண்டே வருவதை நான் உணர்கிறேன். உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் அந்த வருதலின் வருடலை நான் இவ்வரிகளில் காண்கிறேன். அன்று என்பதெல்லாம் அன்று இல்லை.. சரி தானே… இன்று என்பதெல்லாம் இன்று இல்லை என்பது போல. ஆழத்தின் தூரத்தில் மனதின் அசைவுகளை அசையவிட்டு இசைக்கிறது கவிதை.

சிகாகோவில் இருந்து எழுதிய ஒரு கவிதை இப்படி முடிகிறது.

“ஏலே சின்னவனே
தண்ணி வண்டி வந்து எட்டு நாளாச்சுலே
இன்னைக்காவது வருதான்னு
எழுந்து பாருலே….”

அம்மா கத்தினாள்” என்று முடிக்கிறார்.

தாகத்தின் நாவில் சிகாகோ. ஆன்மீகமெனும் நீர் ஊற்றிய இந்திய புதல்வன் விவேகானந்தரின் தேவை இந்த காலம் தெரிந்தெடுத்த ஒன்று…என்று மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது கவிதை.

“நீள நீர்ப்பரப்பில் நிறம் நீலம்” என்றொரு கவிதையில் அதை இங்கு எழுதிக் காட்டுவதை விட படித்துக் காட்டுதல்தான் சரி.

“அரை நிர்வாணம் ஒரு கவிதை
முழு நிர்வாணம் முதுமொழி
அர்த்தம் முழுமையாய் அறிந்தோர்
இன்னும் பிறக்கவில்லை”

இந்தப் பத்தியில் ஞான தரிசனம் எனக்குள் கிடைக்கிறது. உற்று நோக்கினால் முன்னும் பின்னும் உள்ள பொருள் நீவீர் அறிய முடியும்.

மிக்சிகன் ஆற்றின் ஓரத்தில்

“வெள்ளை கருப்பு இரண்டையும் ஒன்றாக்கி
நீலம் என்ற நிறத்தை நீள் நீர்ப்பரப்பிற்கு அளித்த அலைகளுக்கு இரண்டு முகங்கள் நான் கண்டேன்”  என்கிறார்.

“அந்த முகங்கள் ஒன்று மார்ட்டின் லூதர் கிங் இன்னொன்று மண்டேலா…”

கவிதை ரசனை சார்ந்தது மட்டுமல்ல. அரசியல் சார்ந்ததும். கூட சமூகம் சார்ந்ததும். என்ன எழுதுகிறோம் என்ற தெளிவுதான் அவரின் கவிதைகளை பொறுப்புணர்ச்சியோடு நம்மைப் படிக்க வைக்கிறது.

“ஏனுங் மாமா
இம்பூட்டு தண்ணி நம்ம
காவிரிலே ஓடினா
எத்தனை போகம் வெள்ளாமை வைக்கலாம்..?
என்ற செவ்வந்தி சண்முகத்தோடு ஒட்டிக்
கைகளுக்குள் கை தொலைத்துச்
சேலையால் உடல் போர்த்தி நடந்தாள்…!”

என்று முடிக்கிறார். ஆம். அமெரிக்கா போனாலும் அகன் என்ற கிராமத்தானின் ஆழ்மனம் வெள்ளாமைக்கும் தண்ணீருக்கும் ஏங்கும் இந்தியத் தேவையாகவே இருக்கிறது.

“ஆப்ரஹாம் லிங்கன் உனக்காக சுமந்து வந்துள்ளேன்” கவிதை.ஒரு பாடம். ஆப்ரஹாம் லிங்கன் என்ற மாமனிதனின் சுதந்திர தாகத்தை எடுத்துக் காட்டிய வரிகளில்.. அவரின் வரலாற்றை மீண்டும் ஒரு முறை கவிதை வடிவில் பார்க்க முடிந்தது. அடிமை என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்கியவன் என்ற வரியில்ஆதுரம் மெச்ச நூலை இன்னும் கொஞ்சம் கண்ணருகே அணுகுகிறேன்.

கெட்டிஸ்பர்க்கில் ஆப்ரஹாம் ஆற்றிய உரை பற்றி கொள்கையில்…. துல்லியத்தில்… தூண் செய்து கவிதையை தூக்கி நிறுத்துகிறார்.

272 சொற்கள் – 3 நிமிடம் – 1863 ல் ஆற்றிய உரை என்று படிக்கையில் தகவலோடு.. தாகமும் அடங்குகிறது.

“குண்டடி பட்டு இறந்து பிறகும்
உன் முகத்தில் புன்னகை மலர்ந்ததாமே” என்ற ஒரு வரியில் விடுதலை வேட்கையின் தீரா தாகத்தை உணர முடிந்தது. உரிமைக்குரலின் உன்னத மொழியை அறிய முடிந்தது. 1654 மைல்கல் – 180 நாட்கள்- 7 மாநிலங்கள் சுற்றிய லிங்கனின் உடல் தாங்கிய சவப்பெட்டி காலத்தின் சாட்சி. அதைக் காகிதத்தில்… உணர்ச்சி தெறிக்க சொல்லி இருப்பது…. இந்த நூலின் சொல் ஆட்சி. உள்ளே பூரிக்கும் எதுவோ… தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்கிறது.

“10.10 நீ குண்டடிபட்ட நேரம்
அது
வாருங்கள் என்னிடம் எல்லாருக்கும்
விடுதலை உண்டு”

என்று இருகரம் தூக்கி அழைப்பது போல் இருக்கிறது” என்று எழுதுகிறார். மரியாதையின் மேல் எழும் அன்புக்கு அஸ்திவாரம்… சுதந்திரம் என்று புரிகிறது.

“உன்னைக் காண வந்துள்ளேன் லிங்கன்
கண்களில் ஈரத்தோடும்
கைகளில் எங்கள் மகாகவி தமிழன்பனின் கவிதைகளோடும்”

என்கிறார்.

நீர் பூக்கும் கண்களை நான் கொள்கிறேன். உணர்ச்சிவயப்படல் அடிக்கடி இந்த நூலில் எனக்கு நிகழ்ந்தது. வயப்பட்ட உணர்ச்சியில்… நானும் ஒரு கவிஞனே என்பதில்…. பெரு மகிழ்ச்சி.

ஏராளாமான தகவல்கள். ஆங்காங்கே ஒழுங்கு முகமாய் புன்னகை செய்கிறது. குர்து மக்கள்,  ஈழத்தமிழர்கள், வெனிசுலா மனிதர்கள் காங்கோ நதியினர்கள் என்று ஆங்காங்கே கிடைக்கும் இடத்தில் எல்லாம் வலி கொண்ட வாழ்வியலை கனத்த மனதோடு கரைந்த விழியோடு பகிர்ந்து கொண்டே செல்கிறார். தேடி படிப்போர்க்கு முன்னுரை இவைகள்.

“இந்தியா எழுதிய கவிதை விவேகானந்தர்” என்கிறார் ஒரு கவிதையில்.

அதன் மொழி பெயர்ப்பை 11.09.1893 ல் சிகாகோ மொழி பெயர்த்தது என்கிறார். காட்சியை கவிதையாக்கலாம். நினைவையும் கவிதையாகவே ஆக்கி இருக்கிறார்.

எங்கெங்கு திரும்பினும் உலகில் விடுதலைதான் வேராக இருந்திருக்கிறது. உலகமே … லேடிஸ் அண்ட் அண்ட் ஜெண்டில்மென் என்று புலம்ப… சகோதர சகோதிரிகளே என்று சிகாகோவில் முழங்கிய விவேகானந்தரை வடித்தெடுத்த தரம்… வரம் பெற்றது. சிந்தித்தல் என்பது பெரும் உழைப்பு என்று ஒரு வரி. முத்து கோர்த்த மணி மகுடம் கவிதைக்கு. விவேகானந்தர் உரையாற்றிய அவையில்… இத்தனை ஆண்டுகளுக்குப் பின் தானும் உரை ஆற்றியதை பின்குறிப்பில் சொல்கிறார் கவிஞர். அற்புதங்கள்… அமெரிக்காவிலும் நடக்கும்.

“நீ இந்து மதத்தின் துறவி அல்ல.. இந்தியாவின் தூதன் என்பேன்” என்கிறார். எழுந்து நின்று கண்கள் சிமிட்ட மறந்து கை தட்டுகிறேன். தட்ட தட்ட எழும் சொற்களுக்கு புன்னகை பூக்கிறது.

“கூப்பிட்ட குரலுக்கு காப்பர் உண்டு
அதனால் அவர்கள் காப் என்று அழைக்கப்படுவர்” என்று ஒரு வரி… “சோளக்காடும் நீர் எழும்பிகளும்” என்ற கவிதையில்.

அந்தக் கவிதையில் ஒரு ஒப்பீடு இருக்கிறது. அமெரிக்க வீதிகள், வீடுகள், பூங்காக்கள்., நடைப்பயிற்சி சாலைகள், வாகன சாலைகள் சக மனிதனை எதிர் கொள்ளும் கர்ட்டசி என்று அந்த டாலர் காலர் மேட்டரோடு இந்த கவிதை அத்தனை சுவாரஷ்யம். நடைப்பயிற்சியில் கிடைத்த அமெரிக்க வேர்வை முத்துக்கள் என்றே நம்புகிறேன்.

அன்று இந்த பூமியின் நிறம் சிவப்பு தான் என்ற கவிதைதான் தொகுப்பின் தலைப்புக்கான விதை. சிவப்பு வண்ணத்தில் படிக்க படிக்க.. சித்திர சோலைக்குள் அமெரிக்கா வால்ட் விட்மனோடு கண் திறக்கிறது. ஐன்ஸ்ட்டின் கை பிடித்து நகரும் வரிகளில்… அறிவியல்.. ஆராய்ச்சி பூமியை விளைவிக்கிறது. லிங்கனின் ரத்தமும்… மார்ட்டின் ரத்தமும்.. சிதறிய மண்ணில்…. இன்று வேண்டுமானால் நிறம் பச்சையாக இருக்கலாம். ஆனால் அதன் ஆழத்தில் சிவப்பே நிறம், சிவப்பே உரம் என்கிறது இக்கவிதை.

“நயாக்ராவை மாயாவி நீ” என்கிறார். ஒரு பக்கம் அமெரிக்க முகம். மறுபக்கம் கனடா முகம். யுகம் யுகமாய் எதையோ தேடி அலையும் நீருக்குள்… மெல்ல தன்னை இறக்கிக் கொண்டிருக்கின்றன நீரின் யுகங்கள் என்கிறார்.

இந்த தொகுப்பில் ஆகச் சிறந்த கவிதையாக இந்த “இரண்டு உடலில் மூன்று உடல்கள்” கவிதையை நான் காண்கிறேன். இதில் ஒரு வரி…. என்னை இன்னொரு வரிக்கு கொண்டு சென்றது.

“ஒரு கண் மூடி பார்த்தேன் நீ அழகு
இரு கண்ணும் திறந்து மூடாமல் பார்த்தேன் நீ பேரழகு”

என்று எழுதி இருப்பார்.

சற்றே மாற்றி
ஒரு கண் மூடி பார்த்தேன் நீ அழகு
இரு கண்ணும் மூடி பார்த்தேன்… நீ பேரழகு என்று எழுதிப் பார்த்தேன்.

இந்தக் கவிதையில் நயாக்ராவின் அடுத்தடுத்த கட்டம் பற்றி அருவியாய் சொட்டுகிறது விபரம். இந்த நீர் எழுச்சி…. ஒரு சாரருக்கு மட்டுமல்ல பொதுவானது என்றும்…. அதில் இருந்து எடுக்கும் மின்சாரம் பற்றியும்…..1896 ல் நான்கு நாட்கள் உறைந்து கிடந்த நிலை பற்றியும் ஒரு கட்டுரைக்கான சமாச்சாரங்களோடு இந்த நயாக்ரா கொட்டோ கொட்டென கொட்டுகிறது வரியெல்லாம் உண்மை துளிர்க்க.. வெண்மை சிலிர்க்க.

நிறைய கவிதைகளில் துல்லியமான ஆரவாரம் மினுங்குகிறது. அது கவிதைக்கான தோற்றத்தை மட்டுமல்ல, அந்த காட்சிக்கான தோற்றத்தையும் சுவராசியப்படுத்தி விடுகிறது. வரலாற்று சம்பவங்களின் கோர்வையை கவிதைக்குள் புகுத்திய நுட்பம் மெச்சத்தக்கது.

“சூரியன் மறுபெயர் விரும்பினால் உன் பெயர் சூட்டிக் கொள்ளட்டும்” என்று மார்ட்டின் லூதரைப் பார்த்து சொல்லும் வரிகள் சொல்லில் சொக்கிய சொப்பன வரிகள்.

“அமெரிக்காவின் ஒரு முகம் வல்லரசு. இன்னொரு முகம் இயற்கை என்னும் பேரரசு”

இரண்டே வரிகளில் அமெரிக்கா பற்றிய பிம்பத்தைக் கட்டமைத்த அகன் அய்யாவை எத்தனை வணங்கினாலும் தகும்.

“எங்கள் மகாத்மாவுக்கு ஆப்பிரிக்க மண்டேலா ஒரு பேரன்,. மற்றொருவன் அமெரிக்க கொள்ளுப்பேரன் மார்ட்டின்…” விசில் அடித்து கை தட்டுகிறேன். ஆன்ம திருப்தியை படிக்கையில் இப்படி எப்போதாவது உணர முடியும். அப்போதெல்லாம் சிறுவனாய் எழுந்து குத்தாட்டம் போட்டு விடுவதுண்டு.

“ஒரு இருள் மற்றொரு இருளை விரட்டாது…” ‘சொன்னது நீ தான் மார்ட்டின்’ என்று கவிஞர் சொல்கையில்.. கண்களில் நீ ததும்ப மார்ட்டினின் முகம் என் உடலில் ஒரு கணம் வந்து போனது.

அமெரிக்காவின் ஆன்ம தரிசனத்தை அலசி ஆராய்ந்திருக்கிறார். அங்கொரு நிறம் இங்கொரு நிறமல்ல. எல்லா நிறமும் சிவப்பில் இருந்தே ஆரம்பிக்கிறது. எல்லா வரிகளும்… நிலத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. வீடென்பது ஜன்னல்களால் ஆனது என்று புரியும் அதே நேரத்தில்.. வீடென்பது கனவுகளாலும் ஆனது என்பதும் புரிகிறது.

“அவரை காணவில்லை” கவிதை வலி நிறைந்த சொற் குடங்கள். படிக்க படிக்க படிப்போரை உடைத்து விடும் மென் சடலங்கள்…..கவிதையில் கண்டேன். கடைசி வரி- “வீடில்லாதவன்….உதவிடுக” என்ற பதாகை அமெரிக்காவில் வழக்கம் என்கிறது கவிதை. இங்கும் பழக்கம்தான் என்கிறது நினைப்பு.

ஒவ்வொரு கவிதையிலும்.. ஒரு வரி.. உயிரோடு தீ மூட்டி விடுகிறது. ஒரு வரி தீயோடு பனி தீட்டி விடுகிறது.

“நான் எழுத்தை அறிந்திருக்கவில்லை
இசை மொழி தெரிந்துள்ளேன்
புல் மரம் மழை வண்டு போல”

படிக்க படிக்க வயிறு நிறைந்த மனதைக் கண்டேன். அத்தனை சுடர். மீண்டும் ஒரு முறை படிப்பதற்கு மீண்டும் ஒரு முறை நான் என்னில் எழுதிக் கொண்டேன்.

“நான் எழுத்தை அறிந்திருக்கவில்லை
இசை மொழி தெரிந்துள்ளேன்
புல் மரம் மழை வண்டு போல”

“நீந்திக் கடப்போர் இல்லா
விரிகடலா நீ
பல நில மனிதர்களின்
பல்லொலி மொழியா நீ”

இது கவிதைக்கு மட்டுமல்ல… கவிஞருக்கும் பொருந்தும்.

“ஒரு சிலை நடை பழக இறங்கி வருகிறது”

சுதந்திரா தேவியைப் பற்றிய இந்தக் கவிதையின் தலைப்பே கவிதைதான்.

பனிப் படலங்கோடு “வேறாய் இல்லாத வேர்” கவிதையோடு நூல் முடிகிறது. நமக்குள் ஒரு நூலகம் கண் திறந்து கொள்கிறது.

தமிழ் இலக்கிய உலகின் இரண்டாவது பயணக்கவிதை நூல் இது. மகாகவி ஈரோடு தமிழன்பன் எழுதிய ‘ உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன் வால்ட் விட்மன் ‘முதல் பயணக்கவிதை கவிதை நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை மொழியிலேயே நகரும் மானுடத்தில் இயற்கையின் இன்முகத்தை இன்னிசையாக்கி இசை நடுவே வார்த்தைகளிட்டு கவிதையாக்கி இருக்கும் அகன் அய்யாவின் இந்த நூல் பொக்கிஷம். வேறு வழி இல்லை. “அன்று இந்த நிலத்தின் நிறம் சிவப்பு” சொற்களை நீங்கள் கடந்துதான் ஆக வேண்டும். கடக்கையில்.. ஒரு அமெரிக்க போதி மரம் தலை மேல் முளைக்கத் தொடங்கும். யார் கண்டார்.. இந்திய பறவைகளும் மரத்தில் அமரலாம்.

பறவைக்கும் படைப்பவனுக்கும் இந்தியா என்ன அமெரிக்க என்ன.. எல்லாம் ஒன்று. எல்லாமே ஒன்று.


கவிஜி

நூல் விபரம்

நூல் : அன்று இந்த நிலத்தின் நிறம் சிவப்பு
ஆசிரியர் : கவிஞர் தி அமிர்தகணேசன்
வெளியீடு : ஒரு துளிக் கவிதை
வருடம் : 2019
தொடர்புக்கு : 9443360007

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *