பொதுவாக நரனின் கதையுலகம் பற்றிப் பேசுவதற்கு அவரது முழுப் படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும். முழுப் படைப்புகளையும் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் இல்லாததால் இந்தப் புத்தகம் பேசும் கதை மாந்தர்கள், சூழல்கள், கதையுலகம் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகம் பற்றி விரிவாகப் பேசவே நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
அவற்றில் முக்கியமானது மற்றும் அவசியமானது என்று நான் கருதுவது அல்லது நான் கண்டடைந்தது என்று கூறினால் நரனின் கதை மாந்தர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதீத மனப்பிறழ்வுத் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதன் நீட்சியாகச் சாதாரண மனிதர்களிடம் இல்லாத வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மக்களோடு புழங்கும் அசாதாரண மனநிலை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். மேலும் இதிலொரு அழகு என்னவென்றால் தங்கள் பிறழ்வுகளை யாருமறியாது ஒரு ரகசியமாகவே அனைவரும் வைத்திருப்பது தான்.
அந்தக் கதாபாத்திரங்கள் யாருமே தங்கள் பிறழ்வு பற்றிய பிரக்ஞை அற்று ஒடுங்கிக் கிடக்கும் மனநிலை உடையவர்களாகவே இருக்கிறார்கள். பிறழ்வுகளில் பலவகை உண்டு. பிறழ்வடைந்த பலர் தங்களுக்கு ஏற்படும் புற, சமூகத் தீங்குகளின் காரணமாக அதீதக் கோபத்தில் மற்றவருக்குச் சமுதாயத்துக்குத் தீங்கு இழைப்பவர்களாக மாறுகிறவர்கள் ஒரு ரகம். அந்த அநீதியைத் தட்டிக் கேட்க வழியற்று தன்னை அழித்துக் கொண்டோ ஒடுங்கிக் கொண்டோ தங்களை அழித்துக் கொள்வது ஒரு வகை. நரனின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இரண்டாவது வகையில் வந்து நிற்கின்றன.
தங்களைத் தாக்கும் ஏதோ ஒரு சூழல், அதிலிருந்து மேடேற முடியாத தன்மை அதன் நீட்சியாகத் தீவிரத்தன்மைகள் தொடரத்தொடர அத்தகைய பிறழ்வுகளை ஒரு பிரச்சினையாக எந்த கதாபாத்திரமும் யோசிக்கவில்லை.
அதை அனுபவிக்கத் துவங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எந்த வாசகனும் சொல்லவே முடியாது. அப்படி இருந்தால் அது அப்படிதான் இருக்க முடியும் என்று தோன்றவைப்பதில் கைதேர்ந்த ஆசிரியராக இருக்கிறார். ஏன் நம்மோடு கூட இருப்பவர்கள் தானே அல்லது நாம் தானே இவர்கள் என்று கூட எடுத்துக் கொண்டால் சரி தவறு என்று எந்தத் தராசுகளையும் தூக்கிக் கொண்டு இல்லாமல் வாசிக்கலாம்.
இவர்களால் தீங்கு நேருமா என்றால் எப்படி வேண்டுமானாலும் திரும்பும் என்பதைத் தவிர வேறேதும் சொல்ல முடியாது. இந்தக் குற்றங்களின் அல்லது இவர்கள் அப்படி ஆகக் காரணமானவர்களை, சூழல்களை என்று யாரை நோக்கியும் நேரடியாகக் கைநீட்டி விட முடியாத படியான சிக்கலில் விழுந்து கொண்டவர்கள், விழவைக்கப்பட்டவர்கள்.
ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியுமா (அதாவது அது போல் நம்மோடு உலாவும்) என்றால் அதைத் தான் அவர்கள் துன்பமெனக் கருதுவார்களோ என்று தோன்றுகிறது. அந்தப் பிறழ்வின் உச்சங்களையே அவர்கள் விடுதலையென நம்புகிறார்கள். எனில் அவர்களை அப்படியே விட்டு விடுவதே வழி என்ற முடிவுக்கு நாமே நகர்ந்து விடுகிறோம்.
மொத்தம் பதினொரு கதைகள்.
திருகுமொழி வடிவம் கொண்ட மொழியமைப்பு பெரும்பாலும் இல்லை. ஓரளவுக்கு அல்லது நன்றாகவே புரிந்து கொள்ள வாய்ப்புடைய எளிமையான மொழிநடைதான். ஆனால் வலுவான கதாப்பாத்திரத்திர வடிவமைப்பு, பழக்கவழக்க, காட்சி வடிவமைப்பு, திடீரென ஏதேனும் ஓர் இடத்தில் இறுக்கி முடிச்சிட்டு அங்கேயே அவிழ்க்கும் நுட்பமான இடங்கள் இவற்றை எப்படியேனும் கண்டு கொண்டால் நரனின் கதைகளுக்குள் பதற்றமின்றி உலாவரலாம்.
1. மானேந்தி கதையில் ஸ்தபதியாக வந்து சிலையைப் புணரும் கணபதி, அவன் வீட்டில் சிலை கண்திறக்காது அம்மா மீது விழுந்து இறந்து போவது இதை இறை நம்பிக்கை உடையோர் தண்டனையாகக்கூட எடுத்துக் கொள்ள முடியும். அவ்வளவு சிலை செய்பவனுக்கு நன்றோ தீதோ அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து யார்?
2. பெண்காது கதை அடைக்கலராஜிற்கு இருப்பது யாரேனும் தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பிரச்சினையாக மாற அவன் முதல் மனைவி ஏன் அப்படி இருக்கிறாள், இவனால்தான் விவாகரத்து வாங்கிக் கொண்டாளா.. இப்போது வந்து கேட்பவள் எவ்வளவு காலங்களுக்குக் கேட்பாள். அவளுடைய தந்தைக்கு ஏன் தான் வேலை செய்த பஞ்சு மில்லின் சத்தங்கள் கேட்கமுடியாது மரணித்துப் போனார். காதுகளும் சத்தங்களும் நம்மை எவ்வளவு ஆக்கிரமிக்கின்றன என்கிற பல கேள்விகளை உருவாக்கிய கதை.
3. தொகுப்பில் உடனே வாசித்த என்னால் மறக்க முடியாத நான் மிகவும் ரசித்த கதை ‘கேசம்’. ஆதியப்பனின் காலில் இருந்த புண்களைக் கண்டு கட்டிய மனைவியே வெறுத்து ஒதுக்குகையில் எங்கிருந்தோ வரும் ஆவுடைத்தங்கம் அந்தப் புண்களைக் குழந்தைகள் போல பாவித்து தன் முடிகளையே இறகாக்கி அவர் இருக்கும், இறக்கும் வரை விரும்பி மருந்திடும் கதை. ஆதியப்பனின் காம உணர்வை மனைவி கணபதியம்மாளிடம் ஏற்படுத்திக் கொள்ள முற்படுகையில் எறும்புகள் கீழிறங்கி ஓடுவது போலவும், அதே காம உணர்வை ஆவுடையிடம் உணரும் போது கடிவாய் இல்லாத கறுப்பு எறும்புகள் லட்சக்கணக்கில் ஓடுவது போலவும் அழகான குறியீடு.
4. சைக்கிள் கடையில் வேலை பார்த்தபடி உடலில் இருக்கும் சிறு ஊனத்தோடு தன் மனதைத் தன்னை விட மூத்தவளான மரியத்திற்கு தந்துவிட்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இறுதியில் அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடையில் வந்து துடைத்து மனதை ஆற்றில் படுத்திக் கொள்கிறான்.
மரியமோ ‘வா, உனக்கு என்ன தேவைனு தெரியும்’ என்று பழனிக்குப் பல வருடங்கள் கழித்துத் தன்னை தந்துவிட்டு எந்தவிதத் தாங்கல்களும் இல்லாது அவள் சைக்கிளைத் தந்துவிட்டு கணவனற்ற பாலையில் கையில் குழந்தையோடு பயணிக்க தொடங்குகிறாள். கிளிஷேவோ என்று யோசிக்கையில் முடிவு நம்மை இல்லை என்று சொல்ல வைத்துவிடுகிறது ’மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்’ கதை.
5. ‘லயன் சர்க்கஸ்’ நலிந்து போன சர்க்கஸ் கூடாரங்களின் நுணுக்கமான உணர்வுகளைப் பேசும் கதை. லீலாவின் முதல் கணவன் காளி, அவனைப் பார்த்துக் கொண்டே லீசாவோடு வாழும் உதவியாளன் மாரீசன், தன் சர்க்கஸ் கூடாரத்திற்காக மாரீசன் கண்முன்னே கிழட்டு அதிகாரி அறைக்குச் செல்லும் கர்ப்பிணியான லீசா, வறுமையின் பிடியிலும் மானத்தை விடாத கணேசன், எதையேனும் செய்யத் துடிக்கும் குள்ளன், இரும்புக் கம்பிகளை விலைக்குப் போட்டு விலங்குகளுக்கு இறைச்சி வாங்கும் சிறுவன், மனம் உடைந்தவன் என்று உணரப்பட்ட காளி குரங்குக்குப் பதிலாகத் தன்னையே தின்னச்சொல்லி சிங்கங்களிடையே அமர்வது என்று மனித வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் அறமும், அற மீறல்களுமாய் மனதை அலைக்கழிப்பு செய்யும் கதை.
6. இதோ எனது சரீரம் கதை.
உணவகம் நடத்திய படி மூன்று ஓவியங்கள் மட்டும் வரைந்து விட்டு கடைசி ஒன்றை விற்காமல் இருப்பதற்குப் பின்புலமாக அகதி வாழ்வின் இரணங்களை அது குறிப்பதாக இறுதியில் கோர்ப்பது நல்ல இணைப்பு. பாட்டி, அம்மா, நாயகி எமி மூவரும் தோற்றமாயை துணையோடு இளைஞனின் புகைப்படத்தைக் காலங்காலமாகப் பரம்பரையாக முத்தமிட்டு ஒயின் அருந்தியபடி அவனது கவிதைகளை வாசித்துக் கிறங்கிக் கிடப்பது. பிணமாக இளைஞனைக் கண்டடைந்து ஆடைகளை அணிவிப்பது, காம உணர்வு கொள்வது. இறுதியில் எமி அவன் புகைப்படம் முன் நிர்வாணமாவது என்று நம்பமுடியாத நம்பவேண்டிய கட்டாயங்களை ஏற்படுத்தும் கதை.
7. ‘ரோமம்’ சிறுகதையில் தீயில் வெந்து கருகிப்போன தாயின் நினைவில் உழன்று அவளின் நீள முடிகளைப்பொசுக்கி நுகர்ந்து அவள் இருப்பது போலான பிரமை கணேசனை எவ்வளவு தூரம் தேடித் தூண்டுகிறது எத்தனை முடிகளைத் தேடி அலைகிறது இறுதியில் மழிக்கும் இடத்தில் முடிகளைத் திருடி அவன் மேல் கிடத்திக்கொண்டு கணேசன் என்னவானான்? குளியலறை முடிகளைத் தேடிப் பொசுக்குவது, ஓர் உணர்வு மனிதனை எவ்வாறு ஆழமாக செல்லச் செல்ல ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
8. ‘மூன்று சீலைகள்.’மூன்று சேலைகளைத் தூக்கிக் கொண்டு ஊரெங்கும் திரியும் ஆசிரியராலேயே பிறழ்வென்று ஊர் சொல்வதாகச் சொல்லப்படும் கணேசன். ஒரே வருடத்தில் குடும்பத்தின் நிகழும் மூன்று சாவு. மூன்று சேலைக்குள் ஒளிந்து நிற்கும் மூன்று உறவுகளை இழந்த வெறுமை. வேறெதுவும் செய்யத் தோன்றாது மூன்று சேலைகளையும் மறுபடி மறுபடி முடிச்சிட்டுத் தொங்கும் முடிவு நோக்கி தன்னை தள்ளிக்கொள்ளும் காசி. உச்சிவெயில் கருநாய் ஊளை என்று குறைவான மாயமும் தொடர்ச் சங்கிலியாகத் தொடர்கிறது. மனதின் புதிர்களை யாரறிவார்?
9. ‘செவ்வக வடிவப் பெண்கள்’ எனும் இறுதிக் கதையும் அதிகப் பாதிப்பைத் தந்தது. பெண்களின் வித்தியாசமான அக உலகம், அபிலாஷைகள், பொம்மையை உயிரிருப்பதாய்ப் பாவித்துத் தழுவுதல், முத்தமிடல், புணர்தல் என்று முற்றிலும் அந்தரங்கமான பெண்களின் வேறொரு உலகங்களை அலசுகிறது.
10. ‘வண்டுகள்’ காம உணர்வை புத்தப் பௌர்ணமி அன்று மலையுச்சியில் புணர்ந்து பூரணியோடு இணைந்து வெளிப்படுத்தும் வகையிலும், பிறகு ஒவ்வொரு ஜோடி வண்டுகளை நசுக்கி நாயகன் தன் உணர்வுகளைச் சொல்வதைக் குறியீடாகவும்,
11. ‘பரிராஜா’ கல்லூரிப் பேராசிரியர் ஆய்வுக்கு ஒவ்வொரு உயிரினமாகப் பயன்படுத்தி மீண்டும் அனுப்பும் விதமாகவும், வேலையில்லாதவர்கள் பணத்துக்காக, பணத்தைப் பார்க்கிற ஆர்வத்தில் ஒவ்வொரு கட்டமாக நகர்வதையும் அவர்களை நகர்த்தி தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதையும் சுருங்கச் சொல்லி நிறைய அர்த்தங்களைத் தேடவும் தரவும் செய்கின்றன.
எல்லாப் பிறழ்வுகளிலுமே ஆண்கள் பெண்கள் என்கிற வேறுபாடற்று நீதியோ போதனைகளோ அற்று அவரவர் உடல் சார்ந்த உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே கையாண்டிருப்பதால் அது ஆபாசக் கதைகளுக்குரிய தோற்றத்தைத் தராமல் மடைமாறி பிறழ்வு அதற்கான காரணிகள் மூலங்கள் தற்போது நடப்பது என்ற அளவில் உருமாறி நகர்ந்து விடுகிறது.
சாதாரணமான மனநிலையில் வாசிக்க முடியாத கதைகள் நிறைய இருக்கின்றன தொகுப்பு முழுவதும். ஆழ்ந்த மனநிலையில் வாசிக்கும் போது மட்டுமே அதன் வீரியங்கள் காணக்கிடைக்கின்றன. நுண்ணுணர்வு சார்ந்த, அதுவும் பாலுறவுகளின் பிறழ்வு சார்ந்த நுட்பமான விஷயங்களை அநாயசமாகக் கையாண்டு இருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!
– சுபி.
நூல் : கேசம் ஆசிரியர் : நரன் வகை : சிறுகதைகள் வெளியீடு : சால்ட் வெளியான ஆண்டு : 2018 பக்கங்கள் : 127 விலை : ₹ 200 நூலினைப் பெற : +91 93 63 00 74 57
சென்னையை சார்ந்த சுபிதா எனும் இயற்பெயரை கொண்ட சுபி; வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக, பள்ளி வயதிலிருந்தே சிறு சிறு கவிதைகள் எழுதி வருகிறார். காலடித் தடங்கள் , தேம்பூங்கட்டி, தோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் ஆகிய தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.