ரிசல் எழுத்தாளர்களின் 21 சிறுகதைகளை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொகுத்துள்ளார். மழை வருவதற்கு முன்பான நுண்ணிய அறிகுறிகளையும், வர்க்க படிநிலையில் கீழாக வைக்கப்பட்டு பகடி கேலிக்கு ஆளான ஒருவர் தன்னுடைய ஊர் மக்கள் விழுந்தடித்து கவனிக்கும்படி நிலை நிறுத்திக் கொண்டதையும் அவருடைய ‘நிலைநிறுத்தல்’ சிறுகதை பேசுகிறது. முன்னுரையில் கி.ராவின் வரிகள் நம்மை கதைகளுக்குள் செலுத்துகிறது. வானம் பார்த்த கரிசல் பூமியில், வறண்ட பூமியில் மக்கள் மனதில் ஈரமிருக்கிறது. அன்பு, பிரியம் அவர்களிடத்தில் இருக்கிறது. அத்தகைய மனிதர்களையே கதைக்குள் தேடி கண்டடைந்தேன். அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் குறுகிய மனம் படைத்தவர்களை வெறுப்பதைத் தவிர நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது. பருவமே பொய்த்து அவர்களைப் பழி வாங்கும்போது, பசியால் பட்டினியால் வர்ண அடுக்கால் அவர்கள் அல்லல்படும் போது நாமும் கலங்கத் தான் முடிகிறது.

‘வெயிலோடு போய்’  – தமிழ்ச்செல்வன்

மச்சான் மீது வைத்த பாசம் கண்டுகொள்ளப் படாதபோதும் அவன் வாழ்க்கையை நினைத்து தவித்து வேதனைப்படுகிறாள் மாரியம்மாள். தனக்கென தனி வாழ்க்கை இருக்கும்போது அவள் இப்படி தன்னை வருத்தி உருகுவது தேவையற்ற ஒன்றாகப் படுகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கூட ஒரு பேட்டியில் இதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

‘மாடுகள்’ – அ. முத்தானந்தம்

ஊருக்கு கணக்கில்லாமல் பொருள் தந்து, கோயில் குளத்திற்கு கொடையளித்து, வறட்சி தீண்டி காடும் போய் நொடிந்து போய் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்த பொன்னையா பிள்ளை வாய்தாவாக வாங்கி வந்த இரண்டு மாடுகள் (தந்தை பழக்கத்திற்காக அளித்த பால் மாடுகளின் வழி வந்தவை) பத்தி செல்லப்படும்போது நம் மனமும் கனக்கிறது. காலத்தினாற் செய்த உதவியை மறந்ததோடு அல்லாமல், பொன்னையாவுக்கு வாழ்வாதாரமாக இருப்பவைகளை ரேஸ் ஓட்டுவதற்காக பத்தி செல்கிறார்கள் பெருமாள் கோனாரின் பிள்ளைகள்.

‘பாழ்’ – கோணங்கி

பூர்வீகத் தோட்டத்தில் கிளைகளைக் கையென விரித்து பட்சிகளை, நாரைகளை அரவணைக்கும் பன்னீரக்காவும் விருட்சங்களும் கிணறும் சுண்ணாம்பு காளவாய் (சூளை) வந்ததும் பாழ் செய்யப் படுகின்றன; வெட்டி வீழ்த்தப் படுகின்றன. பாத்திகளின் ஈர மண் காணாமல் போய் சுண்ணாம்பு புகையும் வெம்மையும் காடுகளை சூழ்கின்றன.

‘சருகுகள்’ – சோ. தர்மன்

வறட்சி காலத்தில், கொலைப் பட்டினியில் மண் வெட்டி அள்ளும் வேலை பெரு வாய்ப்பாகக் கிடைக்க, போராடி வேலையை முடித்து கூலி வாங்கி சங்கன் வீட்டிற்குத் திரும்பும்போது மழை குறுக்கிடுகிறது. உடல் உணர்ச்சியற்று பேச்சு மூச்சின்றி விழுகிறார். மிகுதியான பசியால் நெல்லுக்காக சேவுக்காக காத்துக் கொண்டிருக்கும் குடும்பம் என்ன செய்யும்? மழை மீது நமக்கு வெறுப்பு உண்டாகிறது.

பெய்யென்று நினைக்கும்போது நம்மை நோகடித்து கடைசியில் பேயென பாய்ச்சலில் சாகடிக்கிறது. எழுத்தாளர் கே.ராமசாமியின் ‘நெல்லுச் சோறு’ வாசிக்கும்போது மழை மீது கோபமே வருகிறது.

‘மிச்சம்’ – திடவை.பொன்னுச்சாமி

சமீபத்திய மாற்றங்கள் நெருக்கடிகள் நம்மைப் புரட்டிப் போட்டு புதிதாக மாறியிருப்போம். என்றாவது ஒரு நாள் பழையவைகளின் மிச்ச சொச்சத்திற்குத் திரும்பும் நினைப்பு நமக்குள் இருக்கும். அப்படிப்பட்ட மிச்ச இரும்பு சாமான்களை, விவசாயம் தொடர்பானவற்றை எடைக்குப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கி தின்னும் மகனை அடித்தும் கூட அம்மாவால் தடுக்க முடியவில்லை.

ஜாதி வர்க்க அமைப்பால் வஞ்சிக்கப்பட்ட மனிதர்கள் அதைப் பொறுக்காமல் செய்கிற சிறு நகர்வை ஒட்டி சில கதைகள் நகர்கின்றன. ‘தாலியில் பூச்சூடியவர்கள்’ சிறுகதையில் ரெட்டி வீட்டுப் பெண்கள் மட்டுமே தலையில் பூச்சூட அனுமதிக்கப் படுவதையும், அதனாலேயே தாலியில் பூச்சூடும் நிகழ்வை பள்ளக்குடிப் பெண்கள் மேற்கொள்வதையும் பதிவு செய்கிறார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். அதில் எனக்குப் பிடித்த இடமொன்று உண்டு. சாமியாட்டம் ஊருக்குள் போகும்போது ரெட்டி வீட்டுப் பெண்கள் சாமி கும்பிடக் கையெடுத்து, பிறகு பள்ளக் கடவுள் தானே என்று கை விடுவார்களாம். நாமெல்லாம் ஹிந்துக்கள், அதனால் ஒன்று கூடுவோம் என்கிற அறைக்கூவல்கள் வெறும் மேல் பூச்சு தான். கதை நாயகி தைலி செருப்பு அணிந்து ஊருக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்ததற்கு தண்டனையாக ஊர் மாடுகளை மேய்க்க சொல்கிறார்கள். இந்த இந்திய சமூகம் ஏன் இத்தனை கொடூரமாக இருக்கிறது? கிரிக்கெட் விளையாட்டில் மத ரீதியாக இன ரீதியாக எதிரணி ரசிகன் நம் வீரர்களைத் திட்டினால் கொதித்து எழும் இந்தியா, பல ஆயிரம் ஆண்டுகளாக வர்ண அமைப்பை பேணி வந்து ஜாதி சிஸ்டத்தால் தன் மக்களையே வஞ்சித்து வருகிறது. சுதந்திரம் அடைந்ததாய் நாம் சொல்லிக் கொள்வது பெரிய அபத்தமாகப் படுகிறது.

‘மூளி மாடுகள்’ – சுயம்புலிங்கம்

பெரிய கமுசாரிகள் வேண்டுமென்றே கட்டாமல் அவிழ்த்து விட்ட மாடுகள் நிலமற்றவர்கள் கம்மாய் பரப்பில் சாகுபடி செய்த துவரைக்குள் புகுந்ததும், இப்படியே எத்தனை நாள் பொறுப்பது என்று மாடுகளைப் பத்தி ரோட்டில் நம்மவர்கள் விடுகிறார்கள். விடிந்ததும் பெரிய சண்டை விளையலாம்.

‘பா அ….வம்’ – அழ. கிருஷ்ணமூர்த்தி

விரல் நுனி கறைப்பட்டு சரியான வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் தான் நம் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஆனால் தோற்ற ஆதிக்க ஜாதியினர், ஓட்டு விழாத சேரி குடிசைகளைக் கொளுத்துவது ஜனநாயகத்தை நகைப்புக்கு உள்ளாக்குகிறது. வர்ணம்‌ கேட்டு வாளியில் தண்ணீர் இறைத்து தரும் கிராமத்திற்கு தேர்தல் நடத்த செல்கிறார் ஓர் அதிகாரி. வளைந்து கொடுக்காமல் தேர்தலை நடத்தி இடத்தை விட்டு நகரும்போது இருட்டில் வெளிச்சமாக குடிசைகள் பற்றி எரிவதைப் பார்த்து அதிர்ந்து போகிறார்.

‘ஒத்தை வீட்டுக்காரர்’  (எழுத்தாளர் பொ. அழகுகிருஷ்ணன்) சிறுகதையில் வெங்கடாசலம் ஆசாரியை மாமாவென்று உரிமையோடு அழைக்கும் வேறு சமூகத்தை சேர்ந்தவன் எக்குத்தப்பாக ஒரு சம்பவம் நடந்ததும், அவனின் சகோதரர்கள் ஜாதி ரீதியாகத் திட்டி வெங்கடாசலம் ஆசாரியை அச்சுறுத்துவதை அனுமதிக்கிறான். அடர்த்தியான சமூகமாய் இருக்கும் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, சில நாட்களில் நிலத்தை விற்று கோவைக்கு, மகன் வீட்டிற்குப் புறப்படுகிறார் வெங்கடாசலம். ஊரை எப்போதும் விட்டுத் தராதவர் ஊரை விட்டே வேதனையோடு கிளம்புகிறார். நெகிழ்வுத் தன்மையற்ற ஜாதி அமைப்பு முறை, மாமனென்றோ மச்சானென்றோ அப்பாவென்றோ அழைத்துக் கொண்டால் மட்டும் மாறி விடுமா?

‘மழைக் கஞ்சி’ (எழுத்தாளர் ஜி. காசிராஜன்) சிறுகதை‌ மூலம் விதைப்பு சமயத்தில் மழை வேண்டி செய்யப்படும் சாஸ்திரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

‘கொம்பூதிக் கிழவி’ – ரா. அழகர்சாமி

பொதுநலன் கருதி இளைஞர்களை மழைக்கஞ்சி எடுக்க செய்த நிலமற்ற கொம்பூதிக் கிழவி, அதிலொரு இளைஞனுக்கு கண்ணில் காயம் படும்போது தன் முதலாளி பெண்ணிடம் உதவி கேட்டு ஏமாற்றம் அடைகிறாள். பழி பாவத்திற்கு அஞ்சி தன்னால் இயன்றதை செய்து உதவுகிறாள். குறுகிய மனம் படைத்த அந்தப் பெண்ணின் மகன் மாடுமிதிப் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்டு உடனே பார்க்க புறப்படுகிறாள்.

‘உயிரை விட’ – மேலாண்மை பொன்னுச்சாமி

ஜாதி படிநிலை கருதி தன்னை கீழாக நடத்திய முதலாளி ஒருவனுக்கு கூரைவேய ஏணியேறி உத்தரவு பிறப்பித்து தன்னை சமதியாக, மேலாக உணர்கிறார் பூச்சன். அந்தக் காரணத்தால் தான் உயிரைவிட அவருக்கு அந்த வேலை பெரிதாகப் படுகிறது.

‘சரஸ்வதி பூஜை’ – ச. தனுஷ்கோடி ராமசாமி

இந்தக் கதையை வாசிக்கும்போது சரஸ்வதி பூஜையும் விரதமும் எந்த சமூகத்துக்கானது என்கிற கேள்வி எழுகிறது. உழைக்கும் வர்க்கத்தை சுரண்டுவோருக்கு ஏற்றது அதுவென்று படுகிறது. காலம் காலமாய் எளியவர்களைப் படிக்க விடாமல் செய்பவர்களின் தெய்வம் தானே சரஸ்வதி? விரதம் அனுஷ்டிக்க முருங்கை ஒடித்த சிறுவனை சுருண்டு விழும்படி அடித்த ஆதிக்க ஜாதி முதலாளியின் பெண் கையில் நோட்டை வைத்துக் கொண்டு பாரதியின் வரிகளைப் பாடி செல்வதாக சிறுகதை முடிகிறது.

‘அழகம்மாள்’ – கு. அழகிரிசாமி

தமிழ் சிறுகதை எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் கு. அழகிரிசாமியின், பரவலாக வாசிக்கப்பட்ட சிறுகதை இது. படித்துக் கொண்டிருக்கும் மகன் ஊருக்கு வரும்போது மட்டும் தன்னை அலங்கரித்து கணவரிடம் எரிந்து விழும் அழகம்மாளின் வினோதமான மனோபாவத்தை அழகாக எழுதியுள்ளார்.

‘மண்வெறி’ சிறுகதை (எழுத்தாளர் வே. சதாசிவன்) மட்டும் மனதில் ஒட்ட வில்லை. அம்பலக்காரர் மகளை தூங்கையா குதற இருந்ததைத் தடுத்து வெளுத்து அனுப்பிய நல்லபெருமாள் தேவன், இளம் விதவைப் பெண்ணை கோர்ட் படி ஏற விடாமல் வேறு காரணம் சொல்லி சரணடைந்தானாம். இதுதான் மண்வெறியாம்‌. தற்காப்புக்காக செய்த ஒன்றென்று சட்டத்தின் முன்னால் வாதாடி இருக்கலாம். இதை ஊர் தவறாகப் பேசினால் ஊர் நாசமாகப் போகட்டுமே.


தொகுப்பில் இருக்கும் மீதி சிறுகதைகளும் கரிசல் நிலத்தின் தன்மையை, மனிதர்களை, கஷ்ட காலத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன.

நூல் தகவல்:
நூல் : கரிசல் கதைகள்
பிரிவு:  சிறுகதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர் : கி.ராஜநாராயணன்
வெளியீடு : அன்னம்
வெளியான ஆண்டு : முதல் பதிப்பு 1984  /  ஏழாம் பதிப்பு: ஜூலை 2017
விலை: ₹ 180

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *