காடு சார்ந்த வாழ்வியலையும், சமூகப்பிரச்சனைகளையும் மையமாக வைத்துப் புனையப்பட்ட கதைகளின் தொகுப்பு ”#காடர்”. பெயருக்கு ஏற்ப தனித்துவமான படைப்புதான். பொதுசமூகத்தின் பார்வையில் இருந்து காட்டைப் பார்க்காமல், காட்டின் பார்வையில் இருந்து நிலம் நோக்கிக் கதை சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் பிரசாந்த் வே பிரசாந்த்.
சமகாலத்தில் நாளிதழ்களிலும், தொலைகாட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் காடு சார்ந்துப் பரபரப்பாக பேசப்பட்டு, நாம் அன்றே மறந்த சம்பவங்கள் இக்கதைகளின் பேசுபொருளாக்கி நம் நினைவுகளில் நிறுத்துகின்றது. பொதுச் சமூகத்தின் பார்வையில் கவனம் பெறாத விசயங்களைப் புனைவின் வழியே அச்செய்தியின் குறுக்குவேட்டுத் தோற்றத்தை படம்பிடித்து மாற்றுக் கோணத்தில் காட்டியுள்ளார் பிரசாந்த். ”ஊருக்குள் புகுந்து காட்டுயானை அட்டூழியம்” ”ஆட்கொல்லி மதயானை”, ”ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தை” ”இரண்டுவாரக் குழந்தையைத் தூக்கிச்சென்ற குரங்குகள்”, ”தேயிலைத் தோட்டத் தொழிலாளியைத் தாக்கியக் கரடி” இப்படியான தலைப்புகள் எவ்வளவு அபத்தமும், ஆபத்துமானது என்பதை இக்கதைகள் நமக்கு உணரவைக்கும்.
காடு வணிகமயமாக்கப் படுவதினால் வாழ்விடம் இழக்கும் வன உயிர்களின் வலியை, காட்டில் இருந்து வெளியேற்றப்படும் பழங்குடிகளின் பரிதவிப்பையும் உள்ளார்ந்து உணர்ந்ததின் வெளிபாட்டினை இக்கதைகளில் காணமுடிகின்றன. சில கதைகளின் காட்சி விவரிப்புகள் இனவரைவியல் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது.
காட்டுயானை பேசுவதாக உள்ள கதையில் ஒரு கம்பீரமான காட்டு யானை கும்கியாக்க மாற்றப்படுவதில் உள்ள வலிகளையும் வாசிக்கையில் கண்கலங்காமல் அப்பக்கங்களைக் கடக்கமுடியவில்லை. ”ஊருக்கள் வந்து அட்டூழியம் செய்வதாக” நமக்குத் தொலைகாட்சிகளில் காட்டப்படும் யானைகளின் மிரட்சியான முகம் நம் கண்முன் வந்து செல்லும்.
பழங்குடிகளின் காட்டைப் பற்றி அறிவை விளக்கும் பகுதி மிகவும் நேர்த்தியானவை. ஒரு பழங்குடிக் காட்டில் பயணிப்பதற்கும், பிறர் பயணிப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. நாம் காட்டுப்பாதையைக் கடக்கும் சில நிமிட பயணத்தில் காட்டின் அத்தனை மிருகங்களும் நமது பாதையில் வந்து கண்ணில் பட வேண்டுமென்று நினைப்போம். ஒரு பழங்குடியோ “எங்க பாதையில எந்த விலங்கும் எதிர்படக்கூடாதுன்னு” என்று குலசாமியை வேண்டி நடப்பார். இந்த வேறுபாடு மிக நேர்த்தியாகப் பதிவாகியுள்ளது.
”நாங்க எந்த மிருகத்தையும் தொந்தரவு செய்யறதில்லை, அதுவும் எங்கள தொந்தரவு செய்யலை, நாங்க இணக்கமாக வாழ்கிறோம்”, ”எங்களைக் காட்டைவிட்டு வெளியில போகச் சொல்றீங்க, காட்டுல ஹோட்டல் கட்டுறீங்க, வனவிலங்கும் காட்டுக்கு வெளியில வருது” என்பது போன்ற பழங்குடி வாக்குமூலங்கள் இக்கதைகளின் பெரும்பலம் எனலாம். பழங்குடிகள் காட்டில் இருந்து வெளியேற்றப்படுவதில் உள்ள அரசியல், வனத்துறையினர் ஏற்படுத்தும் நெருக்கடிகள், ஒரு பழங்குடி மாணவனின் நொறுங்கிய உயர்கல்வி கனவு போன்ற கதைகள் உண்மையிக்கு மிக நெருக்கத்தில் இருந்து எழுதப்பட்டவை. காட்டை இழந்த பழங்குடியின் பரிதவிப்பையும் விவரிக்கும் கதையை வாசிக்கையில் கேரளா அட்டப்பாடி பகுதியில் தவறுதலாக அடித்தே கொல்லப்பட்ட ‘மது‘வின் வெள்ளந்தி முகம் இமைகளுக்குள் முள்ளாய் உறுத்தும்.
காடு, அது சார்ந்த வாழ்வியல் பேசும் படைப்புகள் மிக மிகக் குறைவு. அதிலும் தெளிவான சமூக அரசியல், சூழலியல் பார்வையோடு பேசும் படைப்புகளே இன்றைய தேவை. அதை நிறைவேற்றும் வகையில் காடு சார்ந்த சுரண்டல்களுக்கு எதிரான உணர்வு(அறிவுப்)பூர்வமான ஆவணமாகக் ‘காடர்’ உள்ளது. வாசிப்போம், பரவலாக்குவோம்.
– பகத் சிங் – எழுத்தாளர்
‘வாழும் மூதாதையர்கள்’ நூலாசிரியர்
நூல் : காடர்
பிரிவு : சிறுகதைகள் | சூழலியல்
ஆசிரியர் : பிரசாந்த்.வே
வெளியீடு : எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு : நவம்பர் 2020
விலை : ₹ 130