அரவிந்த் மாளகத்தி கன்னடமொழியில் மிகச்சிறந்த கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிதைத்தொகுப்பு, சிறுகதைகள், நாவல், கட்டுரை தொகுப்பு, விமர்சனங்கள், நாட்டுப்புறவியல் என்று அவர் இயங்காத இலக்கிய வகைமையே இல்லை எனலாம். கவர்ன்மெண்ட் பிராமணன் என்ற இந்த நூல் முதல் தலித் சுயசரிதை என அறியப்படுகிறது. அறிவுத்துறையில் செயல்பாட்டாளராக உள்ள ஒருவரின் இளமைக்காலம் இத்தனைக் கடினமானதாக, வலியும், வேதனையும் நிறைந்ததாக இருந்தது வருத்தம் தருகிறது. இந்தியாவைப் பிடித்திருக்கும் தீராத நோயான சாதி எத்தனை உயிர்களை இழிவு செய்திருக்கிறது என்பதை நினைக்கையிலேயே ஆத்திரம் எழுகிறது.
இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள். எழுத்துத் துறையில் பல்லாண்டுகளாக சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனக் கட்டுரைகள் என பன்முகத் தன்மையுடன் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர். 2019 ஆம் ஆண்டிற்கான விளக்கு அமைப்பின் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கன்னடத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து, 1998 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூல், பேசுகின்ற சமூக அவலம் இன்றைக்கும் பொருந்திப் போவது தான் துரதிர்ஷ்டம்.
வலி மிகுந்த பால்யம்
பாவண்ணன் தனது முன்னுரையில்,
“வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றி கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை இப்படி வதைக்க வேண்டும்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? இந்தக் கேள்விகளால் அலைக்கழிக்கப்படாத மனமே இருக்க முடியாது”
என்று கூறுகிறார். நூற்றாண்டுகளாக, நமது தேசத்தில் பிறப்பினால் இழிவு செய்யப்படும் சமூகத்தினரின் அவலம், தழும்புகளாக அவர்கள் உடலில் முழுவதும் நிரம்பி இருக்கிறது. அவ்வாறான இழிவுகளை சுமந்து வளர்ந்த ஒரு சிறுவன், வைராக்கியத்துடன் படித்து, வளர்ந்து, தன் எழுத்தின் வழியாக தன் தழும்புகளை வாசகருக்கு திறக்கிறான். அது நமக்கு அதிர்ச்சி தருகிறது. அத்தழும்புகளை உருவாக்கியவர்கள் மேல் அருவருப்பும், ஆத்திரமும் ஒருங்கே எழுகின்றன. ஒரு வேளை நல்ல உணவை உண்பதற்கு திருமண வீட்டில் கூட்டமாகக் காத்து கிடப்பதும், அங்கே பரிமாறுபவர்களின் எள்ளலை தாங்கிக்கொண்டு அவமானம் சூழ உணவை அருந்துவதும், அதற்கான கண்காணிப்புகளும் ஒரு மனிதனின் சுயத்தை எத்தனை காயப்படுத்தும் என்பதை முதல் அத்தியாயத்திலேயே விவரிக்கிறார். பிணத்தின் மீது இறைக்கப்படும் சில்லறைக்காசுகளை பொறுக்கி, அதனைக் கொண்டு பசியாறுவதும் அவலம். பள்ளியை சுத்தம் செய்ய சீக்கிரம் வரவில்லை என்பதற்காக ரத்தம் கசியக்கசிய அடிக்கும் ஆசிரியர்களின் வக்கிரம். ஊராரின் கழிவுநீரில் துணிதுவைத்து, குளித்து வாழ வேண்டிய இழிநிலை. ஒரு சின்னஞ்சிறுவனின் பால்யம் இத்தனை வலியுடன் அமைந்ததற்கு நாம் அனைவருமே மெளனக்காரணிகள் தான் என அழுத்தமாகத் தோன்றுகிறது.
துரத்தும் சாதி அடையாளம்
கல்வி பயிலும் இடத்தில் சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்படுவது அம்பேத்கர் காலம் துவங்கி இன்னும் தொடர்கதையாக தானே இருக்கிறது. அரவிந்த மாளகத்தி மட்டும் விதிவிலக்கா என்ன? உட்கார்ந்து படிக்க இடமின்றி தெருவிளக்கின் தயவில் படித்தால், அதற்கும் இடையூறு வருகிறது. பட்டியல் இனத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு அரசின் உதவி கிடைப்பதால், “கவர்ன்மெண்ட் பிராமணன்” என்று ஆதிக்கசாதி மாணவர்கள் இவர்களை கேலி செய்கிறார்கள். அந்த அவமானத்தை விழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
கல்லூரி வாழ்க்கையில் காதல் வருகிறது. காதல் மனசை மட்டுமா பார்க்கிறது. பழகும் வரை பார்க்கவில்லை. திருமணப்பேச்சு வரும் போது பார்க்கிறது. காதலின் அலைக்கழிப்பில் உயர்கல்வி வேலைகள் தடைப்படுகின்றன. பிரிவிலிருந்து மீண்டெழுவது பெருந்துயரமே. அரவிந்த மாளகத்தி அத்துயரத்தைக் கடக்கிறார்.முற்போக்கு பேசும் போலியான நபர்கள், தனிப்பட்ட வாழ்வில் சாதியை இறுகப்பற்றிக் கொண்டிருப்பது இன்னும் காயப்படுத்துகிறது.
மீறி எழுதல்
ஆகஸ்ட் 15 1947 விடுதலை நாளில், எல்லாத் துயருக்கும் விடுதலை கிடைத்தது என்ற நம்பிக்கையுடன் இனிப்பு விநியோகிக்கும் ஆசிரியரான அரவிந்தின் அப்பா. தொடரும் துயரங்களைக் காணாமல் இறந்து போகிறார். அரவிந்த தன் முயற்சியால் கல்வியை ஊன்றுகோலாக்கி, சமூகத்தில் செயலாற்றுகிறார். தன் சுயசரிதையை நடுத்தரவயதிலேயே எழுதிவிட நேர்ந்ததன் தேவையையும் சேர்த்தே சொல்கிறார். மனம் திறந்து தன் தழும்புகளை முன் வைக்கையில் அது சமூகத்திற்கு சில வலிகளை புரிய வைக்கும் என்று நம்பியிருக்கிறார். அது உண்மையும் கூட. இவரின் சுயவரலாறு இது போன்ற அடக்குமுறைகளை சந்தித்து வளரும் இளையவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒளியாக இருக்கும். அவரின் உணர்வுகளை நமக்கு உயிரோடு தமிழில் தந்த பாவண்ணனுக்கு சிறப்பான நன்றிகள்.
நூல் : கவர்ன்மென்ட் பிராமணன்
பிரிவு : தன்வரலாறு | மொழிபெயர்ப்பு
ஆசிரியர் : அரவிந்த மாளகத்தி (மூலம் - கன்னடம்)
தமிழில் : பாவண்ணன்
வெளியீடு : விடியல் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1998 (விடியல் பதிப்பகம்)
மறுபிரசுரம்: 2015 (காலச்சுவடு)
பக்கங்கள் : 160
விலை : ₹ 145
Kindle Edition: