ஒரு கணவனை இழந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் மனைவியை இழந்த ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
உலகமே கொண்டாடக்கூடிய இசைத்துறையில் ஆஸ்கர் நாயகனாக வலம் வரும் திலீப் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை குறித்த இந்த நூலை வாசிக்கும் போது தன் கணவனை இழந்து, தனது ஒன்பது வயது மகனுடன் வாழ்க்கையை மீட்கப் போராடிய ஒரு அன்னையின் வலிகளும் அந்த வலிகளுக்கு கிடைத்த மருந்தாகவே ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சாதனைகளையும் பார்க்கிறேன். இயக்குனர் விஜய் மகேந்திரன் மின்னம்பலம் டாட் காமில் தொடராக எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து அளித்திருக்கும் இந்த நூல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடிய, நம்பிக்கையை அளிக்கக் கூடிய ஒரு நூலாக இடம்பிடிக்கும்.
தனது பதினோரு வயதில் குடும்பத்தின் தலைமை ஏற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் ஒரு சிறுவன் தன் தாயின் வழிநடத்துதலோடு தன் தந்தை விட்டுச் சென்ற இசைக்கருவிகளின் துணையோடு இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பது., சாதனை படைக்க எதுவுமே தடையில்லை என்பதை ஆழமாக புரிய வைக்கிறது.
பதினாறு பகுதிகளாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரைத் தொகுப்பில் சில துளிகளை மட்டும் நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் தன் தந்தை இறந்த பிறகு அவர் விட்டுச்சென்ற இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு குடும்ப சூழல்களை எதிர்கொண்டு வந்த நேரத்தில்தான் ரஹ்மானுக்கு அவரது அன்னை இசைக்கருவிகளை கற்றுக் கொள்ளும்படி ஊக்கம் அளிக்கிறார் . அவ்வாறு கற்றுக்கொண்ட இசையை வைத்து ரஹ்மான் தனது இளம் வயதிலேயே பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றுகிறார். அந்த வகையில் அவர் இளையராஜாவிடம் பணியாற்றிய முதல் பாடலின் போது ரஹ்மான் சில நோட்டுகளை தவறாக வாசிக்க அதை பார்த்த இளையராஜா தன் கரங்களால் ரஹ்மானின் விரல்களைப் பற்றி சரியாக இசைக்க உதவியதாகக் குறிப்பிட்டிருப்பது இளையராஜாவின் பெருந்தன்மையையும் ஏ.ஆர்.ரஹ்மானின் திறமையையும் எடுத்துரைக்கிறது.
மேலும் இயக்குனர் விஜய் மகேந்திரன் இந்த கட்டுரையில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி அறியாத பல தகவல்களை தொகுத்து கொடுத்திருப்பது ஒரு இசையமைப்பாளர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த ஒட்டுமொத்த வலிகளையும், இனிமையான தருணங்களையும், தேடல்களையும் கண் முன்னே நிறுத்துகிறது. முதல் படமான ரோஜாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை நான் அறிந்து கொண்ட தருணத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். ரோஜா படம் 1992 ல் வெளிவந்த போது எனக்கு ஒன்பது வயது. எனது அப்பா ரேடியோ, டேப் ரெக்கார்டர் ஆகியவற்றைப் பழுது பார்க்கும் பணியை ஓய்வு நேரத்தில் செய்து வந்ததால் எங்கள் வீட்டில் எந்த நேரமும் பாடல்கள் ஒலித்த வண்ணமே இருக்கும் . பெரும்பாலும் எம்.எஸ்.வி பாடல்களும் இளையராஜாவின் பாடல்களும் அப்பாவின் விருப்பமாக இருக்கும். இந்த சூழல்தான் எனக்கு பாடல்களை கேட்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நான் எப்போதும் விடுமுறைக்குப் பெரியப்பா வீட்டிற்கு செல்வது வழக்கம். அங்கு எனது அண்ணன் புதிதாக வரும் அனைத்து இசைகளையும் விரும்பிக் கேட்கும் பழக்கம் உடையவனாக இருந்தான். அவன்தான் எனக்கு விடுமுறை நாட்களில் கர்நாடக சங்கீதத்தை அறிமுகப்படுத்தியிருந்தான். மேலும் பழைய பாடல்களை அவன் விருப்பமாகக் கேட்கும்போது நானும் ரசித்துக்கொண்டிருப்பேன். இப்படித்தான் நித்யஸ்ரீ மகாதேவன் உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் குரல்களை நான் கேட்டுப் பழகியிருந்தேன். அந்த முறை விடுமுறைக்கு சென்றிருந்தபோது ரோஜா படத்தில் வெளிவந்த “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது “என்ற பாடல் தொடர்ந்து வீட்டுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. எம்எஸ்வி இளையராஜா இசையைக் கேட்டுப் பழகியிருந்த காதுகள் ஒரு புது இசையை உணர்ந்தன. ஆனால் அந்த வயதில் அதை பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த பாடலின் மேல் இருந்து கொண்டே இருந்தது.
பிறகு பள்ளியின் ஆண்டு விழாவில் நடனமாடத் தேர்வு செய்யப்பட்ட பாடலான “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ” பாடல் நடன விரும்பியாக இருந்த என் கால்களுக்குத் தீனியாக இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த இந்தி படமான ரங்கீலா படத்தில் வரும் பாடல்களைக் கேட்கும்போது எனக்குள் ஏதோ பிடித்து என்னை ஆட்டுவிப்பது போல ஆடிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். பிறகு வந்த நாட்களில் நடனமாடத் தேர்வு செய்த பாடல்கள் அனைத்துமே ஏ.ஆர்.ரஹ்மான் உடையதாக இருக்கும். அந்தப் பாடல்களில் இடம்பெற்றிருந்த துள்ளல் இசை ஒரு போதையைப்போல் எங்களுக்குள் இறங்கியிருக்க வேண்டும். சில சமயங்களில் கேசட் டேப் ரெக்கார்டரில் சிக்கித் தேய்ந்தே போகுமளவு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியிருந்தது. அதன் பிறகான தேடல்களில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையை முழுமையாக அடையாளம் கண்டேன். பம்பாய் படத்தில் வெளியாகியிருந்த “அந்த அரபிக்கடலோரம்” பாடலுக்கான நடனத்தில் முதல் பரிசு பெற்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை கேட்டு வியந்திருக்கிறேன். விஜய் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளதைப் போல “வந்தே மாதரம்” ஆல்பம் வெளியானபோது ஒரு இனம்புரியாத உணர்வு தூண்டப்பட்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நாட்டுப்பற்று மேலோங்கியதை மறுக்கவே முடியாது. இசை என்பது ஒருவருக்குள்ள உணர்வுகளை மகிழ்ச்சியாகவும், சோகமாகவும், வீரமாகவும், வெளிப்படுத்திவிடும் அல்லது தூண்டிவிடும் என்பதற்கு ஏ ஆர் ரகுமானின் இசை ஒரு மிகப்பெரிய உதாரணம். இந்த நூல் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றிய அனைத்து மொழிகளிலான திரைப்படங்களைப் பற்றியும், இயக்குனர்களை பற்றியும், பாடல் ஆசிரியர்களைப் பற்றியும், பாடகர்களை பற்றியும் என அவரோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் தொட்டுச் சென்றிருப்பதை எழுத்தாளரின் ஆர்வத்தையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் கூட இந்தத் தொகுப்பை படிப்பதன் மூலம் அவருக்கு நெருக்கமானவர்களாக தங்களை உணர முடியும். இந்த நூலில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள சில பாடல்கள் நம் அனைவர் மனதிலும் தேசியகீதங்களைப் போலவே இன்னும் இருக்கின்றன. “சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை ” என்ற பாடல் இசையைக் கேட்டவர்கள் சிறகை விரிக்காமல் இருந்திருக்கவே முடியாது. “போறாளே பொன்னுத்தாயி” என்ற பாடலைக் கேட்ட யாரும் அழுகாமல் இருந்திருக்க முடியாது.
கவிப்பேரரசு வைரமுத்து , வாலிபக் கவிஞர் வாலி ஆகியோர் வரிசையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக வரிகளைச் சமைத்தளித்த பழநிபாரதி அவர்கள் எழுதிய சில பாடல்களில் “நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்” பாடல் இன்றும் நம் விருப்ப பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியர்கள் தேன்மொழி தாஸ், கபிலன் ஆகியோரின் அனுபவப் பகிர்தலும் ரஹ்மானிடம் இருந்த தேடல் மனப்பான்மையையும் புதியவர்களை அங்கீகரிக்கும் பண்பையும் நமக்குச் சொல்லிச் செல்கின்றன.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பயணத்தில் அவர் அறிமுகப்படுத்திய மற்றும் அவருடன் பணியாற்றிய அவரது ஆர்கெஸ்ட்ராவில் அனைத்து இசைக்கலைஞர்களும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை ஏ.ஆர்.ரஹ்மான் வேலைகளுக்கு நடுவிலும் கே.பாலசந்தர் அவர்களின் “பார்த்தாலே பரவசம்” படத்திற்கு இசை அமைத்த நினைவுகளை பாலச்சந்தர் பாராட்டி நினைவு கூர்ந்திருப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் நன்றி உணர்வை ஆளுமைகளிடம் அவர் கொண்டிருந்த மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.
அடுத்தடுத்து பல படங்களில் அமைந்த பிரபுதேவாவுடன் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைவரையும் ஆட்டம் போட வைத்திருந்தன. மின்சார கனவு படத்தில் ரஹ்மான் இசையில் வெளிவந்த “தங்கத் தாமரை மகளே” என்ற பாடல் இசைக்காகவும், எஸ்.பி.பி அவர்களின் குரலுக்காகவும், காட்சிகளுக்காகவும், பெரிதும் ரசிக்கப்பட்டது.
இசைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றிய மின்மினி, உன்னி மேனன், சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீத் மால்குடி சுபா, ஸ்ரீநிவாஸ், ஹரிஹரன் நரேஷ் ஐயர், நித்யஸ்ரீ மகாதேவன் அனுபமா, வசுந்தரா, சங்கீதா சஜித் சுக்விந்தர் சிங், சங்கர் மகாதேவன் ஆகிய பாடகர்களின் குரல்கள் ரகுமானின் இசையோடு சேர்ந்து நம்மை மயக்கி வைத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
ரஹ்மான் எப்படி தமிழ் ரசிகர்களைத் தனது இசையால் மயக்கினாரோ அதே போல இந்தியிலும் இவரது இசைக்கு மயங்காதவர்கள் இல்லை சொல்லப்போனால் இந்தியில் இளையராஜா அவர்கள் தவறவிட்ட இடத்தை ரகுமான் சரியான தனது திட்டமிடலாலும் உழைப்பாலும் சாத்தியப்படுத்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
ரஹ்மான் இந்தியில் அறிமுகமான ரங்கீலா படத்தின் பாடல்களை கேட்டு நடனமாடாதவர்கள் இருந்தால் அதிசயமே. சக கலைஞர்களை பாராட்டுவது, கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்ப்பதும், நன்றியை மறக்காமல் இருப்பது, பாராட்டுகளையும் வெற்றிகளையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்து வருவது,புதிய திறமைகளைத் தேடி வாய்ப்பளிப்பது போன்ற செயல்களே ரஹ்மானின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணிகள். ஆம். அதுதான் இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தருணம் ஸ்லம்டாக் மில்லினருக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று மேடையில் தமிழை உயர்த்திப் பிடித்தார். இத்தனை புகழ்பெற்ற ரகுமான் பொதுவாக இசை அமைப்பதற்கு இரவையே தேர்ந்தெடுத்தார் என்று விஜய் மகேந்திரன் குறிப்பிடுவது ஒரு படைப்பாளி ஒரு படைப்பை ஆக்குவதற்கான சரியான தருணமாக தேர்ந்தெடுப்பது இரவைத்தான் என்பது புலப்படுகிறது.
மேலும் தனது பல வெற்றிகளுக்குப் பிறகு தான் தனது அப்பாவுடன் வாழ்ந்த பழைய வீட்டிற்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் அங்கிருந்த தனது நண்பரின் தாயாரிடம் நடந்த உரையாடலுக்குப் பிறகு இசையை தேர்ந்தெடுப்பவர்களுக்கான ஒரு தனி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் தொடங்கப்பட்ட சொல்லப்படும் கே எம் மியூசிக் கன்சர்வெட்டரி மூலம் பல மாணவர்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்பது ரகுமானின் தொலைநோக்கு மனதிற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது.
இப்படியாக தனது இளம் வயது கடினங்களை, வலிகளை தனது தாயான கரிமாவின் துணையுடன் வெற்றிப்பாதையாக மாற்றிக்காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான் இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடியாக இருப்பார் என்பதிலும் மேலும் உலகெங்கிலும் இந்தியாவின் புகழை எதிரொலிக்கச் செய்வார் என்பதிலும் எந்தவிதமான ஐயமுமில்லை.
இப்படியாக ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டி ஒரு தொகுப்பாக இந்த சமூகத்திற்கு அளித்திருக்கும் இயக்குனர் விஜய் மகேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
– அம்பிகா குமரன்
நூல் : | ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம் |
பிரிவு : | கட்டுரைகள் |
ஆசிரியர்: | விஜய் மகேந்திரன் |
வெளியீடு: | புலம் வெளியீடு |
வெளியான ஆண்டு : | டிசம்பர் 2016 ( முதற் பதிப்பு) , ஜனவரி 2021 (ஐந்தாம் பதிப்பு) |
பக்கங்கள் : | 150 |
விலை : | ₹ 120 |
தொடர்புக்கு: | 98406 03499 |
Buy on Amazon |
நூலாசிரியர் குறித்து:
விஜய் மகேந்திரன்
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலை தனது கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் ,1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு ''இருள் விலகும் கதைகள்'' என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வந்த இவர், இப்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார்.
அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ''நகரத்திற்கு வெளியே'' இவரது சிறுகதை தொகுப்பு. 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ''நகரத்திற்கு வெளியே'' பெற்றுள்ளது. இந்த தொகுப்பிலுள்ள சில கதைகள் உயிர் எழுத்து கதைகள் , சிக்கிமுக்கி கதைகள் , மதுரை சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த விமர்சகருக்கான ''படி''அமைப்பின் விருதையும் பெற்றுள்ளார். . இவரது ''ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம் ''புத்தகத்தை மின்னம்பலம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதுவரை இந்த நூல் நான்கு பதிப்புகளை கண்டுள்ளது. இவரது கட்டுரை தொகுப்பு ''சாமானிய மனிதனின் எதிர்குரல்'' இவரது நாவல் ''ஊடுருவல்'' ஆகியனவும் வெளிவந்துள்ளது.
இணையத்திலும், இதழ்களிலும் நூல் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவரது தொடர் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ''அசோகமித்திரன் படைப்பூக்க விருது ''கொடுத்துள்ளது.