சீனாவைத் சேர்ந்த “மா ஜியான்” எழுதிய நூல் இந்த “நாக்கை நீட்டு”
ஐந்து கதைகள் கொண்ட இந்த சிறுகதை தொகுப்பில்.. திபெத் என்ற பீடபூமியின் வாழ்வியல்… மிக அப்பட்டமாக அதே நேரம் மிக நுட்பமாக… அதன் எதிர்பக்கத்தை முன்னிறுத்துகிறது. இந்த நூலுக்காக மா ஜியான் சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். அவரின் அனைத்து நூல்களுக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டது. முழு புத்தகத்தையும் படித்து முடிக்கையில் தடை செய்யப்படும் அளவிற்கு அப்படி ஒன்றும் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை அங்கு பௌத்த மதம் அம்பினால் நெய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ.
எத்திராஜ் அகிலன் இந்த நூலை மொழி பெயர்த்திருக்கிறார். அற்புதமான வேலையை மிக நுணுக்கமாக செய்திருக்கிறார். கண்டிப்பாக
மா ஜியானின் மொழி நடைதான் என்று மனம் நம்புகிறது. அத்தனை கனக்கச்சித வேலைப்பாடு.
சீனாவில் தடை செய்யப்பட்ட நூல்….. அதுவுமில்லாமல் புத்தகம் திபெத்தைப் பற்றியது. சிறு வயதில் இருந்தே திபெத் மீது இனம் புரியாத ஆசை இருந்தது. தேடல் இருந்தது. மலைகளின் நடுவே வாழ்தலைக் குறித்த ஒரு ஆசுவாசம் என்னுள் ஊர்ந்து கொண்டே இருந்ததால் இந்த “நாக்கை நீட்டு” கைகள் நீட்டி என்னை அள்ளிக் கொண்டது.
“நாக்கை நீட்டு”
தலைப்பே எதுவோ சொல்கிறது. என்ன சொல்கிறது என்று யோசிக்கையில்…..அவரே பின்னுரையில் சொல்கிறார். ஒரு மருத்துவரிடம் சென்றால் நாக்கை நீட்டி காட்டத்தான் வேண்டும். அது போல தான்….இந்த வாழ்வின் தன்மைகள் நம்மை நாக்கை நீட்ட சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்கிறது….என்று கனத்த பயங்களின் நடுவே மிக வருத்தத்ததோடு சொல்கிறார். வேட்டையாடப்படும் விலங்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு ஓடிப் பார்க்கும் என்றுதான் பின்னுரையில் தன்னுரையை ஆரம்பிக்கிறார். அப்படி சீன அதிகார வர்க்கத்திடம் இருந்து வெளியேறி மூன்றாண்டுகள் கழித்துதான் அவரின் கற்பனைக் கெட்டிய தேசம் திபெத்துக்கு செல்கிறார். அவரும்.. மிக அற்புதமான அனுமானத்தோடு தான் திபெத்துக்கு செல்கிறார். ஆனால் திபெத் நாம் மனதில் காணும் வெளியைக் கொண்ட நாடு அல்ல. அது இன்னமும் சீனாவின் கிடுக்கிப் பிடிக்குள்தான் தன் கழுத்தை சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது…என்பது அங்கு சென்ற சில நாட்களிலேயே அவரால் புரிந்து கொள்ள முடிகிறது.
50 களிலேயே சுதந்திரம் பெற்று விட்ட பிறகும்.. அடிமைப் படுத்தப்பட்டவனின் ஆங்காரம் இன்னும் அங்கே வேறு வேறு வழிகளில்… விதிகளில்…வெளிப்படுவதை அங்கே வீதிகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த போது கண்டு கொண்டதாக சொல்கிறார் மா ஜியான். மிக நுட்பமாக விடுதலை மனதின் சிறகைத் தேடித்தான் அங்கு அலைகிறார். தொலைவில் இருந்து பார்க்கையில் அந்த திபெத் பீடபூமி ஒரு வித மயக்கம் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஆனால்.. அங்கு சென்றால்… அங்கிருக்கும் காட்சிகளும் அரங்கேற்றங்களும் முற்றிலும் வேறு மாதிரியானவையாக இருக்கின்றன. திபெத் பற்றிய கற்பனை எல்லாவற்றையும் மலையில் இருந்து உருட்டி விடும் பாறைகளின் சந்துகளாக நசநசத்துக் கிடக்கிறது திபெத்தின் வாழ்வு. அதன் குறுக்கு வீதிகளில் அலைகையில் ஒரு சராசரி மனிதனாக திபெத் நடுவே தனிமையில் நிற்கையில் அதன் வெறுமை அவரை அதிகம் அச்சுறுத்தியதாக கூறுகிறார். தூர தேசங்கள் தூரத்தில் இருக்கும் வரை தான் சுவர்க்கம். அருகே….மிக அருகே.. அது அதன் நிஜத்தை நாக்கை நீட்டி காட்டும் என்பதுதான் உண்மை. ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற நெருக்கடியான மன சுமையோடு அங்கிருந்து வெளியேறுகிறார். பிற்பாடு தான் இந்த நூலை எழுதுகிறார்.
ஐந்து கதைகள். ஐந்தும் சிக்கலான விஷயங்களை பற்றித்தான் பேசுகிறது.
திபெத்தில் மனிதர்கள் இறந்தால் புதைக்கவோ எரிக்கவோ மாட்டார்கள். மூன்று நாட்களுக்கு வீட்டில் வைத்திருப்பார்கள். பிறகு துண்டு துண்டாக வெட்டி எலும்புகளை மாவாக அரைத்து ரொட்டி மாதிரி செய்து கழுகுக்கு போட்டு விடுவார்கள். பிண்டம் கூட இந்த உலகின் அடுத்த உயிர்க்கு உதவ வேண்டும் என்பது தான் காரணம். மூடி இருந்த மலை முகடுகளில் நடுவே… பௌத்த மதத்தின் வழியாகவும் இப்படி ஒரு சம்பிரதாயம் உருவாகி இருக்கலாம். திபெத்தியர்களுக்கு மரணம் என்பது துக்கமல்ல. அது வாழ்வின் இன்னொரு படிநிலை தான் என்கிறார் ஆசிரியர்.
அந்த சவ அடக்கத்துக்கு விண்ணடக்கம் என்று பெயர்.
அந்த விண்ணடக்கத்துக்கு ஆளான பெண்ணுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவளுக்கு வயதான ஒருவரை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அங்கே ஒரு குட்டி காதல் கதை தன்னை தேடிக் கொண்டு ஒரு கழுகை போல அலைகிறது. இந்தக் கதையை அந்த காதலன் குடித்த ஒரு நள்ளிரவில் மா ஜியானிடம் புலம்புகிறான். அதன் பொருட்டு தான் அவளின் விண்ணடக்கத்தைக் காணும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் மரணம் தான் அமைதியைத் தருகிறது என்று அவருக்கு புரிகிறது. மானுட சம்பிரதாயங்களைத் தாண்டி ஒரு கழுகின் பசிக்கு இந்த பிண்டங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்ற மறுபுரிதல் அவரை அசைத்து தான் பார்க்கிறது. இவ்வித ஞானத் தத்துவங்களின் வழியே ஒரு வகை நடுக்கத்தை அவர் உணர்கிறார். நடுக்கங்கள் வழி பிறக்கும் தெளிவுக்குள் இருளும் ஒளியும் சமம் என்ற கோட்பாட்டை தூரத்தில் கத்தி கத்தி சொல்லிப் பார்க்கின்றன விண்ணடக்கத்தில் கலந்து கொண்ட கழுகுகள்.
துரோல்முலா ஏரியின் புன்னகை என்றொரு கதை. அட்டைப்படத்தில் வரும் இருகாலணிகள் இந்தக் கதையைதான் அந்த ஏரியை சுற்றி நடந்து பார்க்கிறது. அது திபெத்துக்கே உண்டான வடிவம். இந்த கதைகள் முழுக்க பயணங்களால் ஆனவை என்ற சிம்பாலிசம் தான் இந்த அட்டைப்பட செருப்பின் ஓய்வு.
அடுத்த கதை தனக்கும் தன் தாய்க்கும் பிறந்த மகளோடு தான் பிற்காலத்தில் செய்த கலவியின் பாவத்திற்கு பரிகாரம் தேடும் ஒரு நாடோடியின் கதை. ஒரு கட்டத்தில் அந்த நாடோடியின் கூடாரத்தில் மா ஜியான் தங்க நேரிடுகிறது. அவனிடம் பேச பேச உறவுமுறைகளின் சிக்கல்… மானுட முகத்தின் பின் பக்கம் என்று வாழ்வின் விருட்சம் வேறு மாதிரி விரிவதை மிக அச்சத்தோடு உள் வாங்குகிறார். அவன் விடாமல் தன் பாவத்தை சுமந்து கொண்டே அலைகிறான். பாவமும் அவனை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. எளிமையின்.. பலவீனத்தின் சாபத்தை அவன் பெற்றுக் கொண்டே இருக்கிறான். பலவீனமானவர்களை பலம் கொண்டு பயன்படுத்திக் கொள்தலில் நீளும் தவிப்பு அவனுள் அடங்க மாட்டேன் என்கிறது. அவன் அழுகிறான். அழுது அரட்டுகிறான். அவனின் தாயும் மகளும் அவன் பாதைகளில் முற்களாகி நெளிகிறார்கள். ஒரு முக்கோணமும் அல்லாத வட்டமும் இல்லாத பிடியில் அவன் திரும்ப திரும்ப வெளி வருவதும் உள் சென்று மூள்வதுமாக கதை முடிகிறது.
அடுத்து….. காற்றில் உலர்ந்து போன தனது காதலியின் உடலைக் குகை கதவில் தொங்க விட்டிருக்கும் ஒரு வெள்ளி ஆசாரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரின் மூலமாக அந்த கதை விரிக்கும் சிறகு அபாரமானது. தனது குருவின் மனைவிக்கும் தனக்குமான காதலை அவர் சொல்லிக் கொண்டே செல்கிறார். அதை அறிந்த குரு ஒரு கட்டத்தில் அவளை தன்னிடமே விட்டு விட்டு சென்று விட்டதற்கு எந்த வருத்தமும் இல்லாத தவிப்பும் இல்லாத ஒரு வகை வெறுமை அவரை சூழ்ந்திருக்கிறது. அவர்கள் செய்த கொண்டிருந்த பொன் மகுடத்தை திருடி விடலாம் என்று அவள் யோசனை கூறுகிறாள். அவர் வேண்டாம் என்கிறார். ஆனாலும் அவள் முயற்சிக்கிறாள். அந்த முயற்சியில் அவள் மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறாள். வெள்ளி ஆசாரி தப்பித்துக் கொள்கிறார். ஆனால் அவளின் உடலை அவர் தன் வீட்டில் ஒரு ஆணியில் தொங்க விட்டிருக்கிறார். யாருக்கும் தெரியாத ஒரு மலை உச்சி வாழ்வு வாழ அவள் தேவை என்பதோடு கதை முடிகிறது.
புத்த மதத்துக்கான தீட்சை பெரும் சடங்கு தொடர்பான கதை ஒன்று…… என்று திபெத் பீடபூமியில் நிகழும் கதைகளும் காட்சிகளும் மா ஜியானின் புனைவும் என்று கலந்து கட்டி.. நம்மை ஒரு வித மாய உலகத்துக்கு கடத்தி செல்கிறது புத்தகம்.
புத்தரின் மறுபிறவிக்காக ஏற்படும் தவிப்பும். மறுபிறவியில் ஏற்படும் தவிப்பும்… அங்கே நிர்வாணம் கொள்ளும் முக்கிய பங்கும்…சொல்லிலடங்காதவை. நிர்வாணம் பூத்த பிறகு அவள் படும் பாடுகள் அச்சுறுத்தக் கூடியவை. மனதின் நிர்வாணத்தை உடலின் நிர்வாணத்தோடு போர்த்தி விட்டு பிக்குகள் செய்யும் தகுடுத் தத்தங்கள் நம்மை அடியோடு சிந்தனையை மாற்ற சொல்கின்றன.
எதுவெல்லாம் நிஜம் என்ற கேள்வியில் எதுவெல்லாம் புனைவு என்ற பதில் காட்டிக்கொடுக்கவுமில்லை…. கண்டெடுக்கவுமில்லை. எல்லாமே… இருக்கும் கட்டுக்கோப்புகளை முன்கூட்டியே செய்திருக்கும் கட்டமைப்புகளை களைந்து பார்க்கிறது. கேள்வி கேட்கிறது. மனதின் சாளரத்தின் வாயிலாக…. மானுட சம்பவங்களை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனையும் மறுசுழற்ச்சியும் செய்துபார்க்கிறது.
மா ஜியான் திபெத்தை விட்டு சென்று பிறகு தான் அங்கே நிகழ்ந்த……..கண்ட சம்பவங்கள் அவர்க்குள் அதிகமாக கிளர்ந்தெழுகிறது. அதன் தீரா குறிப்புகள்தான் இங்கே இந்த நூலாக மாறி இருக்கிறது. அவர் சந்தித்த மனிதர்களும் திபெத் வீதிகளும்….. அவருள் ஒரு தீரா நதியை திறந்து கொண்டே இருக்கின்றன.
அவருக்கு மிக அருகில் இருக்கும் தூர கலாச்சாரம் திபெத்தினுடையது. நாம் கற்பனிக்கும் எதுவுமே அங்கில்லை. கட்டற்ற வட்டங்களில் அவரவர் கருத்திற்கு அவரவரே கழுத்தறுக்கும் துர்சம்பவங்கள் தான் அதிகம் என்பதை உணர்ந்தவராக பகிர்கிறார். உள் நாட்டு இறுக்கம் இருக்கும் ஊரில் அழகு நசுக்கப்பட்டு அது ஒரு செவி வழி செய்தியாக மட்டுமே மாறி விடும் என்பதற்கு திபெத் உதாரணம் என்று தெரிய வருகிறது. ஒரு வெற்றிடமாகவே தான் மலை முகடுகள் இருக்கின்றன என்பது தான் புரிதல். தொடர் போராட்டங்கள் நிகழும் ஊர்களில்… குரூரம் சுலபமாக இதயம் கொண்டு விடும்.
எல்லாக் கதைகளுக்கு பின்னும் முன்னும் ஒரு பழைய புராணக் கதை இருப்பதை உணர முடிகிறது. எங்கோ விட்ட ஒரு காலத்துக் கதையின் நீட்சியாக இந்தக் கதைகள் தொடர்வதும் முடிவதும் நாம் எந்தக் கதைக்குள் எந்த நியாயங்களைத் தேடுகிறோம்…கண்டடைகிறோம் என்று பிடுபடுவதில்லை. அந்த பிடிபடாத தனம் தான் இந்த நூலை தடை செய்ய காரணமாக இருக்கும் உள்ளக்கிளர்ச்சியை, ஆதி மனித பிண்ட கிளர்ச்சியை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கும்.
ரெட் டஸ்ட், பெய்ஜிங் கோமா, தி டார்க் ரோட், நூடுல் மேக்கர்.. இவைகள் அவரின் மற்ற முக்கியமான படைப்புகள்.
கூரிய சொல்லும்… அடுக்கடுக்காய் புரிபடும் நோக்கில் எழுதப்பட்ட கதைகளில்…. ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. காற்றழுத்தம் குறைந்த உயரமான மலைத்தொடர்கள் மத்தியில்தான் திபெத் பீடபூமி இருக்கிறது. நாமும் மெல்ல மூச்சு வாங்கிக் கொண்டே மா ஜியானுடன் நடப்பது போன்று தான் நான் நினைத்துக் கொள்கிறேன். மகத்தான படைப்பை கொடுத்திருக்கும் மா ஜியானை நாம் போற்றுவோம். ஒரே நிலப்பரப்பில் நிகழும் ஐந்து கதைகளிலும்…வேறு வேறு சம்பவங்கள் சரியான வடிவத்தில் தன்னை செதுக்கிக் கொண்டுள்ளன. சீன அரசு வழக்கம் போல.. தனிமனித தவிப்பை அடித்து உதைத்து தடை செய்திருக்கிறது. கம்யூனிச சிந்தைனையிலும் டிக்டேட்டிசம் எழுகையில் சற்று தடுமாறித்தான் போக வேண்டி இருக்கிறது… பொதுவுடைமை சித்தாந்தவாதிகளாகிய நாமும்.
நூல் : நாக்கை நீட்டு
பிரிவு: நாவல்
ஆசிரியர் : மா ஜியான்
மொழிபெயர்ப்பு : தமிழில் : எதிராஜ் அகிலன்
வெளியீடு : அடையாளம் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
விலை: ₹ 90
கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.