நூல் விமர்சனம்புனைவு

விடியலுக்கான வெளிச்சப் பூக்கள்


“கவிதை எழுதுவது ஒரு வரம் “என்று யாரோ ஒரு நண்பர் கூறிய போது, அது வரமா? என்று அப்போதைய கேள்விக்கு என்னுள்ளேயே அதற்கான விடையும் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நமது மனித சமுதாயத்தில், வாழ்க்கையில் நமக்கு முன்னேயும் பின்னேயும் நடந்து விடுகின்ற…., நடக்கிற…. நடக்கப்போகிற… நிகழ்வுகள் யாவும் யாருடைய வரத்தால்? அல்லது யாருடைய சாபத்தால்? நடந்து விடுகின்றன என்று பார்க்கும் போது நமக்கான பதில்களை யாரோ ஒருவரின் கவிதை வரிகள் அளித்து விடுகின்றன.

கவிதை என்பது அவசரம் அல்ல, எழுதி எழுதி தீர்ப்பதற்கு…
அது ஒரு அவசியம் என்பதை அதன் பொருளார்ந்த வடிவங்கள் உணர வைக்கின்ற போது தான் எழுத வந்ததின் நோக்கம் புரிகிறது. கவிதைக்கான சுதந்திரம் என்பது அதன் கட்டற்ற தன்மையில் வடிவமும், பொருளும், ரசனையும், பாடுபொருளும், சமூக நோக்கும் அமைய அதன் திண்ணிய வளமைகளில் மிக நேர்த்தியாக அதனதன் மொழியை சமைத்து தருகிறது. இன்னும் சொல்லப் போனால், கவிதை அதன் அவசியம் கருதியே தனது மயிர்க் கால்கள் சிலிர்க்க நடந்து நமது வாழ்க்கை, சமூகம், அரசியல், சாதி, மதம், கடவுள் என இன்ன பிற சந்து பொந்துகளுக்கெல்லாம் நுழைந்தும் விடுகிறது. அதுவே அதன் மகத்துவமும், இருப்புமாய் வாசக நெஞ்சங்களில் அழியாத சுவடுகளாய் ஆழப் பதிந்தும் விடுகிறது.

கடவுளின் மொழியாக வேதங்கள் நமக்கு கிடைத்தன.
கீதையாக…. குரானாக…. பைபிளாக… ஆனால் கடவுளின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மனித குலத்திற்கு ஏற்பட்ட தீமைகள் அதிகம். மனித சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கின்ற குரூரங்களும், கொடுமைகளும், மரணங்களும், இழிவுகளும் அதன் பெயரிலேயே நடப்பதுதான் மிகவும் சோகம். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கவிஞனுக்கு கவிதை எழுதுவது ஒரு வரமல்ல…. அது ஒரு வாழ்க்கை. தன்னையும் தன் கனவுகளையும் இந்த சமூகத்தோடு பொருத்திக் கொள்பவன்.

கவிதை ஒரு மொழி. அந்த மொழி ஒரு ரசனையாக… தேடலாக… ஆரம்பித்து கவிஞனின் உணர்வுகளாலும், அனுபவங்களாலும் செழித்து உலகத்தின் முன் மக்கள் விரும்பும் ஒரு கவிஞனை கொண்டு வந்து நிறுத்துகிறது. அதில் அசலாக தன்னை நிறுவிக் கொள்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக தன்னை “வெடிப்பூக்கள்” என்ற கவிதை தொகுதியின் வழியே தன் சுயத்தை நிறுவியவராக தன்னையும் தன்னை சுற்றியுள்ள சமூகத்தையும் கவிதை வழியே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் மதுரைக் கவிஞரான ஓரி ஆனந்தன்.

கவிதை என்பது திட்டமிட்டுச் செய்வதல்ல. வாழ்வின் திட்டமிடாத சில திடுக்கிடல்கள் போல் கவிதைகள் மனதை திடுக்கிட செய்யுமானால் அந்த மொழியால் இந்தச் சமூகம் பயனடையும்.

திட்டம் போட்டு….

அரசியல் வாதிகள்
அதி புத்திசாலிகள்
உங்கள் நெற்றியில்
நாமம் போட்டால்
புரிந்து கொள்வீர்கள் என்று
விரலில் புள்ளி வைத்துவிட்டார்கள்
கரும்புள்ளிகள் !

“செய்வன திருந்தச் செய் ” என்பது போல் தனது மொழியால் இந்த சமூகத்தை திரும்பி பார்க்க வைக்க முடியுமானால், அதுவே அந்த மொழியின் சக்தி வாய்ந்த ஆயுதம். அந்த ஆயுதத்தை ‘சரியாக ‘…. சரியாக என்று சொல்வதை விட
கூர்மையாகவே தீட்டியிருக்கிறார் “திருயாத்திரை “என்ற கவிதையில்

“அப்பச்சி வீட்டில் ஆரம்பம்
அண்ணாச்சியிடம் கை குலுக்கல்

அவாளிடம் அளவளாவல்
நைனாவிடம் நலம் விசாரிப்பு

உடையார் வீட்டில்
உறவு கொண்டாடி

தலித் வீட்டில்
தண்ணீர் குடித்து

மாயி வீட்டு
கோழிக் குழம்பு வாசம் பிடித்து

வன்னியருக்கு
வாழ்த்துச் சொல்லி

பிள்ளை வாளிடமும்
பேசி விட்டு

ஆனந்தமாய்ப் போனது
எங்கள் தெருவில்
சாக்கடை
சாதி நாற்றம் இல்லாமலே “

இந்த கவிதை சாதியையும் அதன் பெருமைகளையும் தங்களது உடலின் தோலாகவே போர்த்திக் கொள்பவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுப்பது போல் உள்ளது. கவிதை இடித்துரைக்கும் சொற்கள் இன்றைய சமூகப் பிரிவுகளையும், சாதிப்பிரிவுகளையும் சேர்ந்தே நையப்புடைக்கிறது.

பால்
——–
பாலினமறியலாம்
பிடறி பார்த்து சிங்கத்தினுடையதை
தந்தம் பார்த்து யானையினுடையதை

முகம் பார்த்து அறிய முடிவதில்லை
பிறந்திருக்கும் குழந்தை
ஆணா பெண்ணா என

பாலினம் காட்டும்
அந்த இடம்தான்
மனித முகமா? “

இது வடிவில் ஒரு சிறிய கவிதை என்ற அளவில் அல்லாமல், அதன் பொருள் மானிடவியலின் அறிவார்ந்த தேடலின் விளைவாகக் கிடைக்கும் எண்ணற்ற பாலியல் சார்ந்த கருத்துக்களை ஒரு சிறு விதைக்குள் அடக்கி வைத்த தோற்றமாக இக் கவிதை உள்ளது. பொதுவாகவே, நமது பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும் ஆண் பெண் என்கிற பாலின வேறுபாடு பற்றிய புரிதல்கள் யாவுமே உயிரியல் சார்ந்தஉறுப்புக்களின் அடிப்படையில் அமைந்தவை அல்ல.
அவைகளுக்குப் பின்னே பல சமூகக் காரணிகள் உள்ளன. மேலும், நமது கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் மையங்கள் யாவுமே ஆண் பெண் என்ற சமூக விதிகளை, நடத்தைகளை பின்பற்ற வேண்டிய அடிப்படையில் அமைந்தவையாகும்.

“பாலினம் காட்டும் அந்த இடம் தான் மனித முகமா? “என்ற கேள்வியின் வழியே நமது பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் உடலரசியலை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒரு சிறிய விதைக்குள் விருட்சமாக விரியும் பாலின அடையாளங்கள் பற்றிய புரிதல் என்பது ஒரு புத்தக அளவில் விரியக் கூடியது ஆகும். ஆனால் கவிதை வழியே ஒரு கேள்வியாக அறியக் கிடைப்பது, பாலியல் பற்றி மேலும் மனித சமூகம் சிந்தித்து அறிய வேண்டிய பல வினாக்களையும் விடைகளையும் உள்ளடக்கியது என்ற அளவில் இக் கவிதை முக்கியத்துவமாகிறது.

நிழல் என்பது நம் கூடவே வருவது. நம் நிழலிலிருந்தே நமக்கொரு நியாயத்தை அதாவது ஞானத்தைப் பெறுவது என்பது இது வரை யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு கருத்தாக “ஞானம் ” என்ற கவிதை…..

“என்னை விட நீளமாய்க் கிடந்தது
என் நிழல்

எட்டி
தலை நிழலைத் தொட்டுவிட
ஆசைப்பட்டேன்

குனிந்தால்
தலையையே காணோம்
நிமிர்ந்தாலோ
தொட முடியாத தூரத்தில்

பாடம் சொன்னது
நிழல்

குனிந்தால் தலை போகும்
நிமிர்ந்தாயெனில்
எந்தப் பயலும்
தொட முடியாது உன்னை

சட்டென விழுந்தேன்
நிழற் கால்களில்
குருவே சரண் “

அந்த நிழலுக்கு காரணமான சூரியனைப் போலவே சொற்களின் வழியே படிப்பவர் உள்ளத்தில் வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. அறிவுக்கான திறவுகோல் எந்த வடிவிலும் கிடைக்கலாம்.

சமூக வீதியில் பல நடத்தைகளில் பல விதமான கால்கள் நடந்து உலவும் போது, அவர்கள் அறிந்திராத பல வாழ்வியல் உண்மைகளின் மீது கேள்விகளை எழுப்புவதாகவும் மேலும் சமூக விசாரணையாகவும் இக் கவிதை விரிகிறது.

இன்றைய சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சினை முதியோர்களை பேணுதல். இன்றைய நவீன வாழ்வியலில் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்கள் பெருகி விட்ட காலம். நாம் குழந்தைகளாக இருந்த போது நம்மைப் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்கள், வயது முதிர்ந்து உடல் தளர்ந்து போகும் நிலையில், அவர்களைக் காக்க வேண்டிய கடமைகளுக்கு அப்பால் உள்ள இன்றைய நவீன வாழ்வின் நடைமுறைச் சிக்கல்களால் முதியோர் காப்பகம் போன்ற இல்லங்கள் பெருகியிருக்கின்றன. இது ஒரு சமூக அவலமாக ஆகி விடுவதை கீழ்க் காணும் கவிதை மிக ஆழமான வார்த்தைகளால் இந்த சமூக அவலத்தை சாடுகிறது.

“உறவைப் புதைத்த
கல்லறை

இது
விழுதுகளால் நிராகரிக்கப்பட்ட
விருட்சங்களின்
விறகுக்கடை
இன்னும்
விற்கவுமில்லை
எரிக்கவும் இல்லை
ஆனாலும்
சாம்பலாகிக் கிடக்கின்றன “

கவிஞர் ஓரி ஆனந்தனின் பல கவிதைகள் கிண்டல், எள்ளல், கோபம் என்ற தொனியில் இருந்தாலும் அவையாவும் சமூக அவலங்களின் மையமான புள்ளியை தனது யதார்த்தமான நடையால் தொட்டு, அந்தந்த நிகழ்வுக்கான எதிர்வினையை ஆற்றுகிறது. இந்த எதிர் வினையை வீரியமாக்குவது நாம் எப்போதும் நினைவில் இருத்தக் கூடிய மேற்கூறிய கிண்டல், எள்ளல், கோபம் போன்ற சமூகத்தின் மீது எதிர் வினையாற்றுகிற மன அலைகள்தான்.

அந்த வகையில் முகம், பரிமாற்றம், அதிமேதாவிகள், சட்டதித்திருத்தம் போன்ற கவிதைகள் மிகுந்த எள்ளல் தன்மை கொண்டு வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என்பது அதற்குரிய உத்தியை கையாண்டிருப்பதனால்தான்.
இதில் “பரிமாற்றம் “என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது .

“அந்தக் குடும்பத்தலைவி
ரொம்பவும் குரும்புத் தலைவி

தன் வீட்டு வாசலின்
குப்பைகளைக் கூட்டி
எதிர் வீட்டு வாசலில்
குவித்து வைத்தாள்

எதிர் வீட்டுத் தலைவியும்
அப்படியே செய்தாள்
இரண்டு குப்பைகள்
குப்பைகளைப்
பரிமாறிக் கொண்டன “

மனதைப் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ விதமான தத்துவங்களையும், விசாரணைகளையும் நடத்தி வந்திருக்கிறார்கள். ஆத்ம விசாரத்தில் கூட மனதைப் பற்றி பல்வேறு விதமான தர்க்கங்கள் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றும் கூட மனதைப் பற்றிய பல புரியாத புதிர் முடிச்சுகளை மனோ தத்துவ நிபுணர்கள் விளக்கியும் வருகின்றனர்.

ஓரி ஆனந்தனோ “என் செல்ல நாய்க்குட்டி ” கவிதையில்

அது சுத்த அசைவம்
சைவமோ தீண்டத்தகாதது
……………………………………………

வீட்டு நாய்தானென்றாலும்
அலைவதென்னவோ தெருவில்தான்

முகங்கள் காட்டும் பலவாறு
பிடித்தவர்களெனில்
வாலில்

பிடிக்காதவர்களெனில்
படு பயங்கரமாய் பற்களில்

என்னிடம் மட்டும்
மெல்லிய முனகலோடு குழையும்
குரலில்

தூங்குகிறதே என
யாரேனும் உள்ளே நுழைந்தால்
அவ்வளவுதான்
கறிச்சுவை காணாமல் விடாது

இதுவரையில் நீங்களதை
பார்த்ததேயில்லையல்லவா
நானும்தான்

என் செல்ல நாய்க்குட்டி
என் மனம் தான்

கவிதையை உவமை, உருவகங்களோடு காட்சிப் படுத்துவது கவிஞர்களுக்கே கை வந்த கலை. அதிலும் துணிந்து தன் மன இயல்பை ஒரு நாய்க்குட்டியோடு உருவகப் படுத்துவது கவிதைக்கான இலக்கணம் (உருவகஅணி) பொருந்தியும், கவிதைக் கலைக்கே உரிய படைப்புமொழியிலும், மாற்று சிந்தனையிலும் கவிதையின் உயரம் அறியப்பட வேண்டிய ஒன்றாக இக் கவிதை உள்ளது.

இது போல் மனம் பற்றிய புரிதலை பூதப் புலன், அம்மணம் போன்ற கவிதைகளில் வேறு ஒரு தொனியில் அதாவது தன் மனதை தானே அறிந்து கொள்ளும் ‘நிர்வாணம் ‘ என்ற ஒரு நிலையில் இருந்து அறியக் கிடைக்கும் செய்திகளாய் வாசகர் நெஞ்சங்களைத் தொட்டு தன்னையே திரும்பி பார்க்க வைக்கும் உத்திகளால் நிரம்பியவை. இது போன்ற உத்திகள் படிப்பவர் உள்ளங்களில் என்றும் பதிந்திருக்கும் ஒரு படிப்பினையை உருவாக்கி விடுகிறது.

“பாரத மாதாவுக்கு ஜே ” என்ற கவிதை –

“சாலை விபத்தில்
ஆயுள் விடுதலையானார்
அந்த
சுதந்திரப் போராட்டத் தியாகி

அடக்கம் செய்ய
உடலைக் கேட்டோம்

மூவாயிரம் என்றான்
போஸ்ட் மார்ட்டம் செய்த
எம். பி. பி. எஸ். வெட்டியான்

பத்தாயிரம் தந்தால்
விபத்து
இல்லையென்றால்
தற்கொலை
எது வேண்டும் என்றது
காக்கிச் சட்டை
கசாப்புக் கடை
………..
……………

செத்ததை ஒத்துக்கொள்ளவே இல்லை
அந்த சுடுகாட்டு எழுத்தன்
எழுநூறு கொடுக்கும் வரை

பிணந்தின்னி நாய்களுக்கு
பிச்சை போட்டது நான் தான்

கண்ணீரோடு
தியாகியைப் பார்த்தேன்
விடுதலைக்கான ஏக்கம்
இன்னும்
அவர் முகத்தில் ”

 

இந்த கவிதை வெளிவந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்றும் அது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதைப் பார்க்கிறோம். அதுவும் இந்த கொரானா காலத்தில் இறந்த சடலங்களை என்ன செய்வது என்று தெரியாமல் பீகார், உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் கங்கையில் வீசி எறிந்த கொடூரங்களையும், அதேபோல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து இறந்த மருத்துவரின் உடலுக்கு ஏற்பட்ட அவமரியாதைகளையும், எத்தனையோ சடலங்கள் பிணவறையில் குவித்து வைக்கப்பட்டதையும் பார்க்கும் போது, நாம் நமது மனித மாண்புகளையும், விழுமியங்களையும் தொலைத்து…. நோய்மைக் காலங்களில் ஏற்பட்ட இழப்புக்களைக் கூட அதற்குரிய மரியாதையை வழங்க முடியாத அவலங்களையும் மனிதமற்ற சூழ்நிலையில் சிலரின் கையாலாகாதத்தனங்களையும் நிறைய…. நிறைய செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் போன்ற ஊடகங்கள் வழியாகவும், கண்ணெதிரில் சாகக் கிடந்த மனித உயிர்களின் தவிப்பின் வழியாகவும், உற்றார், உறவினர்களின் கண்ணீர் கதைகளின் வழியாகவும் இதையேதான் பார்த்தோம். இனி, பார்க்க வேண்டியது என்ன இருக்கிறது? என்று மனம் வெதும்பிக் கிடக்கும் மனிதக் கூட்டத்திடையே ஆறுதலாய் நாம் எதைப் பேச முடியும்? மனிதனின் விடுதலை மரணத்தில் மட்டும்தானா? என்ற ஒரு கேள்வி எழும்புகிறது.

பிணந்தின்னி நாய்களுக்கு பிச்சை போட்டது போக, இன்னும் நீங்கள் என்னதான் வேண்டும் என்கிறீர்கள்? என்று மரணம் மனிதர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்புகிறது. எத்தனை மரணங்கள் வந்தாலும் இந்தக் கேள்விக்கு விடையே தெரியாத மனிதக் கூட்டம் தன்னையே புதைத்துக் கொள்கிறது சமூக வெளியில்…..!

ஓரி ஆனந்தனின் பெரும்பாலான கவிதைகள் வாசிப்பிற்கு பின் உணர்வுகளில் பெரும் வெடிப்பை நிகழ்த்துவனவாகவே உள்ளன.முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல், வாழ்க்கையின் வலி மிகுந்த உணர்வுத்தளங்களை தொட்டு எழுத, அதே வலிமையுடன் கூர் தீட்டிய சொற்களை கவிதையின் மொழியாகக் கொண்டிருக்க வேண்டும். கவிதையின் மொழியை மனித சமூகத்திற்கு ஒரு அனுபவமாக்கித் தரும் போது, அந்தப் பரந்த வெளியில் வெடித்துக் கிளம்பும் சொற்கள் படைப்பவரின் மனவெளியெங்கும் ரௌத்திரமாய் வெடித்து கவிதைப் பூக்களாக அரும்பியதில் வியப்பேதுமில்லை. ஓரி ஆனந்தனின் மொழியிலேயே சொல்ல வேண்டுமென்றால் செவிடர்களின் செவிப்பறையைக் கிழித்துச் சென்று ஒரு விடியலுக்கான வெளிச்சமாய் பாயும் மொழியின் சிறு அசைவுதான் இந்தக் கவிதைப் பூக்கள்.

கவிஞர் ஓரி ஆனந்தனின் “வெடிப்பூக்கள்” என்ற இந்த தொகுப்பு சமூக விழுமியங்கள் மீதும் தனி மனித ஒழுக்கங்கள் மீதும் நம்பிக்கை கொண்ட நம் தமிழ் சமூகத்துக்குக் கிடைத்த அறத்தின் பாற்பட்டதே ஆகும்.


மஞ்சுளா

 

நூலாசிரியர் குறித்து:

ஓரி ஆனந்தன் (1970)

மதுரையைச் சேர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியிலிரும். வெளிவந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர். இது இவரின் முதல் கவிதைத்தொகுதி.. மதுரையின் கவியரங்க மேடைகளில், தனக்கேயரிய வெடிப்பான பாணியில் பலரைக் கவர்ந்திழுத்தவர். நறுக்கென்றிருக்கும் எளிமையும் சுருக்கெனத் தைக்கும் கூர்மையும் வித்தியாசமான பார்வையும் கொண்டு எழுதும் இவர், கவிதைகள் மட்டுமல்ல பாடல்களும் எழுதுவதில் வல்லவர்.

இளைஞர்கள் விழிப்புணர்வு குறித்து இவர் எழுதிய எட்டுப்பாடல்கள், மிகப்பிரபலமான திரைத்துறைப் பாடகர்களால் பாடப்பெற்று, 2005-இல் லயோலா கல்லூரியில் வெளியிடப்பட்டன. கவிதைத் தளத்திலும் திரைத்துறையிலும் இவர் மிக உயர்ந்த இடத்தைப் பிடிப்பார். நிச்சயம் இது நிகழ்ந்தேறும். உண்மை , வெறும் புகழ்ச்சியில்லை .

 

நூல் தகவல்:
நூல்: வெடிப்பூக்கள்
பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்: ஓரி ஆனந்தன்
வெளியீடு:  கர்த்தா வெளியீடு
வெளியான ஆண்டு  ஜனவரி 2007
விலை: ₹ 50
 பக்கங்கள்
தொடர்புக்கு : 240, திருநீல்கண்டர் நகர்; 2-ஆம் பகுதி;

3-வது தெரு

காவாங்கரை; செங்குன்றம்

சென்னை – 66

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “விடியலுக்கான வெளிச்சப் பூக்கள்

  • எழுத்தாளர்களை ஏற்றிப்பிடிக்கும் உங்கள் ஊக்க உள்ளத்திற்கு உளமலர் பாராட்டுக்கள் சகோதரி!,
    கவிஞர் ஓரி ஆனந்தனின் கவிதைகளாக நீங்கள் சுட்டிக்காட்டிய சிலவற்றில் ” நிழல் ” கவிதை மட்டுமே நிலைக்கிறது மனதில்.
    தீர்வுகள் தராத முகாரிகளை மனம் ஏற்க மறுக்கிறது சகோதரி!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *