அபுனைவுநூல் விமர்சனம்மொழிபெயர்ப்பு

உப்புவேலி – விமர்சனம்


விருந்தினர்களின் உபசரிப்பில் விருந்தோம்பலில் முதலில் இடம்பெறுவது உப்பு என்பது நாம் அறிந்தது. உணவுப் பண்டங்களில் முக்கிய இடத்தை வகித்து அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக இருக்கும் உப்பு தற்போது மலிவான விலையில் கிடைக்கும் மளிகை பொருளும் அதுவாகவே இருக்கிறது. இந்தியாவில் காலரா போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயின் போது உடலிலிருந்து அதிகப்படியான உப்பு வெளியேறியதால் இறந்து போயிருக்கிறார்கள் என்பது பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது. உயிர் வாழ மிக அத்தியாவசியமான மலிவான உப்பு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தங்கத்திற்கு ஒப்பிட்டு பேசப்பட்டிருக்கிறது. இந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலையினால் உடலிலிருந்து அதிக அளவு உப்பு வெளியேறும் நிலையில் குளிர் பிரதேச நாடுகளில் வசிப்பவர்களை விட சற்று அதிகமாகவே இந்திய நாட்டினர் எடுத்துக் கொள்ளும் தேவையும் இருக்கிறது. 1930களில் மகாத்மா காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தை நடத்தினார் என்பது வரலாற்று பதிவுகளில் நாம் அறிந்தவையே. ஆனால் இந்த நூலின் ஆசிரியர் அதற்கெல்லாம் முன்பே உப்பின் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான வரிகளை பற்றி சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொண்டு மிகப் பெரிய ஆராய்ச்சியே செய்து நமக்கு கொடுத்திருக்கிறார். இந்த நூலில் இவர் கொடுக்கும் தகவல்கள் இந்திய வரலாற்றிலும் இங்கிலாந்து வரலாற்றிலும் கூட பதிவில் இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. உப்புக்கு வரி என்பது சரி. அதென்ன உப்புக்கு வேலி? என்ற கேள்வியில் இந்த புத்தகத்தை படித்தால் நூலாசிரியரின் மூன்று ஆண்டுகால இந்திய பயணமும் தேடலும் மேற்கொண்டு சேகரித்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் அடங்கிய புத்தகமாக இது இருக்கிறது.

லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் ஆவண காப்பாளராக பணிபுரிந்த இவருக்கு கிடைத்த வாய்ப்பில் பெற முடிந்த ஆவணங்களைக் கொண்டு கண்டடைந்து சேகரித்த வரலாறு இந்த நூலில் அடங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பழைய நூலகங்களிலும் தேடலில் வெற்றி கண்டிருக்கிறார். அவரது தேடலின் தொடக்கமாக இந்தியாவில் ஆங்கிலேயர் நுழைவதற்கு முன்பு மௌரியர்கள் காலத்திலேயே உப்புக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வரி மக்களால் கட்டமுடியும் அளவிற்கே இருந்ததால் பெரிதாக பேசப்படவில்லை. கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு படிப்படியாக வியாபித்து சிப்பாய் கலகத்திற்கு பிறகு இங்கிலாந்தின் நேரடி அரசாங்கத்தின் கீழ் இந்தியா ஆளப்பட்டது. வாரிசு இல்லாத சிற்றரசுகள் ஆங்கிலேய அரசின் சட்டத்தின் அடிப்படையில் அரசுடன் சேர்க்கப்பட்டு விரிவடைந்தது. இங்கிலாந்து அரசின் கீழ் இருந்த பகுதிகளுக்கு உப்பின் வரியாக ஒரு வருடத்திற்கு இரண்டு மாத சம்பளம் எனும் அளவிற்கு பெறப்பட்டிருக்கிறது. கடல் நீரிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக உப்பு காய்ச்சுபவர்களும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நிலவுடமைதாரர்கள் தங்கள் நிலத்திற்கு விதிக்கப்படும் வரியை விட உப்புக்கு வரி விதிப்பதையே அனுமதித்தார்கள். இப்படி ஏழைகளுக்கு மட்டுமே சுமையான உப்பு வரி அதிக வருமானத்தை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுத்தது.

ஏழை மக்களின் மீது விதிக்கப்பட்ட அளவுக்கு மீறிய உப்பு வரியானது அம்மக்களை கொள்ளையர்களாக மாற்றி இருந்தது. வெளியிடங்களிலிருந்து உப்பு உள்ளே வராமலும் உப்பளங்களிலிருந்து வெளியே செல்லாமலும் தடுத்து சுங்கச்சாவடிகள் மூலமாக மட்டுமே வரி பெறப்பட்டு அனுமதிக்கப்படுவது தேவையாக இருந்த பட்சத்தில் ஆங்கிலேயர்கள் மிகப்பெரிய உப்பு வேலியை இந்தியாவின் குறுக்காக கட்டமைத்திருக்கிறார்கள். அதாவது இமயமலையின் சிந்துநதி பகுதியிலிருந்து பாகிஸ்தான் டெல்லி ஆக்ரா ஜான்சி ராய்ப்பூர் மகாநதி ஒரிசா வரை சுமார் 2300 மைல் நீளத்திற்கு சுமார் 10 முதல் 14 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்டதாக ஆங்கிலேயர்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த உப்பு வேலியைத்தான் மறைக்கப்பட்ட வரலாறாக இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த வேலியை பராமரிக்கவும் காவல் காக்கவும் சுமார் 12000 பேர் பணி புரிந்திருக்கிறார்கள். 1720 காவல் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்திருக்கிறது. சீனப் பெருஞ்சுவர் போல மிக பெரியதாக அமைந்திருந்த இந்த உப்பு வேலி கருவேல மரம் இலந்தை மரம் கள்ளிச்செடி போன்ற முட்களால் ஆன செடிகளையும் பிற தாவரங்களையும் கொடிகளையும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. காய்ந்த வேலிகளால் அமைத்தபோது அவை நெருப்பு பற்றியும் புயல் காற்றாலும் அவ்வப்போது அழிவதால் பராமரிப்பு அதிகமாக தேவைப்பட்டது. அதன்பிறகே உயிருள்ள வேலி அமைக்க பணி செய்து இருக்கிறார்கள். அவ்வாறு அமைப்பதும் எளிதாக இருந்து விடவில்லை. சில இடங்களில் மண்ணானது தாவரங்களை வளர்ப்பதற்கு ஏற்றவையாக இல்லை. அங்கு வளமான மண்ணை நிரப்ப வேண்டியிருந்தது தண்ணீர் கிடைக்காத இடங்களில் பிற இடங்களிலிருந்து பெற்று வந்து நீரை பாய்ச்ச வேண்டியிருந்தது. காவலுக்காக பணியமர்த்தப்பட்டவர்களின் இடையே இருக்கும் இடைவெளி கூப்பிடும் தொலைவென(ஒருவர் சத்தமிட்டு அழைத்தால் காதில் விழும் தொலைவு) இருந்திருக்கிறது. அவர்கள் பக்கத்து கிராமங்களுடன் நட்பாகி விடக்கூடாது என்பதற்காக குடும்பங்களுடன் வாழ அனுமதி இல்லை . கொடுக்கும் சம்பளமும் அவர்கள் தாள்களும் பேனாவும் வாங்குவதற்கும் தங்களை அங்கு பாதுகாத்துக் கொள்வதற்குமே சரியாக இருந்தது என்று எழுதியிருக்கிறார்.

இப்படியெல்லாம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த உப்பு வேலியில் சிறிதளவு இடைவெளி இருந்தாலும் அதன் பயனற்று போய்விடும். எனவே இந்த வேலியை பராமரிப்பதில் மிக சிரத்தை எடுத்து ஆங்கிலேய அரசு செய்திருக்கிறது. இதனை மீறி உப்பை திருடி கழுதைகளின் மீதோ ஒட்டகத்தின் மீதோ வைத்து சுமந்து செல்லும் கொள்ளையர்கள் பிடிபட்டு விட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனையும் அளித்திருக்கிறார்கள்.

உப்பு என்பது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும்படியாக பரவலாகவும் இருந்திருக்கவில்லை. குஜராத்தில் உள்ள உப்பு பாறையிலிருந்தும் ராஜஸ்தானில் இருக்கும் சம்மர் ஏரியிலிருந்து உப்பு பெறப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் சென்னை போன்ற சில பகுதிகளில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு உப்பு பெறப்பட்டிருக்கிறது. இரண்டு முறைகளில் உப்பை தயாரித்திருக்கிறார்கள். சூரிய வெப்பத்தில் நீரை ஆவியாக விட்டு படிந்திருக்கும் உப்பினை சுரண்டி பெறுவது ஒருமுறை. மற்றுமொரு முறையாக உப்புநீரை காய்ச்சி ஆவியாக விட்டு உப்பை பெறுவது என்பதாக இருந்திருக்கிறது. இதிலும் காய்ச்சிய உப்பினை கீழ் ஜாதியினரால் தயாரிக்கப்பட்டது என்பதால் மேல் ஜாதியினர் விரும்புவதில்லை என்ற ஒரு தகவலும் இந்த நூலில் பதிந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் கட்டுக்குள் இருக்கும் உப்பு கிடைக்காத பகுதிகளில் இந்த வரியின் தாக்கம் மிகக் கொடுமையாக இருந்திருக்கிறது. பஞ்சத்தில் கையில் இருந்த விதை தானியங்களையும் விற்கும் அளவிற்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் மெலிந்தும் ஊட்டச்சத்து குறைவாகவும் இருந்தார்கள் என்பதையெல்லாம் ஆவணங்களிலிருந்தும் பிற கிழக்கிந்திய கம்பெனியில் ஆளுமையில் இருந்த அதிகாரிகளின் பதிவுகளில் இருந்தும் தேடிப் பெற்ற தகவலாக பதிய வைத்திருக்கிறார். மொத்தத்தில் இங்கிலாந்து அரசு இந்திய மக்களை உப்பில் போட்ட மாங்காயை போல வியர்வை, ரத்தம் என உறிஞ்சி எடுத்து தன் நாட்டிற்கு பணம் பதிப்பினை அனுப்பியிருக்கிறார்கள் என்பதே நமக்குப் புரிகிறது.

கிழக்கிந்திய கம்பெனியின் இறுதி பத்து ஆண்டுகளில் சுங்கச்சாவடியில் அதிகாரியாக பணிபுரிந்த ஹியூம் எனும் ஆங்கிலேயரை பற்றி சிப்பாய் கலகத்திற்கு பிறகு எழுதப்பட்ட” தி காம்பிடேஷன் வாலா” எனும் நூலின் குறிப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களும் இடம்பெற்றிருக்கிறது. சுங்கத் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த ஹியூமுக்கு பறவைகள் மீது தீவிர ஆர்வம் இருந்தது. பறவைகளின் மாதிரிகளை தொகுக்க மாபெரும் சுங்க வேலி எப்போதுமில்லாத வாய்ப்புகளை அவருக்கு அளித்தது. அவரின் கீழ் பணியாற்றிய வேட்டையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் துப்பாக்கியுடன் தாங்களாகவே முன்வந்து உதவியிருக்கிறார்கள். அவர் கிட்டத்தட்ட 63 ஆயிரம் பறவைகள் மற்றும் 15500 முட்டைகளை லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்திற்கு அளித்திருக்கிறார். ஒரு பறவை இனத்தின் மாதிரியை சேகரிக்க டஜன் கணக்கில் பறவைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இவர் இந்தியர்களின் மீது கனிவாக நடந்து கொண்ட ஆங்கிலேயர். தன் மாவட்டத்தில் குற்றம் இழைத்தவர்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்கும்படி பார்த்துக் கொண்டவர். கனிவோடு நடந்துகொண்ட இவரிடமே குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென குற்றவாளிகள் விரும்பியிருக்கிறார்கள். சுங்க வேலியை வலுப்படுத்தியதற்காக அரசின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இவரது பிற்கால வாழ்க்கை இந்திய விடுதலைப் போராளிகளின் வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தியா எப்படி ஆளப்பட வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்த இந்தியர்களோடு, இவர் தொடர்பில் இருந்திருக்கிறார். கல்வி கற்ற இந்தியர்களை அரசியல் நோக்கில் ஒருங்கிணைக்கும் குழு ஒன்றை அமைக்கும்படி கூறியிருக்கிறார். இந்தியர்களே அதை துவங்க வேண்டும் என்றும் ஐரோப்பியர்கள் அவர்களின் கீழ் செயல்பட வேண்டும் என்றும் செயல்படுத்தி இருக்கிறார். இதில் தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகி இருக்கிறது. ஹியூம் அவர்கள்தான் இந்த அமைப்பின் முதல் பொது செயலாளராகவும் இருந்திருக்கிறார். 25 ஆண்டுகள் அதனை வழி நடத்தியிருக்கிறார். பின்னர் மகாத்மா காந்தியின் தலைமையில் விடுதலை பெற்றுத்தந்த கட்சியாகி சுதந்திர இந்தியாவை நெடுங்காலம் ஆட்சி செய்த அரசியல் கட்சியாகவும் மாறியது என்பது போன்ற வரலாற்று ஆவணத் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் சைனா ஐரோப்பா போன்ற நாடுகளிலும் விதிக்கப்பட்ட உப்பு வரியை பற்றியும் சிறிது அலசியிருக்கிறார். தங்கத்திற்கு ஈடாக உப்பின் மதிப்பு இருந்தது என்பதை வாய்வழி மொழியாக அறிந்திருக்கிறோம். சைனாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை நாலரை கிலோ உப்பின் மதிப்பிற்கு ஈடாக இருந்திருக்கிறது. இந்தியாவைப் போன்ற உப்பின் மீது அதிக வரியாக அடுத்து ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஆவண தகவலாக குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் மட்டுமே பூலான் தேவி போன்ற கொள்ளையர்கள் வாழ்ந்த பகுதியான சம்பல் பள்ளத்தாக்கு மாதிரியான ஆபத்தான பகுதிகளுக்கு கூட உப்புவேலி இருந்த அடையாளத்தை தேடுவதற்காக நெடுந்தொலைவு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த புத்தகம் முழுவதும் அவரது தொலை தூர பயணத்தின் அனுபவங்களை நிறைய பகிர்ந்திருக்கிறார். இந்தியாவில் ராணுவத்தில் மட்டுமே தெளிவான ஜிபிஎஸ் எனும் புவியின் இடத்தை சுட்டும் கருவி இருந்தது. தற்போது போன்று செயற்கைக்கோள்கள் மூலம் சுலபமாக புவியின் இடங்களை கண்டடையும் வசதியற்ற காலத்தில் நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு சிறிது தெளிவில்லாமல் சாதாரண மக்களுக்கு கிட்டிய ஜிபிஎஸ் ஐ உதவியாக வைத்து மூன்று ஆண்டுகளாக மிச்சமிருக்கும் உப்பு வேலியை தேடிய அவர் இறுதியில் கண்டடைந்தாரா இல்லையா என்பதை இந்த நூலின் இறுதிப் பக்கமே பேசுகிறது.

இப்படியாக பல தகவல்களாக மாபெரும் உப்பு வேலியை பற்றி பகிர்ந்து விட்டு 1930களில் மகாத்மா காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தின் போது உப்பின் விலை முன்பிருந்ததை விட பன்மடங்கு குறைந்தே இருந்தது என்கிறார். உப்பின் விலையை குறைப்பதற்காக மேற்கொண்ட போராட்டத்தை விட நிலவுடமைதாரர்கள் செலுத்தாத நிலவரி, மாற்று அரசாங்கத்தின் தேவை போன்ற இதற்கான போராட்டங்களே தேவையாக இருந்தது என்கிறார். உப்பு சத்தியாகிரகத்தில் காந்தியடிகள் சட்டத்தை மீறி உப்பை கையில் எடுத்தும் கடல் நீரை காய்ச்சி உப்பை பெற்றும் உப்பு வரியை நீக்கச் சொல்லி நீண்ட யாத்திரை நடத்தி வழிநெடுக கூட்டங்களில் பேசியும் பெரும் திரளான மக்களுடன் தண்டியை அடைந்து பிடி உப்பை கையில் அள்ளி யாத்திரையை முடித்திருக்கிறார். அப்போதும் சில சலுகைகள் மட்டுமே ஆங்கிலேய அரசு கொடுத்ததே ஒழிய முற்றிலுமாக வரி நீக்கப்படவில்லை. சுதந்திரம் அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வரியை நீக்கியிருக்கிறார்கள். வரலாற்று தேடலில் ஆர்வம் கொண்ட ஆங்கிலேயரான திரு ராய் மாக்ஸம் அவர்கள் இந்தியர்களின் மீது இங்கிலாந்து அரசுசெலுத்திய ஆதிக்கத்தை ஆராய்ந்து அளித்த உப்பு வேலியை பற்றிய தகவலை கொண்ட ஒரே புத்தகமாக இந்த புத்தகம் இருக்கிறது. மறைக்கப்பட்ட வரலாறுகளை அறியும் ஆர்வம் இருப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய புத்தகம் இது.


பிரேமா.

 

நூல் தகவல்:
நூல்: உப்பு வேலி
வகை : கட்டுரை
ஆசிரியர்: வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம்
தமிழில் சிறில் அலெக்ஸ்
வெளியீடு: தன்னறம் – நூல் வெளி
வெளியான ஆண்டு:  2020
பக்கங்கள் : 195
விலை : ₹ 400
தன்னறத்தில் நூலைப் பெற http://thannaram.in/product/uppuveli/
அமெசானில் நூலைப் பெற
இந்நூல் குறித்து மற்றொரு பதிவு

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *