நூல் விமர்சனம்புனைவு

துறவிஹூப்ளி நதிக்கரையில் ஒரு முறை இவ்வாறு நிகழ்ந்தது. விவேகானந்தரின் ஆரம்ப நிலை. தேடுதல் மிகுந்த இளைஞர் அதிதீவிர வாசிப்பாளர். விவாதத்துக்குரிய கேள்விகள் அவரிடம் அதிகம். நேரடி அனுபவம் இல்லாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். எடுத்த எடுப்பில் நேரடியாக ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்டார்..,

” நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா..?”

ராமகிருஷ்ணர்..,

” பார்த்திருக்கிறேன்”

ஒற்றை வார்த்தையில் பதில் தந்தார்.

” யார் அதற்கு சாட்சி..?”  விவேகானந்தர் உடனே அடுத்த கேள்விக்கு சென்றார்.

“நானே அதற்கான முழுமுதற் சாட்சி !”

ஏதோ ஒரு புராணத்தில் இருந்தோ, வேதத்திலிருந்தோ, ஏதேனும் கதைகள் மூலமோ விளக்கம் கூறுவார் என்று எதிர்பார்த்தவருக்கு அவர் கூறிய பதில் எதிர்பாராத ஒன்றாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதை அவர் வெளிக்காட்டாமல் “எனக்கும் அதைக்  காட்ட முடியுமா..?” என்று கேட்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது காலை அவரது நெஞ்சில் வைத்தார். தான் கண்டதை அவரையும் காண செய்தார். அந்நாள் முதற் கொண்டு  கேள்விகளையும் விவாதத்தையும் விட்டொழித்து நேரடியான தேடுதலில் இறங்கினார்.

தினசரி நூற்றுக்கணக்கான மனிதர்கள் திரைத்துறையில் கதாநாயகனாக வேண்டுமென்ற எண்ணத்தில் நகரத்திற்கு படையெடுக்கிறார்கள் .அவர்களில் ஒரு சிலரே சில நாள் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். வெளிச்சத்திற்கு வருகிறார்கள். மீதமுள்ளோர் எதிர் கால வாய்ப்பை எதிர்பார்த்தோ அல்லது பிழைப்பின் மூலம் கருதியோ ஏதோ சிறு பாத்திரத்தில் காலத்தை கழித்து தங்களை இறுத்திக் கொள்கிறார்கள். சிலர் காணாமலே போய்விடுகிறார்கள்.. !

ஆன்மீகமும் இப்படித்தான்..!

ஆனால் இதில் இடறும் சாதகரின் நிலை ஒன்று அபாயகரமானதாக மாறிவிடுகிறது. அல்லது பரிதாபத்துக்குரியதாக மாறிவிடுகிறது.

கேதார்நாத்தில் பீம்பாலி அருகில் ஒரு இளைஞரை எனது நண்பர் ஒருவர் சந்தித்து, கையோடு அவரையும் அழைத்துக் கொண்டு மேலே வந்தார். அப்போது நாங்கள் மூவரும் உரையாடினோம்..,

அந்த இளைஞர் தற்போது தான் இளநிலை பொறியியல் முடித்துள்ளதாகவும் வாழ்வின்  மீது அவருக்கு நிறைய கேள்விகள் இருப்பதாகவும், அந்த கேள்விக்கான பதில்  வெறுப்பை அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.  எனவே தான் சந்நியாச பாதையில்  புதிய உலகத்திற்குள் இறங்குவதாக கூறினார். துறவற தீட்சை பெற உஜ்ஜுயினி செல்ல போவதாகவும்  கூறினார்.

இப்புத்தகத்தின் நாயகன்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூடோ. பாரதத்தின் பழமையை தரிசிப்பதற்கு வருகிறான்.  அவனது புத்தக வாசிப்பின் ஆன்மீக அறிவோடு வாரனாசி முழுவதும் திரிகிறான். அங்கிருக்கும் விதவிதமான ஆன்மீக வழிமுறைகள் கொண்ட மனிதர்களிடம் கேள்வி கேட்கிறான், விவாதம் செய்கிறான், அபிப்ராயங்களை கட்டமைத்துக் கொள்கிறான். இறுதியில்  துறவுக்கான தீட்சையை ( அதற்கான முன் தயாரிப்பு சுவாரஸ்யமானது) ஆனந்த பாபாவிடம் பெறுகிறார். இதற்கு முன்னால் பின்னால் என்று இரு பார்வைகளை கொண்டதாக இப்புத்தகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சங்கராச்சாரியார் உரையுடன் கூடிய கதா உபநிஷதம், பங்கஜ் மிஸ்ராவின் -” எ டெர்ரேஸ் ஆன் தி கேஞ்சஸ் “,  நிசர்கடாட்ட மகாராஜாவின்” ஐ ஆம் தட் “, ராஜாராவின் காந்தபுரா, ரமண மகரிஷி உரைகள், இஷா உபநிஷதம், நாய் பால், ஒன் மில்லியன் ரிவோல்ட்ஸ், ராமதாஸின் பில்கிரிமேஜ் நோட்ஸ்,  ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ” தி ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃப்ரீடம்”,  ஜானேஸ்வரி, அஷ்ட வக்கர சம்ஹிதை போன்ற எண்ணற்ற நூல்களின் சாரம் கொண்ட உரையாடல்கள்   துறவியின் பயணம் முழுவதும் வருகின்றன.

“பிறவி எடுக்கக் காரணம் கர்மா என்றால் எப்படி முதல் பிறப்பு நிகழு முடியும்? அதற்கு முன்னால் எந்த செயலுமே இருந்திருக்காதே..?கர்மா எப்படி துவங்கியது?”

மேற்கத்திய பார்வைகள், கேள்விகள் ,விவாதங்கள், உள்வாங்கல் வழியாக பாரதத்தின் ஆன்மீக கலாச்சார தரிசனத்தையும்,  ஆன்மீக கூட்டத்தையும்,   கூட்டத்திற்கு ஆட்படாத  வெளிச்ச கீற்றுகளையும்  உணர்ந்து கொள்ள இப்புத்தகம் உதவுகிறது.

பெரும்பாலும் சமூக வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களே ஆன்மிகத்திற்கு வருவது வெட்கக்கேடான விஷயம் .

அவர்கள் இங்கு வந்தாலும் பொறுமையுடன் இருப்பதில்லை. அவசரம்.., அந்த அவசரம் அவர்களை தவறானவர்களிடமே கொண்டு சேர்க்கிறது.  இதில் நிறைய பேர் பின்வாங்குதலுக்கும் தோல்வி அடைவதற்கும்   இதுவும்  காரணம். இது மட்டுமின்றி எதற்கு..? எதை நோக்கி ..?என்கிற தெளிவின்மையும் காரணம்.

சில புத்தகங்களோடு நாம் நெருக்கமாய் பயணிப்போம். அதிலும் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே  நம்மோடு நெருக்கமாக பயணிக்கும் . அந்த வகையில் இந்த புத்தகம் தனித்துவமானது.

பிச்சைக்காரர்கள், விலைமாதர்கள், திருநங்கைகள் போன்றவர்களின் உலகங்கள் போல் துறவிகளின் உலகங்களை பேசும் புத்தகங்களும் குறைவாகவே உள்ளன.

இவர்கள் சமூகத்தை நிராகரித்து விட்டவர்களா..? அல்லது சமூகம் நிராகரித்து விட்டதா..? இல்லை சமூகம் இவர்களுக்குள் ஊடுறுவ இயலாமல் தோல்விக் கண்டுவிட்டதா..? ஆனால் முதலில் கூறிய மூவரும் சமூகத்தை சார்ந்திருக்கிறார்கள். உண்மையான  துறவியோ சமூகத்தை தன்னை நோக்கி வரச் செய்கிறார்.

“..,அருகாமையில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த அக்கம்பக்க திரையரங்குகளின் சுவரொட்டிகளை இரண்டு ஆடுகள் கிழித்து தின்று கொண்டிருந்தன. படத்தின் தலைப்பு ஏற்கனவே தின்று தீர்க்கப்பட்டிருந்தது. கையில் கத்தி இன்னும் இருந்தது. ஒரே கல்வில் அதுவும் காணாமற்போய்விட்டது.”

ஆறுதல் தேடுபவர்கள் குற்றவுணர்ச்சியில் தப்பிக்க விழைவோர்கள், செல்வத்தால் நிறைத்து கொண்ட வெறும்மனிதர்கள்,

அதிசயத்தை தேடும் ஆவலாதிகள்,  அதீத சக்திகளை பெறத்துடிப்பவர்கள்,

வாழ்க்கையை யாசிப்பவர்கள், தேவைகளுக்கு நாடுபவர்கள் என பெருங்கூட்டம்  அவர்களை சுற்றி சூழ்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் வெகு சிலரே வெறுமையின் நிழலை நிரப்பிக் கொள்ள முன்வருகிறார்கள்.

சிவனுக்கு பல முகங்கள் இருந்தாலும் யோகக்கலாச்சாரம் அவரை முதல் யோகியாகவே பார்க்கிறது. சோமஸ்வரா என்பதன் கருத்துருவு அவரது தலையில் இருக்கும்

நிலவு/ சோமனின் குறியீடு .

நிலவு போதை தரக்கூடியது. சரியான முறைப்படியான யோகப் பயிற்சிகள் உடல் இரசாயனங்கள்  மூலம் ஒரு போதையை இயற்கையாகவே தருகிறது. இம்முறையில்  விழிப்புணர்விற்கு தடையேதும் வருவதில்லை. ஆனால் புறநிலை போதை வஸ்துகள் நிறைய பேருக்கு விழிப்புணர்விற்கு பதில் அடிமைத்தனத்தை பழக்கமாக்கி விடுகிறது.

வட நாட்டில் இந்த சில்லுகள்  என்கிற கஞ்சா புகைப்பதில் வாழ்க்கையை சுழலவிடும் காவிகள் ஏராளம். ஆனால் ஆயிரத்தில் ஒன்று புறபோதைகளையும் கடந்து விழிப்புணர்வின் உச்சமாய் இருக்கும்.

“வேறு எங்கும் போலவே இங்கும் ஊழல்கள் உண்டு. ஒவ்வொரு தலைமுறையும் தமது காலத்தில் புனிதர்கள், தவ யோகிகள் மற்றும் பணம் சுருட்டுபவர்கள் என எல்லாவிதமானவரையும் உண்டாக்கியிருக்கிறது.”

சாதகருக்கு இதிலுள்ள ஒரே பாதுகாப்பு இது சுய தேடல் என்கிற உறுதி மட்டுமே .அதனால் மட்டுமே நிதர்சனத்தை அடைய முடியும். மற்றதெல்லாம் உந்துதல் மட்டுமே.

 

“தழல்களும் நெருப்பும் ஒன்றே.,

தாமரையின் இதழ்கள் அதன் பூவுடன் ஒன்றியவை., பழமும் கிளையும் மரமேயாகும்., அதே போல் இந்த பிரபஞ்சத்தின் யாவுமே நான்..!”

– (ஜானேஸ்வரி).

லுடோ விலிருந்து பிரசாத் பாபாவாக உருவெடுப்பது மிக இயல்பாக நடப்பதில்லை. பல விஷயங்களை உள்ளும் புறமும் கடக்க வேண்டியதாக இருக்கிறது .

இராணுவ விதிமுறைகளை விட அதிகம் துறவறத்தில்.. ஆனால் உண்மையான துறவிகளை நீங்கள் சமதளத்தில் கண்டு கொள்வதில்லை. நாம் சிகரத்தை நோக்கி நடையிட மெத்தனம் காட்டுகிறோம். போலிகள் உங்களை எளிதாக கண்டு கொள்வார்கள்,அவர்களிடம் நீங்களும்.

பாட்ரிக்லெவி இந்நூலில் விவசாய சீரழிவிற்கான மரபணு மாற்ற விதை யுக்திகளை ஆன்மீக தத்துவார்த்தத்தில்  பகடை செய்கிறார்.

எட்டாம் நூற்றாண்டில்  ஆதிசங்கராச்சாரியார் மூலம் ஏற்படுத்தப்பட்ட பத்து விதமான துறவு பாரம்பரியத்தைப் பற்றிக் கூறுகிறார். இது ”தஸ்னாமி சம்பிரதாயாஸ்”என்று அழைக்கப்படுகிறது. இடவாகு தன்மையின் பாற் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“அகாரா ” (துறவுப் போர் வீரர்களின் பயிற்சிக் கூடம் ) வழி பிரிவுகளையும் , அதிகாரங்களையும், வனப்புகளையும், மாயைகளையும், பிறழ்தல்களையும் வெளிப்படுத்துகிறார்

கேரோக்நாத்திகள், அகோரிகள் பற்றிய வழிமுறைகளை பேசுகிறது.

தென்னிந்திய ஆதினங்கள், மடங்கள் போன்ற மென்மையான வழிமுறையை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. விளையாட்டுத்தனமாக அகாராவில் நீங்கள் சந்நியாசம் வாங்கி விட முடியாது..  தீட்சை யேற்றப் பின் அதன் வழிமுறைகளிலிருந்து பின் வாங்கவும் முடியாது . நீங்கள் தேசத்தின் எந்த பகுதியிலிருத்தாலும் உங்களை தூக்கிச் செல்வார்கள்.

மணிகர்ணிகாவில் பற்றியெரியும் நெருப்பின் ஒளி,

பிணத்திலிருந்து உருகி வழியும் நிணத்தின் வாடை,

“ராம் நாம் சத்ய ஹை ” -ன் ரீங்கார ஒலி…,

எரியும்  சிதையில் வாசகன் தன்னை பொறுத்திப் பார்த்துக் கொள்ளும்  வகையிலான காட்சிகள் நகர்கிறது.

“சலவைத் தொழிலாளிகளின்  சீரான துணி துவைக்கும் ஓசையை கவனித்தோம். அவர்கள் மூச்சிலிருந்து செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டில் வெளிப்படுத்தும் கீச்சான ஓசை வெளிப்பட்டது. அந்த ஒலியுடன் பக்கவாத்தியம் போல்

“ராம் நாம் சத்திய ஹை ”  என பிண ஊர்வலத்தில் வெளிப்படும் கோஷமும்  சேர்ந்து கொண்டது.”

“பிச்சைக்காரனோ,

மகாராஜாவோ,

செல்வந்தனோ,

ஏதும்மற்றவனோ,

கூட்டத்திலிருக்கிறானோ ,

காட்டில் பற்றற்ற ஒருவனுக்கோ

எந்த வேறுபாடும் இல்லை .

அவனது உள் இயல்பு எண்ணங்களற்று இருக்கும்.”

 

-அஷ்ட வக்கிர சம்ஹுதை.

துவக்கத்தில் லூடோவிற்கு ஆன்மீகத்தில் செயலிண்மை என்பது மெத்தனம்  என்ற கருத்துருவில்  தவறான புரிதலாக இருந்தது.

செயலிண்மையும் ,அசைவற்ற தன்மையும்  மிகவும் கடினமான தொடர்ச்சியான சாதானாவிற்கு பிறகான  ஒரு நிலை  என்றானதும் அதை நோக்கிய விழிப்புடன் தனது குருவுடனான பயணத்தின் வழியே  பிரசாத் பாபாவாகி பல மடங்களை, செயல்முறைகளை, யோகிகளை, சாதுகளை, மக்களை , அறியாமையை, மூடநம்பிக்கைகளை, அதிசியங்களை கண்டடைகிறார்.

அவரது அற்புதமான குரு ஆனந்த பாபாஜி  செல்லும் வழியெங்கும் மனித வாழ்வில் மகிழ்ச்சியை விதைக்கிறார்.

சமூகத்திற்கு அதற்கான செயல்முறையை அறிவியலாகவும், ஆன்மீகமாகவும் , சடங்கு முறையாகவும் புரிதலுக்கு மனிதர்களின் ஏற்றாற் போல் போதிக்கிறார் .

இந்நூல் புரியாத, புரிந்து கொள்ள வேண்டிய உலகின் இரு முக தரிசனத்தையும் தரிகிறது. தேர்வும் துவக்கமும் உங்களிடம்..,

*சிக்கல் இல்லாத தெளிவான மொழியாக்கத்திற்கு வாழ்த்துகள்.

“காட்சி தரும் உலகம் உண்மையானதோ

பொய்யானதோ

அது பற்றி எனக்கு

ஒரு எண்ணமுமில்லை.

என் இயல்பு ஆனந்தம் .

நான் சுதந்திரமானவன்.”


– மஞ்சுநாத்

நூல் தகவல்:

நூல் : துறவி (Sadhus : Going beyond the Dreadlocks.)

பிரிவு:  நாவல்

ஆசிரியர் : பாட்ரிக் லெவி (Patrick Levy)

தமிழில் : சத்யானந்தன்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   முதற்பதிப்பு 2017

விலை: ₹ 325

Kindle Edition:

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *