Exclusiveபுனைவு

விக்டர் பிரின்ஸின் “செற்றை” – திறனாய்வு


கு.கு.விக்டர் பிரின்ஸ் எழுதிய செற்றை என்னும் சிறுகதை தொகுப்பு சால்ட் வெளியீட்டில் வந்திருக்கிறது. பத்து கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியைக் மையமாகக்கொண்டு கதை சொல்கிறது. எல்லாமே எதார்த்தமான கதைகள். குறிப்பான வரலாற்று சூழல்களில் தன்னைப் பொருத்திக்கொண்டு கதைகள் விரிகின்றன.

தமிழ் இலக்கியப் பரப்பில் எதார்த்தக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. மேலே குறிப்பிட்ட பகுதி சார்ந்த கதைகளும் ஏராளம் வெளிவந்துவிட்டன. செற்றை கதைகள் அந்த வரிசையில் வந்தாலும் தனித்துவமான ஒரு பார்வையைக் கொண்டிருப்பதாலேயே கவனத்தை ஈர்க்கின்றன. இவை தருகின்ற தரிசனங்கள் இதுகாறும் நிறுவப்பட்டுள்ள பற்பல பதிவுகளை மீளாய்வு செய்யும் நிர்பந்தத்தை உருவாக்குகின்றன என்று சொல்ல முடியும். 

பொதுவாக, ஆதிக்கப்போக்குகளுக்கு எதிர்வினையாற்றுவோரையே இக்கதைகள் கதாநாயகர்களாகக் கொண்டாடுகின்றன. ஆனாலும் அது ஒரே சாதியில் கால்பாவி நின்றாடும் சிலம்பாட்டம் அல்ல. சாதிய மேலாதிக்கத்துக்கு எதிரான எதிர்வினைகள் பலவடிவங்களில் இங்கே வெளிப்பட்டதுண்டு. தமிழ்நாட்டோடு இணைய வேண்டி நடந்த போராட்டம், மண்டைக்காடு-புதூர் கலவரங்கள், மதமாற்றங்கள், மேலாடைக்கலகம் ஆகியன அவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்பாக இன்றளவாய் நீடிக்கும் மாறுபட்ட உரைவீச்சுக்கள் பெரும்பாலும் சாதிசார்பு கொண்டவையாகவே இருப்பது துன்பியல். நன்கறியப்பட்ட, மூத்த எழுத்தாளுமைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. எதார்த்தம் பேச விழைவோர் அறிவுநேர்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் அது அரிதாகத்தான் காணக்கிடைக்கிறது.

உண்மையைப் பேசுவோர் கூட முழு உண்மையைப் பேசுவதை தவிர்க்கிறார்கள். நிலவும் கனத்தச் சூழல் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களும் அதற்கு காரணமாக இருக்கும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. எனவே சொந்த பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படுத்தாத அளவுக்கு மட்டுமே உண்மை பேசுவது என்பது இன்றைய எதார்த்தக் கதைகளின் செல்நெறியாக மாறிவிட்டது. சாதிப்பெருமை பேசுவதையே அறிவெனக் கொண்டிருப்போர் வலதுசாரிப் போக்கோடு முழுப்பொய்களை எதார்த்தக் கதைகளாக்குவதைப் பற்றி பேசுவதற்கு ஏதுமில்லை. இதில் சிலசமயம் தொழிற்படும் முற்போக்கு மற்றும் புரட்சிகர சொல்லாடல்கள் கிச்சுக்கிச்சு    இரகம் மட்டுமே. 

எதார்த்தக் கதைகளில் இழையோடிக்கிடைக்கும் துன்பியல், பலவேளைகளில் வாசிப்பை வறட்சியான அனுபவமாக்கிவிடுகிறது. அடர்த்தியான அடக்குமுறைச் சூழல்களை, ஒடுக்குதல்களைச் சந்திக்கும் சமூகங்கள் எப்படி எதிர்கொண்டு, வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களோடும் சந்திக்கின்றன என்பது எதார்த்தக்கதைகளில் பெரும்பாலும் அகப்படுவதில்லை. சிறுசிறுவெற்றிகள், எதிர்வினைகள், நுட்பமான மீறல்கள் என்று இன்றளவாய் இயங்கிக் கொண்டிருக்கும் விடுதலைக் கூறுகளையே இக்கதைகள் விவரிக்க விரும்புகின்றன.

புளியமர நாற்காலி அப்படியொரு கதைதான். ராமன்பிள்ளை, சுதர்சன பிள்ளைகளின் ஜமீன் நிலங்களில் கூலிகளாக இருந்த குளத்துக்கரை செற்றை வாசியான கொச்சு செறுக்கனின் மகன் முண்டன், வில்லியம் வாலஸ் ஆக திரும்பி வந்து ஆற்றும் எதிர்வினை அப்படியொரு இரகம்தான். மனைவிதானம் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்குப் பழிதீர்க்க, காலம் கழிந்து வந்த போதிலும் கடமை நடக்கிறது. ஜமீன்தாரின் சமாதியருகில் செற்றைவாசிகளுக்கு கழிவறை கட்டுவது, அவர்களைக் கட்டி வைத்து அடிக்கும் புளிய மரத்தை வெட்டி நாற்காலி செய்து அமர்வது, மிடுக்கான உடையுடன் குளக்கரை செற்றைக்கு காரில் வந்து இறங்குவது என்று எல்லாமே மேலாதிக்க முனை உடைப்பையே முன்வைக்கின்றன.

அடக்குமுறை ஜமீன்களுக்கு அடியாள் சேவகம் செய்யும் தங்கப்பன் நாடார்களின் ஆவேசங்கள், வில்லியம் வாலஸ்களாய் விசுவரூபம் எடுக்கும் செற்றைவாசிகளின் முன் முணுமுணுப்புகளாய் காற்றில் கரைகின்றன. அடக்கு முறையின் அடித்தளங்களைப் பெயர்த்தெடுக்கும் பேராற்றல் கிறித்தவம் தழுவலால் பெறப்பட்ட கதையை இது பேசுகிறது. மதமாற்ற எதிர்ப்பு அரசியல் என்பது விழுந்து நொறுங்கும் அடக்குமுறைகளை அரண் செய்வதற்கான சதியை உட்கூறாகக் கொண்டுள்ளது என்பதற்கான சான்றாவணம் இக்கதை.

ஆனால் கிறித்தவ சமயத்துள் சாதிய மேலாதிக்கங்கள் எப்படி வேறு வடிவங்களில் தொடர்கின்றன என்பதை தனி தேவாலயம் கதை விவரிக்கிறது. சீர்திருத்த கிறித்தவம் தழுவிய பறையர்  சாதியினர், அதே திருச்சபையைச் சேர்ந்த நாடார் சாதியாரால் எப்படி நுட்பமான முறைகளில் மேலாதிக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதை தத்ரூபமாகக் காட்டும் கதைதான் தனி தேவாலயம். பிசப், பாஸ்டர், மார்ட்டின் போன்ற பணக்கார கிறித்தவர்களின் கூட்டணியில் அதிகாரமற்ற, பலமற்ற பறையர் சாதியாரின் தியாகங்களால் கட்டியெழுப்பப்பட்ட ஆலயம் அபகரிப்புக்கு உள்ளாகிறது என்பதை இக்கதை விவரிக்கிறது.

சாதி இழிவை அகற்ற சமய உறவை நாடும் பத்ரோஸ்களின் முனைவு, மார்ட்டின்களின் சூழ்ச்சியால் மீண்டும் தனித்தேவாலயம் அமைக்கும் தேவையை உருவாக்குவது அவலம். சாதிய ஒடுக்குதல்களால் கிறித்தவம் தழுவிய சாதியர், அடுத்தடுத்த அடுக்குகளில் இருந்து வந்த சக கிறித்தவர்கள் மீது பாராட்டும் இந்த வன்மம் சீர்திருத்த கிறித்தவத்தில் மட்டுமல்ல; கத்தோலிக்க மறைமாவட்டங்களிலும் அழுத்தமாகப் படிந்து கிடக்கிறது. சாதிவெறி கொண்ட பாதிரிகள், ஆயர்களோடும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களோடும், பணக்காரர்களோடும் கூட்டணி அமைத்துக்கொண்டு விடுதலைத் துடிப்புடன் இயங்கும் ஏனைய சாதியரை வளர விடாமல் அமுக்குவது, சாதிய ஆணவத்தோடும், ஆதிக்கப்போக்கோடும் செயல்படுவதும் எல்லா கிறித்தவ சபைகளிலும் வெளிப்படையாகவே காணக்கிடைக்கிறது. இங்கும் தேவையான நேரங்களில் திருச்சபையின் அதிகார அலகுகளைக் காட்டி மிரட்டுவதும், பிற சமயங்களில் முற்போக்கு அரிதாரம் பூசிக்கொள்வதும் ஒரு வாடிக்கையாக மாறிவிட்டது. வழக்கம் போலவே, எதிர்வினை ஆற்றுவோர் ஆஸ்டின், அஜித் போன்ற தாக்குதல்களுக்கும், பொய்க் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகிறார்கள். கிறித்தவ சபைகளில் நிலவும் சாதி மேலாதிக்கத்தை மிகவும் வெளிப்படையாக விவரிக்கிறது தனி தேவாலயம் கதை.

கத்தோலிக்கத் திருச்சபையின் போக்குகள் மீது பைபிள் அடிப்படையிலான விமர்சனங்களை முன்வைத்துப் பிறந்த சீர்திருத்தச் சபைகளாகட்டும், வார்த்தை புரளாமல் பைபிளைப் பின்பற்றும் பிரகடனத்துடன் உருவான பெந்தேகோஸ்தே சபைகளாகட்டும், சாதிய மனநிலைகளில் எந்த மாற்றமும் இல்லை. பறையர் சாதியை ஒதுக்கும் மனநிலையில் சக பெந்தேகோஸ்தே ஆன்மாக்களான நாடார்கள் இயங்குகிறார்கள் என்பதை சுவைபட சித்தரிக்கிறது வேநாட்டு அவியல் கதை.

கிறித்தவ நாடார் தவிர்த்த வேற சாதிகளைச் சார்ந்த திருமண சமையல்காரர்களை அச்சாதி மக்கள் ஏற்கவில்லை என்பதாக அந்த கதை விவரிப்பாகிறது. நாயர் என்றால் கூட தவிர்ப்பது உயர்வானதாக காட்டப்படுவது ஒரு புறமிருக்க, பிள்ளமாரு என்றால் ஏற்கத் தயங்கும் அகச்சாதி உணர்ச்சிக்கு பாஸ்டர் பைபிள் பிரசங்கங்களை முன்மொழிவது மதவாத சக்திகளின் அனுசரணைக்கு சுயநல அவசியம் இருப்பதே காரணம் என்று போகிற போக்கில் பதிவகிறது.

கிறித்தவ நம்பிக்கையில் தூய்மைவாதம் போதிக்கும் சபைகளும் அதன் பாஸ்டர்களும் கூட சொந்த சபையைச் சார்ந்த செபுலோன்கள் பறையர் என்பதால் ஏற்க விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக கிறித்தவர் அல்ல என்றாலும் கூட பிள்ளமாரை ஏற்கத் தயாராக இருப்பது கிறித்தவ நாடார் சாதியினரின் சாதிய அகம் குறித்தக் கூர்மையானப் புரிதலைத் தருவதாகும். தலித் சமூகத்துக்கு ஆதரவாக விவரிக்கப்படாத விவிலியங்கள் ஆதிக்க சாதியினர் என்றால் ஆதாரமாகத் தொழிற்படுவது, எதார்த்தத்தின் அப்பட்டமான படம்பிடிப்பாகும்.

அந்நியப் பிரதேசங்களிலிருந்து வரும் விருந்தினர்கள் வெளிப்படுத்தும் ஆனந்தத்தில், உள்ளூர் வன்மங்கள் பொடிப்பொடியாய் நொறுங்கி உதிர்கின்றன. அவியல் வெளிப்படுத்தும் குறியீட்டு முக்கியத்துவம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும். திறமை என்னும் கூர்வாள் கொண்டு சாதியச்செருக்கு என்னும் கூட்டுச் சதியை வெட்டிச்சாய்கிறார் விக்டர் பிரின்ஸ்.

கிறித்தவம் தழுவிய புலையர் சாதி தாயம்மாக்கள் சீர்திருத்த கிறித்தவ நாடார் சபைகளின் கடைக்கோடியில் மௌனமாக வந்து போகிறார்கள். அதியற்புத குரல்வளம் கொண்ட அவர்களின் பிள்ளைகளான தெரசாக்களுக்கு பாடகர் குழுவில் இடமில்லை என்பதை வெளிப்படையாக விவாதிக்கிறது எ கேர்ல் கொயர் கதை. அதிகாரப் போட்டியில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் பென்னட்டுகளும் வின்சென்டுகளும் சபைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பணம் செலவு செய்கிறார்கள். இவர்களின் பேச்சுக்கு பிசப்புகளிடம் செல்வாக்கு இருக்கிறது. பென்னட்டுகளுக்கான முதலிடங்களைத் தர மறுக்கும் இளம் பாஸ்டர்கள் பக்திமான்களாக இருப்பினும் ஊழியம் செய்ய முடியாது. புலையர் சாதிக் கிறித்தவர்கள் மீது நாடார் சாதிக் கிறித்தவர்கள் கடைபிடிக்கும் மேலாதிக்க முறைகளை விளக்குவதாக அமைந்திருக்கிறது இந்தக்கதை.

திறமையான சமையல்காரர் செபுலோன் செயிக்கின்றார் என்றால், திறமையான பாட்டுக்காரி தெரசா தோற்கும் கதை எ கேர்ல் கொயர். சாதி மேலாதிக்கத்தை பாதுகாத்து அதன் மேல் தனது தனிப்பட்ட ஆளுமையை நிலை நிறுத்தும் பணக்கார பென்னட்டுகளோடு கூடிக்குலாவி காசு பார்க்கும் கில்பெர்ட் பாஸ்டர்கள் மூன்றாண்டு ஊழியத்தை வெற்றிகரமாக நடத்த முடிகிறது. சமத்துவம் பேணும் கருத்தியல் தெளிவுடன் வரும் ராஜேஷ் பாஸ்டர்களால் ஊழியத்தை தொடங்கவே முடிவதில்லை.

காலகாலமாக மேலாதிக்கத்துக்கு உள்ளாகி இன்று சகல வசதிகளோடு வாழும் சாதிகளால் தங்கள் பங்கு அபகரிக்கப்பட்ட நிலையில் உள்ள சாதிகள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகள் சமூக நீதியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் உலகின் பல பாகங்களிலும் இட ஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் அதனை திறமையற்றோருக்கு தரப்படும் அநீதியான வாய்ப்பு என்று பரப்பில் செய்து வருகின்றனர் ஆதிக்க சாதியினர். ஆனால் அவர் அடைந்துள்ள வளர்ச்சி அவர்களின் திறமையினால் வந்ததல்ல என்பது, அது அடுத்தவர்களின் நியாயமான பங்கை அபகரிப்பதன் வழியாக வந்தது என்பது இதில் மூடி மறைக்கப்படுகிறது. இதுவரை திறமை பேசிய இந்தக் கும்பல் இப்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு நாடி வந்திருப்பது அயோக்கியத்தனத்தின் உச்சகட்டமாகும்.

மேலும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் இந்த அநீதிகளைக் கடந்து கண்டு வரும் சிறிய அளவிலான முன்னேற்றமும், சமயப்பரப்பில் செய்ய வந்த புற சக்திகள் அமைந்த உலகளாவியப் பின்புலம் மற்றும் அனுசரணைகளால் வந்தது என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளில் அலசுகிறார் விக்டர் பிரின்ஸ். அந்த வகையில் வில்லியம் வாலஸ் போன்ற இன்னொரு கதாபாத்திரம் தான் செற்றை சர்ட்டிபிகேட் கதையில் வரும் பிரியா.

கன்னியாகுமரி மாவட்டப் பகுதி தமிழ்நாட்டுடன் இணைந்த பின் இங்கே மொழிச் சிறுபான்மையினராகிப் போன ரகுநந்தன் நாயர்கள் தங்களின் சாதி நலன்களைக் காப்பாற்றிக் கொள்ள என்னென்ன சதி வேலைகளெல்லாம் செய்கிறார்கள் என்பதை செற்றை சர்ட்டிபிகேட் அம்பலப்படுத்துகிறது. வினோதமான திருமண முறையை கொண்டிருக்கும் இச்சாதியினர் இதர உழைக்கும் பிரிவினர் மீது ஆடிய சாதிய வெறியாட்டம் மனித இயல்போடு எவ்விதத்திலும் பொருந்திப்போகாத மிருகத்தனம் கொண்டதாகும். இவர்களது உடல் தேவைகளுக்கான ஏற்பாடுகளும் உலக நாகரிகம் கண்டிராத ஒழுக்க விளக்கங்களைக் கொண்டது. இதர சாதியாரின் பெண்டிர் மீது இவர்கள் தொடுத்திருந்த வன்புணர்வுத் தாக்குதல்கள் சமூகப் பாதுகாப்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க வினோதமாகும்.

மொழியால் சிறுபான்மை ஆனதும் பதறிய இச்சாதியார் மதத்தால் பெரும்பான்மையை கட்டமைக்க எடுத்துக்கொண்ட முனைவுகள் இங்கே நிலவும் மதப்பிரிவினைகளைக்கு களம் அமைப்பதில் முக்கிய வினையாற்றியது. இந்திய அளவில் உருவாகி வளர்ந்து வந்த வகுப்புவாத அரசியல் இம்மாவட்டத்தில் இவர்களின் இத்தேவைக்குச் சரியான துணைக்கருவியானது.

ரகுநந்தன் நாயர்கள் ஆட்டோ ஓட்டும் சந்திரன்களுக்கு அகன்ற பாரத போதையேற்றி அப்பாவி செற்ற சுகுகளுக்கெதிரான அம்பாக்கினர். தங்களை நாயர்கள் சமமாக நடத்துவதாகப் பெருமை கொள்ளும் சந்திரன்கள், அவர்களின் சதிமுறைக்கான பித்துக்கரங்களாக தாங்கள் ஏவப்படுவதை வினாயகர் சதுர்த்தி நன்கொடை வசூல்களில் உணர மறந்தார்கள். அடியாள் சேவகம் மட்டுமே அறிந்த சந்திரன்களுக்கு, முதலில் அன்னத்தைப் பறிக்கும் யுத்தவியூகங்கள் பயிற்றுவித்தார்கள் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களான ரகுநந்தன் நாயர்கள். அதன் ஓர் அங்கம்தான் கிறித்தவம் தழுவும் செற்ற சுகுக்களின் இந்து சாம்பவர் சாதிச்சான்றிதழ் பறிக்கும் விரட்டல்.

இட ஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி கிடைத்த பிரியா, சாதிச் சான்றிதழை கிழித்து முகத்திலெறிகிறார். அமெரிக்காவில் வசதியான வாழ்க்கை அவருக்காக காத்திருந்தது. இடத்துக்கேற்றார் போல் வேடந்தரிக்கும் ரகுநந்தன் நாயர்களும், பார்த்தசாரதிகளும் இனவெறி பாஸ்டர் பேட்ரிக்கின் சகிப்புத்தன்மை முகமூடிக்கு அரிதாரம் பூசும் வேலை பார்ப்பது அமெரிக்க அலங்கோலம். ஆனால் அங்கே கிறித்தவ நண்பர்களாக கூழைக்கும்பிடு போட்டுப்பிழைக்கும் கூத்தாடிகளான இவர்கள் முன் கிறித்தவம் தழுவிய சாம்பவர் பிரியாக்கள் மகா மிரட்டலான தோற்றப்பாடு கொள்வது அபாரம். சந்திரன்களோ நிம்மதி முக்கியம் என்று கிறித்தவம் தழுவும் தனது குடும்பத்துடன் ஐக்கியமாக, அகன்ற பாரத போதை தெளிவதாக கதை முடிகிறது.

மொழியடையாளம் பலவீனங்களால் மத அடையாளம் தரிப்பதும், அதுவும் பலவீனமடைவது கண்டு அதறப்பதற அதைக்காப்பாற்ற ஓயாது உழைப்பதும், தங்கள் சாதிய இருப்பை நிலைப்படுத்தும் முயற்சியே என்பதை இடத்திற்கேற்ப வேடம் புனையும் ரகுநந்தன் நாயர்கள் நிரூபிக்கிறார்கள். சந்திரன்களை அதற்கு கொம்பு சீவுகிறார்கள். தன்னுணர்வு தெளிந்து வரும்போது சந்திரன்கள், நாயர்களின் நுட்ப வலைகளிலிருந்து லாவகமாக விலகிப் போகிறார்கள்.

மறுபடியும் திறமை, புறமுகமைகளின் அனுசரணை ஆகியவற்றின் கூட்டில், இட ஒதுக்கீடு போனால் பொருட்டல்ல, மேலாதிக்கத்திலிருந்து சுயமரியாதைக்கு நகர்வதே தீர்வு என்று கிறித்தவம் தழுவுகிறார்கள் இந்து சாம்பவர்கள். கிறித்தவ சபைகளில் புலையர், பறையர், சாம்பவர் போன்ற தலித் சாதிகள் நாடார் சாதியினரால் மேலாதிக்கம் செய்யப்படுவது தொடர்கிறது. இது தனித் தேவாலயத் தேவைகளை உருவாக்குகிறது. ஆனாலும் ரகுநந்தன் நாயர்களோடு சகவாசமே கிடையாது என்னும் தீர்மானம் ஒரு மரபார்ந்த சமூக வன்கொடுமைக்கான எதிர்வினையாகும்.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்கிற நப்பாசையோடு கிறித்தவம் தழுவிடும் தலித்துகளுக்கான உரிமைகளை மறுக்கும் சட்ட ஏற்பாடுகளால் விடுதலைக்கான துடிப்புக்களை ஒடுக்கி விட முடியவில்லை. கிறித்தவம் தழுவுதல் அதன் ஓர் அங்கமாகும் என்கிற வரலாற்று வேர்களில் நிலைகொள்கின்றன செற்றை கதைகள். எனினும் இசுலாம் தழுவிய இதே சாதிகளின் நிலையை கிறித்தவ மதமாற்றங்கள் உறுதி செய்திட இயலவில்லை என்கிற எதார்த்தத்தை விளக்குகின்றன கிறித்தவ சபைகளின் நிலவும் சாதிப்பாகுபாடுகள் குறித்த கதைகள். இதை பூசிமெழுகாமல் அப்பட்டமான மொழியில் அப்படியே பிட்டுப்பிட்டு வைக்கும் விக்டர் பிரின்ஸ் எதார்த்தக் கதைசொல்லிகளுக்கு புதியதோர் தடம் காட்டுகின்றார்.

ரகுநந்தன் நாயர்களைப் போல நாடு முழுவதும் ஒரு சில சிறுபான்மைச் சாதியினர் தங்கள் மேலாதிக்கத்தை தொடர்ந்து தக்க வைக்க இந்து மதத்தை ஒரு கருவியாக கைகொண்டிருக்கின்றனர். தன்மானம், சமூக நீதி ஆகிய அடிப்படைத் தேவைகள் வேண்டி கிறித்தவம் நோக்கி நகரும் சாதிகள் தங்கள் இருப்பை நிர்மூலமாக்கி விடும் அபாயம் உணர்ந்த இந்த ஆதிக்க சாதிகள் எஞ்சியிருக்கும் எளிய பிரிவினர் மீதான தமது பிடியை இறுக்கிக் கொள்ளவும், வெளியேறியோர் மீதான வன்மத்தை தீர்த்துக் கொள்ளவும், இந்து மத அடிப்படைவாத கருத்தியலான இந்துத்துவத்தை வடிவமைத்தனர். அதன் அமைப்பு வடிவமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் என்ற பொதுவான பெயரைக் கொண்ட அதன் துணை அமைப்புக்கள் கூர்மையான செயல்திட்டங்களோடு உருவாக்கப்பட்டன.

வெறுப்பு பிரச்சாரம் ஒன்றைத் தவிர வேறெந்த சிந்தனைப் பரவலும் செய்யாத, வன்முறை மற்றும் கலவரங்கள் என்கிற வழிமுறை தவிர்த்து வேறெதையும் அறிந்திராத இவர்களின் சோதனைச் சாலையானது மண்டைக்காடு. இவர்களின் நாச இலக்காக முக்குவர் சாதி வரையறுக்கப்பட்டது. கன்னியாகுமரி கடலோரத்தில் அடர்ந்து வாழும் இந்த வேணாட்டு முக்குவர் வகையறா, போர்த்துக்கீசிய பின்னணியில் கிறித்தவம் தழுவியது. பத்மநாபதாசர்கள் என்று தம்மை பிரகடனம் செய்து தர்மராஜ்ஜியம் பரிபாலித்த திருவிதாங்கூர் மன்னர்கள் மீது மேலாதிக்கம் செய்து வந்த, அதே தர்மராஜ்ய முழக்கங்களுடன் களமிறங்கிய விஜயநகரப் பேரரசின் வடுகப்படைகளோடு முரண்பட்டு, போர்த்துக்கீசிய படையுதவி வேண்டி நின்ற பொழுதுகளின் ராஜதந்திர நகர்வுகளே வேணாட்டு முக்குவர்களின் கிறித்தவம் தழுவுதலுக்கான வரலாற்று பின்புலமாகும்.

சங்க இலக்கியங்களும், சிந்துவெளி அகழ்வாய்வுகளிலும் வெவ்வேறு பெயரில் குறிப்பிடும் கடல்சார் சமூகமான இத்தமிழ்சாதியின் வேணாட்டுக்கு முந்தைய வரலாற்று வேர்களை மறைக்கும், முற்போக்கு முகமணியும் பாசிச சக்திகள் இவர்களை மலையாள சார்பு கொண்டோர் என்று பேசி தங்கள் வரலாற்று அறிவீனத்தை வெளிப்படுத்த வெட்கப்படவில்லை. ஒரு மலையாளியான எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்ததும், அவரது நியமனத்தில் ஒரு மலையாளியே டிஜிபி-யாக இருந்ததும், மலையாளப் பெண்கள் மண்டைக்காட்டில் முக்குவர்களால் மானபங்கம் செய்யப்பட்டதாக செய்தி பரப்பப்பட்டதும், முருகேசன் தலைமையிலான காவிப்புரையேறிப்போன காக்கிகள் ஆறு முக்குவர்களைச் சுட்டுக்கொன்றதும், இம்மாவட்டத்தில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் சாகாக்களின் கட்டுப்பாடு பெரும்பாலும் ரகுநந்தன் நாயர் போன்ற மலையாளச் சக்திகளின் கைகளில் இருந்ததும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையல்ல.

ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் இச்சாதி மேலாதிக்கத்தின் கூட்டுக் கண்ணிகள் இந்து நாடர்களையே முக்குவர்களுக்கு எதிரான வன்முறைக் களங்களுக்கு கூர்தீட்டியிருந்தது. எனவே சவ ஊர்வலம் முக்குவர்களின் எதிர்வினையை இந்து நாடார்கள் மீது நிகழ்த்தும் திட்டமே என்று எல்லாரும் புரிதல் கொண்டதில் வியப்பேதும் இல்லை. ஆனால் உணர்ச்சி வெள்ளமெனப் பாய்ந்தோடிய அத்தருணம், பாதிரிகளும் பிசப்புகளும் கூட கைமீறிப் போய்விட்ட சூழலில் கைவிரித்த அத்தருணம், வன்முறை தவிர்த்து தகைமை காட்டிய முக்குவர்கள், கலவரத்துக்கு காரணம் யார் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

மனிதாபிமானம், நீதி வழுவா கடமையுணர்வு, சட்டம் தவிர்த்து தனது தனிப்பட்ட நம்பிக்கைகளும், கொள்கைகளும் காவல் பணியில் குறுக்கிடாது செயல்படும் பாங்கு ஆகியவற்றின் உருவகமாக சைம்மாந்து நிற்கிறார்கள் கருப்பு பேட்ஜ் அணிந்த பாக்யதுரை டிஎஸ்பி-கள். காக்கியுடுத்தி திரிந்தாலும், மூளையில் நிரம்பி வழியும் காவி கள்வெறிகொண்டு, விசிறியடிக்கப்படும் சில்லறைகளுக்காக ஏவப்பட்ட நாய்கள் போல் பாய்ந்து பிறாண்டும் வகைப்பாட்டில் முருகேசன் இன்ஸ்பெக்டர் தனிமனிதன் அல்ல. அந்த ஊடுருவி பரவும் சதிமரபின் இன்றைய நீட்சி தான் ஸ்டெர்லைட் போட்ட பிச்சைக்கு குரைத்தும் கடித்தும் விசுவாசம் வெளிப்படுத்திய சுடலை கண்ணு கான்ஸ்டபிள்கள்.

ஆர்.எஸ்.எஸ் -காரர்களை காக்கியணிந்து, லத்தியும் தூக்கிக்கொண்டு கவாத்து போட அனுமதிப்பதன் ஆபத்து என்ன என்பதை காலம் அதற்குள் மறக்க வைத்துவிட்டது வியப்பே. அனுமதி வழங்க உத்தரவிட்ட நீதிமன்றங்கள் மண்டைக்காட்டை மறந்துவிட்ட மர்மம் என்ன? போலீசுக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் வேறுபாடு இல்லாத தோற்றம் அனுமதிக்கப்படுவது அரசோடு மோதும் நிலைமைக்கு அந்த நோக்கமே இல்லாத, வன்முறையை எதிர்கொண்டாக வேண்டிய நிலைமைக்கு நிர்ப்பந்தப்படுத்தப்படும் மக்களைத் தள்ளிவிடும் என்பதை புரிந்து கொள்ள மறுக்கும் காரணம் என்ன? நாம் சொல்வது புத்தம் புதிய செய்தியல்ல. மண்டைக்காடு என்னும் மகா துன்பியான உதாரணம். கருப்பு பேட்ஜ் கதை சமகால சூழலில் நாட்டு மக்கள் யாவரும் வாசிக்க வேண்டிய வரலாற்று ஆவணம்.

மதமாற்றம் என்னும் வழிமுறையை கையாண்டு தங்களது சாதி மேலாதிக்கப் பிடியிலிருந்து வெளியேறியோர் மீதான வன்மம் தீர்க்கும் வெறி ஒருபுறம்; சக இந்து பாசம் என்கிற இல்லாத ஒன்றைக் காட்டி நாடகம் போட்டு, தங்கள் பிடியிலிருந்து மீதமுள்ளோர் வெளியேறிவிடாது பார்த்துக் கொள்ளும் தந்திரம் மறுபுறம். மதக்கலவரம் என்னும் பெயரில் எளிய சாதிகள் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை எஞ்சியிருக்கும் மதம் மாறாத அதே பிரிவினருக்கு தரப்படும் உளவியல் நெருக்கடியும் அச்சுறுத்தலும் ஆகும். இதில் அரசு முகமைகள், கருத்தியல் ஊடுருவல் என்னும் தந்திரோபாயத்தின் மூலம் களவாடப்படுவதும், அது தொடர்ந்து அனுமதிக்கப்படுவதும் அப்பட்டமான அத்துமீறலாகும்.

செற்றைவாசிகளான பவுல்களுக்கெதிரான சதிவேலைகளை குட்டிச் சாமி பண்ணையாரின் பிள்ளைகளான மோசே நாடார்கள் தங்கள் பரம எதிரிகளான விஸ்வம்பரன் நாயர்களோடு சேர்ந்தே செய்கின்றார்கள் தேவாலயங்களில் மட்டுமல்ல. அடகுடி செற்றைகளை அப்புறப்படுத்த வழக்குகள் உதவாவிட்டால், இடது கரை சாலை வரைபடங்களை மாற்றி சூழ்ச்சி செய்வதிலும் நேர்கோட்டிலேயே அவர்கள் பயணிக்கிறார்கள். கலெக்டர் ஆபீஸ்களில் தங்களை எரித்து மாய்த்தாலும் பவுல்களுக்கு பரிவு கிடைப்பதில்லை. இடது கரை சாபம் கதை மண்ணள்ளப்போடும் பேரப்பிள்ளையின் சாபத்தை சானல் ஈடேறாத கதைக்கான காரணமாக முன்வைத்து உலவும் செய்தியை கதையாக்கி, கண்களைக் குளமாக்குகிறது. பண்ணைச் சாதிகளின் கள்ளக்கூட்டும் பணபலமும் அரசின் துறைகளை வளைத்து செற்றை சாதிகளை பிய்ந்து எறிவது இன்றும் தொடரும் எதார்த்தமே. இதில் மதபேதங்கள் இரண்டாம் பட்சமாவதை மத போதை விரும்பும் எளிய சாதியார் அவதானிக்க கற்க வேண்டும்.

சாதியச் செருக்கெடுத்து அடிமைச் சாதிகள் சாதிகள் எழுதிய விடுதலை சாசமை தான் குமரி விடுதலை போராட்டம். ஒற்றைத்தலைமை  கட்டமைப்பு அரசியலில் இன்றைய உரைவீச்சாகும். இந்த வரலாற்று நிகழ்வு, முறுக்கேற்றும் வெள்ளையன் உரைகளைக் கொண்டாடுவதில்லை. தாமோதரன் நாயர்களின் பிடிதளரும் வன்மம் கொன்று குதறிய காளியன்களைக் கொண்டாடுவதில்லை. மொழி வழி மாநிலங்கள் வரையப்பட்ட பிறகு அந்த அரசியலைக் கைகொண்டு சாதிய வன்கொடுமைகளின் கொடுக்கொடிக்க நடந்து வென்ற இந்த ஈகஞ்செறிந்த போராட்டம், மேலாடைக் கலகம், கிறித்தவம் தழுவுதல் போன்று, சாதி மேலாதிக்கத்தை எதிர்த்து அடிமைச் சதியில் சிக்க வைக்கப்பட்டிருந்த சாதிகளின் வரலாற்று எழுச்சி. அதற்கெதிரான தாமோதரன் நாயர்களின் சதிகளை சித்தரிக்கும் கதைதான் காளியன் தோள். ஒரு பாலம் எப்படி தலைமுறை கடந்த ஈகச்சான்றாகி நிற்கிறது என்பதை வாசித்து முடித்தாலும் உணர்வடங்க மறுக்கிறது.

எத்தனை முறை வாசித்தாலும், மறுபடி வாசிக்கும் தூண்டுதல் விலகா கதை சீல் நங்கைகள். காட்டுப் பிரதேசம் வாழும் சமணம் தழுவிய அறவிகள், சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான இன்னொரு வடிவமாகி நிற்கிறார்கள். மேல்சாதி சாஸ்வதிகளின் தறவாடுகள் அடிமைச் சாதிகளின் முலைமறைப்பை தன்சாதிப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாக கருதிய அவலம் திருவிதாங்கூர் இராச்சியத்தின் வரலாற்றில் அழியாத களங்கம். சார்லஸ் மீட் போன்ற மிசனரிகள் காலகாலமான அடிமைச் சங்கிலியை உடைத்து நொறுக்கிய சமயம் கரைபுரண்டோடியிருக்கும் உணர்ச்சி வெள்ளத்தை தனது கதைமொழியில் கட்டிப்போட்டுக் காட்சிப்படுத்தும் விக்டர்பிரின்ஸ் சாதிய ஒடுக்குதலுக்கெதிரான சம்மட்டியடியாக கிறித்தவம் இயங்கிய காலகட்டத்தை கண் முன் நிறுத்துகிறார்.

கோட்டயம் வியாபாரிகளுக்கு வணிகலாபம் தந்த ஓர் அரசு உத்தரவாக குப்பாய அனுமதி அறிவிப்பானதும் குட்டி மாடன் பிள்ளைகளும் குதூகலிக்கிறார்கள். ஆணவம் தலைக்கேறிய தறவாட்டு வன்முறைக்கு கருக்கு மட்டை வீச்சோடு எதிர்வினை தருகிறார்கள் மாகாளிகள். சாஸ்வதிக்கு தரப்பட்ட அம்மணப் போதனை பச்சிலைக்காட்டை மலை கடந்து தின்னவேலிக்கு தப்பியோடச் செய்கிறது. மாகாளி சீல்நங்கைகள், மானங்காக்க கிணற்றுக்குழிக்குள் மௌனித்துப் புதைகிறார்கள்.

எங்கோ வடக்கில் பிராமணக் கூர் அறுக்க கிளம்பியச் சமணம் இங்கே மேற்கு மலைகளில் முடக்கப்பட்ட சனாதன எழுச்சிக்காலம் உருவாக்கியிருந்த ஆணவம், மரபழியா அதே சமணம் தழுவிய அறவிகளால் அடித்து நொறுக்கப்பட்ட கதை இது. சனாதன எதிர்ப்பு வடிவங்களின் வகைகள் பிரமிப்பைத் தருகின்றன. ஆசிரியரின் கதை சொல்லும் பாணி உச்சதிறம் கொண்டது என்பதற்கான ஆதாரம் சீல் நங்கைகள் கதை.

வெவ்வேறு வரலாற்றுத் தருணங்களை தரிசிக்கத் தரும் விக்டர் பிரின்ஸ், கிரிக்கெட் காலத்தையும் விட்டு வைக்கவில்லை. ரப்பர்பால் பால் கதை, கிராமத்து இளைஞர்கள் நகரத்து இளைஞர்களால் பரிகசிக்கப்படுவதையும் வழக்கம்போல் வெள்ளைக்கார ஆர்தரின் பாராட்டால் மனவூட்டம் பெற்ற அவர்கள் நகரின் ஆணவத்தை தோற்கடிப்பதையும் சொல்லும் கதை அது. இந்த ஜாலியான, இலகுவான கருவிலும் ஆணவத்துக்கு எதிரான அடிமட்ட எழுச்சியே பொருளாகிறது. வாசகமனமும் அதிலே எழுச்சி கொள்வதை தவிர்க்க முடிவதில்லை.

செற்றை சிறுகதைத் தொகுப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தைக் களமாகக் கொண்டு கதை சொல்வோர் நடுவில், அறிவுநேர்மை, சமரசமற்ற எழுத்து, நெஞ்சுரம் ஆகியவற்றால் தனித்துவம் பெறுகிறது. கதை சொல்லும் பாணி, எளிமை, விறுவிறுப்பான மொழி ஆகியவற்றால் தமிழ் எழுத்தாளர் நடுவே சிறப்பிடம் பிடிக்கிறது. இட ஒதுக்கீடு, புறமுகமைகள் சார்ந்து அகவலியகற்றல் போன்ற பொருள்களில் கருத்து வேறுபாடுகள் இருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. திரைப்படங்களில் காண்பது போன்று எளியோரின் எழுச்சியும், வெற்றியும் தென்படுவது போன்றும் சிலருக்குத் தோன்றக்கூடும். பல புரட்சிகர, முற்போக்கு படிமங்களை கூர்மையான விமர்சனங்களால் கட்டுடைக்கிறது இத்தொகுப்பு. ஆனால் அண்மைக் காலங்களில் வாசிக்கக் கிடைக்காத எதார்த்தம் நுங்கும்  துரையுமாக பொங்கிப் பெருகி வரும் பிரவாகம் செற்றை என்றால் அதிலும் தவறு இருக்கப்போவதில்லை.


நூல் தகவல்:

நூல் :   செற்றை

ஆசிரியர் : கு.கு.விக்டர் பிரின்ஸ்

வகை : சிறுகதைகள்

வெளியீடு :   சால்ட் 

வெளியான ஆண்டு :   டிசம்பர் - 2021

பக்கங்கள் : 196

விலை : ₹  250

நூலினைப் பெற :   +91 93 63 00 74 57

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *