பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்ட இந்நாவல், அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்திரத்தை உடைக்கிறது. சூழலால் ஏற்படும் புறநெருக்கடி அவர்களது இயல்பான உணர்வுகளையும் தனித்த குணாம்சங்களையும், விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் வேரறுத்து விடுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையானது என்பதை உணர்த்துகிறது. அகதிகளின் வாழ்க்கையைப் பெரும்பாலும் கழிவிரக்கத்திற்குரியதாகவே சித்தரிக்கும் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்டு இந்நாவல் எள்ளலும் உற்சாகமுமாக உயிர்த் துடிப்புடன் நகர்கிறது. நாவலாசிரியர் தனது பகடிநடையினூடே புகலிட வாழ்வின் நிச்சயமின்மையின் அவலத்தை நுட்பமாகக் கூறியிருப்பது வாசகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குகிறது. நாவல் என்ற வகைமையில் மட்டுமல்ல, படைப்பு என்ற நிலையிலும் ‘பிராப்ளம்ஸ்கி விடுதி’ முற்றிலும் ஒரு புதிய முயற்சி.
டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் (பி. 1972)
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர். பதினைந்து நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 29 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ‘Problemski Hotel' மற்றும் 'The Misfortunates' இவரது முக்கியமான நாவல்கள். இருபது வயதுகளில் துவங்கிய எழுத்துப் பயணத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான 'Problemski Hotel' நாவல் திருப்புமுனையாக அமைந்தது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. வாழ்வைப் பிரதிபலிக்கும் தொகுப்பு நூல்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைத் தொட்டு விரித்து, சமூகம் பற்றிய கூர் அவதானிப்போடு அப்பட்டமாக அங்கதச் சுவையுடன் எழுதும் படைப்பு முறைக்காக வாசகர்களால் கொண்டாடப்படுபவர் டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்.
அந்தச் சிறுவன் ஒரு அற்புதமான பின்புலத்தில் நின்றிருந்தான்: குப்பை மேட்டின்மீது, தனக்குள் எஞ்சியிருந்த வலுவையெல்லாம் திரட்டி ஊர்ந்து சென்று அவன் அடைந்த இடத்தில், உண்பதற்கேற்ற எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. தன் விரலைச் சப்பிக்கொண்டிருந்தவன் அதைவிட நல்லதாக ஏதாவது கிடைக்காதா என்று பரிதாபமாக அண்ணாந்து பார்க்கிறான். அந்த வேளையில் அவன் கண்களில் எதிரொளிப்பதை மட்டும் புகைப்படக் கருவியில் ஊடறுத்துப் பார்த்திருந்தால் அதன் ஆழத்தில் மரணம் தெரிந்திருக்கும். சற்று நேரத்திற்கு முன் அவன் எடுத்திருந்த வாந்தியின் எச்சம் வயிற்றில் ஒட்டி அந்த வெக்கைப் பொழுதில் தாங்க முடியாத நாற்றம் வீசியது. அவனுக்கு மேலும் மூன்று மணி நேர வாழ்வு இருக்கலாம் என்று தோன்றியது. நான்கு மணிநேரம் கூட. அதற்குமேல் இல்லை . அவன் ஐந்து மணிநேரம் உயிருடன் இருக்கக்கூடுமென்றால் ஒளியின் கோணமும் சூரியனின் நிலையும் மேலும் அற்புதமாக இருக்கும், ஆனால் அவ்வளவு நேரம் காத்திருக்க எனக்குத் துணிவில்லை . அவன் இறந்துகொண்டிருப்பதை நான் படமெடுக்க வேண்டும். இறந்த பின் அல்ல. அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். (நாவலிலிருந்து)
நூல் தகவல்:
நூல் : பிராப்ளம்ஸ்கி விடுதி
வகை : மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர் :டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்
தமிழில் : லதா அருணாச்சலம்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு: 2022
பக்கங்கள் : 120
விலை: ₹ 150
744