தயவு தாட்சண்ணியமில்லாத கண்டிப்பான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்ற க.நா.சுப்ரமணியம் இந்நாவலை 1946 ல் எழுதியுள்ளார்.

தினமணியில் இவர் எழுதி வந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை

ஐரோப்பியப் படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாக அறியச் செய்தவர்.தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பகுதிகளைப் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சூறாவளி, சந்திரோதயம், இலக்கிய வட்டம் போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.  இவரது முதல் நாவல் “பசி”.  மேலும் அசுர கணம்,  பித்தப்பூ, தாமஸ் வந்தார், கோதை சிரித்தாள் எனப் பல நாவல்களை எழுதியுள்ளார். பொய்த்தேவு இவரது பிரபலமான நாவல்களில் ஒன்றாகும்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக இந்நாவலைக் குறிப்பிடுகிறார். ஜெயமோகன் அவர்கள் தொகுத்த டாப்டென் நாவல் வரிசையில் ஆறாவது இடத்தில் இந்நாவல் உள்ளது. சி.சு.செல்லப்பா அவர்கள் இந்நாவலைப் படித்துவிட்டு ஒரு ராமாயாணத்தையோ, மகாபாரதத்தையோ, படித்து முடித்த மாதிரி ஒரு நிறைவு இருக்கிறது. இது ஒரு காவியம் என்று இந்நாவலைப் பாராட்டியிருக்கிறார்.

நடிகர் கமலஹாசன் இந்நாவலைச் சிறந்த நாவல் எனப் பரிந்துரை செய்திருக்கிறார். ஆசிரியர் 1979 ல் குமாரன் ஆசான் விருதும், 1986 ல் சாகித்திய அகாதெமி விருதும் பெற்றுள்ளார்.

மனிதனின் மனதில் எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும், இலட்சியங்களும் அடங்கி இருக்கின்றன. உருப்பெறாத,  நிலையில்லாத, ஒரு வடிவமில்லாத இவைகளையே தெய்வங்கள் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இன்று நாம் முக்கியமாகக் கருதும் ஒரு விஷயம் அல்லது பொருள் நாளை வேறொன்றாக மாறி விடுகிறது. இதன்மூலம் இந்த நொடியில் நாம் நினைத்த ஒன்று அடுத்த நொடியில் பொய்த்து விடுகிறது.  பொய்த் தேவாக (தெய்வங்களாக) மாறிவிடுகிறது. இதையே இப்புத்தகத்தின் தலைப்பு உணர்த்துகிறது.

லட்சிய கனவுடன் உழைப்பவர்களுக்கே உயர்ந்த அந்தஸ்து தரப்படுகிறது எப்பொழுதும். குப்பைமேட்டில் காகிதம் பொறுக்கும் சிறுவனுக்கும்  தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு முதலாளியாக வீற்றிருக்கும் மனிதனுக்கும் இலட்சியங்கள் ஒரே வீச்சில்தான் உருவாகின்றன. நம் வாழ்வின் முக்கிய தேவை எதுவோ அதை அடைவதே லட்சியக் கனவாக மாறுகிறது.அந்த லட்சியங்களை, தனது கனவை அடைய இடைவிடாமல் உழைக்கும், முயற்சி செய்யும் ஒருவரால் மட்டுமே தன் லட்சிய புள்ளியைத் தொட முடிகிறது.

சிலருக்குப் பணம் ஒரு பெரும் லட்சியமாக இருக்கும். சிலருக்கு முக்தி அடைவது லட்சியமாக இருக்கும். பணத்தையோ, முக்தியையோ லட்சியமாகக் கொள்ளாமல் மனதிற்கு நிறைவான வேறொருவிதமான வாழ்வு லட்சியமாக வெகு சிலருக்கு இருக்கும்.

இப்படி எதைப் பற்றிக் கொள்கிறோமோ அதுவே உண்மை தெய்வங்கள். நாம் பொய் என்று உதறிய ஒன்றில் உண்மை பொதிந்து இருக்கலாம். உண்மை என்று ஏற்றுக் கொண்ட ஒன்றில் பொய் கலந்து இருக்கலாம்.எதையும் ஆழ்ந்து உணர்ந்து அனுபவிப்பதே வாழ்க்கை.

இந்நாவல் காவிரி ஆறு ஓடும் சாத்தனூர் மேட்டுத்தெருவில் ஆரம்பிக்கிறது. எல்லா கெட்ட பழக்கவழக்கங்களாலும் சூழப்பட்ட கறுப்ப முதலிக்கும் வாய்த்துடுக்கிலும் உடல் வலுவிலும் மேட்டுத்தெரு ஆண்களுக்கு நிகரான வள்ளியம்மைக்கும்  மகனாகப் பிறந்தவர் சோமுப்பயல் என்கிற சோம சுந்தர முதலியார்.

மேட்டுத்தெரு மக்கள் அன்றாடம் அகப்படுகிற வேலையைச் செய்து பிழைப்பவர்கள். அங்கே வேலை செய்யாதவர்களும் உண்டு.  ஆனால் குடிக்காதவர்கள் என்று எவரும் இல்லை.

சாத்தனூர் மிகச்சிறிய ஊர்தான். ஆனால் அதற்குள் சுற்றிச் சுற்றி வந்து சோமு அறிவின் எல்லைகளைச் சீக்கிரமே எட்டிவிட்டான்.  அறிவும் அனுபவமும் விநாடிக்கு ஒரு வண்ணமாக  ஏற்பட்டு அவன் மனதைப் பண்படுத்திக் கொண்டு இருந்தது.

சாத்தனூரின் நடுமத்தியில் இருந்தது சிவன் கோவில்.  கோவிலிலுள்ள விக்கிரகங்களை விட கோவில் மணிதான் சோமுவின் மனதை அதிகமாகக் கவர்ந்தது. அது ஒரு தனி இசை. உள்ளத்தைக் கவர்ந்து உயிரையே உருகி ஓடச் செய்யும் இசை. தமிழிலே உள்ள பக்தி பாடல்களை எல்லாம் விடச் சிறந்த இசை அந்த கோவில் மணி ஓசை என்று சொல்வது மிகை ஆகாது.

அடுத்தது காவிரி ஆறு சிரத்தை வற்றாத சமுத்திரம். அதைப் பார்த்துக்கொண்டே யுகம் யுகமாகக் காலம் தள்ளலாம். ஆற்றிலே புதுவெள்ளம் வருவதைப் பார்ப்பவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்வார்கள். கடலில் கலப்பது எனும் ஒரு லட்சியத்தை நோக்கி எவ்வளவோ கஷ்டங்களையும் பொருட்படுத்தாது ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்புடையவர்கள்,  விரோதிகள்,அன்போ,  விரோதமோ இல்லாதவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவருக்கும் வாரி வழங்குவாள் காவிரி அன்னை.

இப்படி சாத்தனூருக்குள்ளேயே சுற்றிவந்து ஒவ்வொன்றைப் பற்றியும் அணுஅணுவாக ஆராய்ந்து சிந்தித்து, மற்றவர்களால் ஊதாரி கறுப்பனின் மகன் என்று இகழப்பட்டு வளர்கிறான் சோமுப்பயல்.

குழந்தைகளுக்கு ஐந்து வயது ஆனவுடன் விஜயதசமி அன்று மேளம் கொட்டி புது ஆடைகள் உடுத்தி அவர்களைப் பள்ளியில் சேர்ப்பதை ஒரு விழாவாகக் கொண்டாடுவார்கள் பணம் உடையவர்கள்.

ஆனால் மேட்டுத்தெருவில் பிறந்த சோமுவிற்கு இதெல்லாம் கிடைக்குமா?  ஆனால் சோமு தன் மனதில் தானும் படிக்க வேண்டும், கடை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று லட்சியங்களை வைத்துக் கொண்டான்.

செல்வந்தர் ராயர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து அவரிடம் நன்மதிப்பைப் பெற்று கல்வி கற்று ராயரின் மருமகன் சாம்பமூர்த்தி ராயரால் மளிகைக்கடை வைத்துக் கொடுக்கப்பட்டு அதில் படிப்படியாக முன்னேறுகிறார். ஆனாலும் அவர் மனம் எதிலும் திருப்தி அடையாமல் எதையோ எண்ணி ஏங்குகிறது. அவர் வேலை நிமித்தமாகக் கும்பகோணத்தில் குடியேறி விட்டாலும் சாத்தனூர் கோவிலின் மணியோசை அவரின் மனதின் உள்ளே கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதிலிருந்து விடுபட அவர் என்ன செய்தார்?  எப்படி சோமுப்பயலாக இருந்து சோம சுந்தர முதலியாராக மாறி பின் சோமுப்பண்டாரமாக இறந்தார் என்பதை இக்கதையில் மூன்று பகுதிகளாகப் பிரித்து இடைவேளை விட்டுச் சொல்லப்பட்டு இருக்கிறது.

அடுத்து பணத்தைப் பெரிய விஷயமாக மதிக்காத பெரிய ராயர் தான தர்மங்களிலும் விருந்து உபசாரங்களிலும், தன் மகளின் திருமணத்திலும் செல்வங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்.பெரிய ராயரின் மறைவிற்குப் பின் அவரது மருமகன் சாம்பமூர்த்தி ராயரும் அதே வழியில் சென்றதால் செல்வங்களை மொத்தமாக இழந்து தன் மனைவியின் மறைவிற்குப் பிறகு சாத்தனூரை விட்டு வெளியேறி பண்டரிபுரம் சென்று இறைவன் பாதத்திலேயே தன் உயிரை விடுகிறார்.

இந்த இருவரின் முக்தியும் வேறு வேறானவை.  சோமசுந்தர முதலியாருக்கு ஏற்பட்ட முக்தி சிந்தனையாலும், செயலாலும் ஏற்பட்டது. ராயருக்கு ஏற்பட்ட முக்தி பக்தியால் ஏற்பட்டது.

மனித வாழ்க்கை என்பது மகத்தான வரம். அதனாலேயே அவ்வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் எல்லோரும் மகத்தான நோக்கங்களோடு இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்ல விடப்பட்ட தரும தோணிதான் கள்ளுக்கடைக்குச் செல்பவர்களையும் அழைத்துச் செல்கிறது.

வாழ்க்கை என்பது எல்லோருக்காகவும்,  எல்லாவற்றிற்காகவும் தான். எல்லாவற்றையும் நோக்கிப் பாதைகளைக் காட்டும் உட்பிரிவுகளைக் கொண்டதுதான் வாழ்க்கை. ஒரு மனிதன் உணர்ச்சியைவிட அறிவுக்கும் , மன எழுச்சியை விட சிந்தனைக்கும் தான் தம் வாழ்வில் இடமளிக்க வேண்டும்.

இந்நாவலில் சாத்தனூர் எல்லைகள் பற்றியும், காவிரி ஆறு பற்றியும், மேட்டுத்தெரு பற்றியும் விரிவாக முதல் ஆறு அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நீளமான விவரிப்பா என்று எண்ணிக்கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கும்போது தான் அந்த விவரிப்பின் அவசியம் புரிகிறது.

பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்கிற இடத்தில் எல்லாவற்றையும் பொசுக்கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக் கூடிய மனோபாவம் கொண்ட மனிதனின் வாழ்க்கையை அக்கு வேறாக ஆணி வேறாக அவனின் நல்லது கெட்டதுகளை அலசி அதிலிருந்து அவன் எவ்வாறு மீள்கிறான் என்று விரிவாகவும், ரசிக்கும்படியும், பிரமிக்கும் படியும் பேசும் நாவல் இது.

கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் மனதில் பதிந்து நீங்காமல் நம்மை யோசிக்க வைக்கின்றன. நாவலைப் படித்து முடித்த பின்பும் அதன் தாக்கம் சாத்தனூர் கோவிலின் மணியோசையும் காவிரியின் சலசலப்பையும்  நம் நினைவுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நன்றி!


ஜெயா நவி 

நூல் தகவல்:

நூல் :  பொய்த்தேவு

ஆசிரியர் : க.நா.சு சுப்ரமண்யம்.

வகை :   நாவல்

வெளியீடு : முதல்பதிப்பு – வெளியிட்ட பதிப்பகம் தகவல் இல்லை. 

வெளியான ஆண்டு :    முதல் பதிப்பு : 1946

மறு பதிப்புகள் :

2007 by அகரம்

2013 by புதுப்புனல்

2015 by நற்றிணை பதிப்பகம்

March 1st 2018 by டிஸ்கவரி புக் பேலஸ்

November 2004, December 2005, 2012 by காலச்சுவடு

2017 by அடையாளம்

பக்கங்கள் :   296 (காலச்சுவடு பதிப்பு)

விலை : ₹  350 ( As on காலச்சுவடு பதிப்பு)

கிண்டில் பதிப்பு :

க.நா.சு குறித்து அறிய

  மற்றொரு விமர்சனம் By மஞ்சுளா பொய்த்தேவு – நாவல் விமர்சனம்

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *