கோவேறு கழுதைகள் எனும் நாவலின் மூலம் தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் அழுத்தமான தடம் பதித்த எழுத்தாளர் இமையம் அவர்களின் நெடுங்கதை தான் பெத்தவன்.  இது ஒரு மிக முக்கியமான கதையாகும். வட மாவட்டங்களில் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கும் சாதியக் கட்டப்பஞ்சாயத்து முறை தன் சாதித் தூய்மையைப் பாதுகாக்க எடுக்கின்ற பல மனித உரிமை மீறல்களை இந்த கதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது என்று ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னுரை தந்திருக்கிறார்கள். மக்களிடம் சென்று சேர வேண்டிய ஒரு கதை என்று சொன்னதில் துளியளவும் மாற்றமில்லை.

ஒரு அழகான கிராமம். அங்கு ஒரு தாய் தந்தை, தந்தையினுடைய அம்மா, இரு பெண் குழந்தைகள்.  தங்கைக்கு கால் சிறிய ஊனம். அப்பா பெயர் பழனி அம்மா துளசி பேசப்படும் தாபாத்திரம் பாக்கியம் அவருடைய தங்கை செல்வராணி, அந்த பாட்டியின் பெயர் சாமியம்மா. அழகான கதைப் பெயர்கள்.   திருமணமாகி இருபது வருடம் கழித்து பிறந்த முதல் பெண் குழந்தை அவள். அவளுக்கு வழக்கமான ஒரு பெயரை விடாமல் பாக்கியம் என்று விட்டதாக அந்த பழனி கதாபாத்திரம் பேசுவது பெண்ணின் மேல் கொண்ட அன்பை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைகிறது.  துளசி கதாபாத்திரம் நறுமணம் வீசத் தான் செய்கிறது.

இவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த சேர்ந்தவர்கள்.பாக்கியம் தன் சாதியை விட குறைந்த சாதியை சேர்ந்த ஒரு பையனை கல்லூரியில் படிக்கும்போது விரும்புகிறாள். போலீசில் எஸ்.ஐயாக வேலை பார்க்கிறான் அந்தப் பையன். இப்படி இருந்தும் அவளை அவளுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று சொல்லி அந்த ஊர் ஏற்படுத்துகின்ற களேபரங்களை நம் கண் முன்னே கொண்டு வருகின்றார் இமையம்.

படிக்கவே இயலாத, பார்க்கவே இயலாத வார்த்தைகளையும் காட்சிகளையும் அமைத்து எவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்கு தம் எழுத்து மூலம் கண்முன்னே காட்சிமைப்படுத்துகின்றார். சாதிதான் முக்கியம் என்று ஊர் கூடி நின்று அந்தப் பெண்ணை அவமானப்படுத்தும் காட்சிகளைப் படிக்க கண்களில் கண்ணீர் சொரியத்தான் செய்கிறது. இதேபோன்று மாற்று சாதியினரை திருமணம் செய்து ஆண்களை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதை துளசி கதாபாத்திரம் பேசுவதும் போது பெண்ணென்றால் ஏன் இந்த இளக்காரம் என்று நமக்கே கோபம் வரத்தான் செய்கிறது.

பக்கத்து ஊர்களில் பெண்களுக்கு ஏற்படுத்திய அவமானங்களைச் சொல்லி அதே போன்ற அவமானங்கள் தன் மகளுக்கும் நடந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் பழனி எடுக்கும் முடிவே கதை.

காட்சியமைப்புகளும் வசனங்களும் நம்மை அந்த ஊருக்கு கூட்டிச் சென்று இவ்வளவு அபத்தமாக இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஊர் இருக்கின்றதா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு காட்சி வைத்திருக்கின்றார்.  இது ஒரு நடந்த கதையின் புனைவுதான் என்றாலும், இது போன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதை நமக்குச் சொல்லி சாதி வக்கிரத்தை தோலுரித்துக் காட்டுகின்றார்.  உண்மையில் இந்த கதையை படித்தபோது சாதியை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரு மேம்போக்கு எண்ணம் தானாகவே தோன்றிடுகின்றது.

இந்த கதை பேசும் அந்தக் சாதியைத் தூக்கி எறிதலை அந்தச் சமூகம் சுவீகரிக்க வேண்டும். எத்தனைதான் படித்து முன்னேறிக் கொண்டிருந்தாலும் இன்னமும் இந்த சாதியை தூக்கிக் கொண்டு அலைவது வெட்கக்கேடானது. இந்த கதை படித்த பின்பு இனிமேலாவது எந்தச் சாதியையும் தூக்காமல் இருந்தாலே அதுவே இந்த கடைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஒரு பெண்ணின் உயிரை விட சாதிதான் முக்கியம் என்பது எவ்வளவு பெரிய அபத்தம்.

… மாற்றம் நிகழ இது போன்ற படைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இதனைக் கொண்டு சேர்த்து ஒரு விழிப்புணர்வைத் தூண்டி சாதி என்பதெல்லாம் வெறும் போலி என்பதை அவர்களுக்கு அறிவுறுத்துவது அவசியமாகும்.

வாசிக்க வேண்டிய கதை இது.


ப.தாணப்பன்

 

நூல் தகவல்:

நூல் : பெத்தவன்

வகை :  குறுநாவல்

ஆசிரியர் : இமையம்

வெளியீடு :  பாரதி புத்தகாலயம் (முதல் பதிப்பு) , க்ரியா வெளியீடு (மறுவெளியீடு – 2019)

வெளியான ஆண்டு:  முதல் பதிப்பு 2013

பக்கங்கள் : 40

விலை:  ₹ 60

மேலதிக தகவல்
இந்தக் குறுநாவல் மு. களஞ்சியத்தின்  இயக்கத்தில் ‘முந்திரிக்காடு’ என்ற பெயரில் திரைப்படமாகியது.

இத்திரைப்படத்தை ’ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரியாக  கதையின்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக நடித்தவரின் பெயர் புகழ். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன்.

இசை – ஏ.கே.பிரியன், ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாசன், கலை இயக்கம் – மயில் கிருஷ்ணன், பாடல்கள் – கவி பாஸ்கர், இளைய கம்பன்.

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *