றக்குறைய இருபதுவருட இடைவெளிக்குப் பிறகு ஒரு மிக அழகான, ஆழமான, அனுபவத்தை தரக்கூடிய  புத்தகம் வாசிக்க நேர்ந்தது. ஏறக்குறைய 700 பக்கங்கள் கொண்ட புத்தகம். பார்க்கவே பிரமிப்பூட்ட கூடியதாக இருந்தது.

இந்த புத்தகம் ஜார்ஜ் இவனோவிச் குர்ஜிப் என்ற ஞானியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது.

நூலை வாசிக்க ஆரம்பிக்கும் பொழுது ஒரு கதைகேட்க்கும் மனநிலையே இருந்தது. ஆனால் , வாசிக்க வாசிக்க எப்போது எழுத்தாளரின் கையை விடுவித்துக்கொண்டு கதை நாயகனுடன் நடக்க ஆரம்பித்தோம் என்பதே தெரியவில்லை. குர்ஜிப்பின் தேடல்கள், சவால்கள் நிறைந்த பயணங்கள், ஒரு சக பயணியாக நம்மை நுரைத்து பொங்குதலும், தணிந்து வீழ்தலுமாகவே பயணிக்கவைக்கிறது.

மேலும், இது ஒரு ஞானியின் கதை என்பதால் ஆன்மிகம், தேடல் என்ற வார்த்தைகளுக்குள் மட்டும் அடைத்து விடமுடியாது என்றே தோன்றுகிறது. எந்தஒரு தேவ தூதனாலும் முன்மொழியப்பட்டு குர்ஜிப் பிறக்கவில்லை. மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனக்கு கொடுக்கப்பட்ட பின்னூட்டங்களின் சுய புரிதல்களினால் தன்னை கட்டியமைத்துக் கொண்டவர். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட, எதிகொண்ட பயணங்களும், சவால்களும், மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, தேடல், ஆன்மிகம் எனும் கட்டங்களைத் தாண்டி அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது. ஆசிரியரின் சொல்லாடலும், நேர்த்தியும், அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், குர்ஜிப் பற்றி தெரிந்தவர்களுக்கு இது அவரைப்பற்றிய இன்னொரு நூல். அவரை தெரியாதவர்களுக்கு குருஜிப்பை பற்றியும், சுய புரிதலையும் இணைத்தே கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் தான் புதைந்து போகவும், புதையல் தேடவும் முடியும். நான்காம் தடத்திலிருந்து ஐந்தாம் தடம் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.

வாழ்வின் பேரலைகள் விநோதமானது.

படித்துமுடித்து, புத்தகத்தை மூடிவைக்கும் பொழுது, நம்மை அறியாத ஒரு பயண களைப்பு, அடுத்த நாளின் பயணம் எப்படியெல்லாம் இருக்கும் என்ற எண்ணத்தில் நிகழ்காலத்திற்குள் வர சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், குர்ஜிப் ஒரு பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு சொந்த ஊர் செல்லும் போது , “ எல்லோரும் கிளம்பிட்டாங்க, நாம எங்க போறது” என்கிற பதைபதைப்பு வந்து மறைவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த முதல் பகுதி இமயமலை சாரலில் முடிவடைகிறது. “ அச்சச்சோ, என்னைய கொண்டுபோய் தமிழ்நாட்டு எல்லைலயாச்சும் விட்ருங்க, நான் பஸ் பிடிச்சு வீடுபோய் சேர்ந்துகிறேன்” – இப்படி உணர்வு தான் இருந்துகொண்டே இருக்கிறது.

ஒரு இடத்தில், ஒரு மடாலயத்தினுள் நடக்கும் இசையும், நடனமுமான வழிபாட்டை ஆசிரியர் விவரிப்பார்.. அத்தனை அழகு. இசையை பேனாவில் மையாக ஊற்றி பேப்பரில் படரவிட்டது போல இருந்தது. அதை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வை விவரிக்கவே தெரியவில்லை. அது ஒரு தெய்வீக உணர்வு என்றே சொல்லவேண்டும்.

 “என்னுடைய சுய புரிதலை இன்னொருவருக்கு கடத்த முயற்சிப்பது என்பது ரொட்டிகளைப் பற்றி விஸ்தீரணமான விளக்கத்தின் மூலம் ஒருவனை பசியாற சொல்வதைப் போன்றது “

– இது தான் இது தான் எல்லாமே – இந்த வரிகளை விட வேறு எதை சொல்லிவிட முடியும் என்றுதெரியவில்லை.

 எப்போதும் இல்லாமல் இந்த புத்தகம் என்னை ஏன் எழுத தூண்டியது என்று தெரியவில்லை . வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கலாம். நிச்சயம் ஒரு நல்ல ஷிப்ட் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

எப்படி சன்னலோர பயணமும், இளையராஜாவின் இசையும் இனிமையானதோ.. அவ்வளவு இனிமையானது வாசிப்பும். இந்த புத்தகம் அதை இன்னும் அழகேற்றுகிறது.


நூல் தகவல்:

நூல் : நான்காம் தடம் 1 – தேடலும் விட்டு விடுதலையாதலும்

 (ஒரு போக்கிரி ஞானியின் கதை)

வகை :  வாழ்க்கை குறிப்பு

ஆசிரியர் : இரா.ஆனந்தக்குமார்

வெளியீடு : விஜயா பதிப்பகம்

வெளியான ஆண்டு:  ஜனவரி 2018

பக்கங்கள் : 

விலை:  ₹  600

அமெசானில் வாங்க :