நூல் விமர்சனம்புனைவு

மனக்கூடு – விமர்சனம்


“தனக்கான தூரங்களை

இதுவரை ஆராயவுமில்லை

தான் கடந்த தூரத்தை

அளந்ததுமில்லை ”

( பறத்தல் இனிது -பக் 20 )

விரல் வழி கசியும் இவ் வரிகளின் வழியே தான் அனிதா சந்திரசேகரின் மனக்கூடு என்ற கவிதை தொகுப்பை கடந்து செல்ல முயல்கிறேன்.

“வயல்களுக்கு மேல்

வாய்க்கால்களுக்கு மேல்

குளங்களுக்கு மேல்

குன்றுகளுக்கும் மேல்

நகரங்களுக்கு மேல்

எண் திசைகளிலும் பறக்கின்றன “

(பறத்தல் இனிது. -பக் 20 )

எழுத்தும் ஒரு பறவைதான். அதன் திசைகளை யாரறிவார்? அதன் வனப்பையும், வசீகரத்தையும் பல அளவுகளிலும், பல வண்ணங்களிலும், பல எண்ணங்களாகவும் காலம் முழுவதும் எழுதிக் கொண்டே இருக்கும் எழுத்தாளர்கள் உலகம் முழுக்க இருந்து கொண்டே இருக்கின்றனர். உலகம் முழுக்க எழுதித் தீர முடியாத கதைகளும், கவிதைகளும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த உலகம் இருக்கும் வரை வித விதமான எழுத்துக்களும், அதை எழுதக் கூடிய எழுத்தாளர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.

“அப் பறவைகள் பறத்தல்

இனிதினும் இனிதே “

எல்லையற்ற சுதந்திரத்தை உடல் வழியே பெற முடியாததால், அதை தன் நித்திரையின் வழியே தன் ஆன்மாவுக்குச் சொந்தமாக்குகின்றன அனிதாவின் வரிகள்

“காரிருள் மை படர்ந்திருக்கும்

சபிக்கப்பட்ட இரவொன்றில்

சலனங்களின் உருவமாய்

தோற்றம் கொள்கிறது

என் ஆன்மா “

(நித்திரையின் வழியே – பக் 24)

ஒவ்வொரு துளியாக அன்பைச் சேமித்துக் கட்டப்பட்ட வாழ்வின் அஸ்திவாரத்தில் இன்றைய மேட்டிமையான கனவுகள் நாகரீகம் என்ற பெயரில்  புல்டோசராக வந்து இடித்துத் தள்ளுகின்றன.

“டியர் என்ற அழைப்பில்

ஆழமில்லை

மம்மி என்ற அழைப்பில்

தாய்மை ஒன்ற வில்லை “

(ஒரு துளி அன்பு- பக் 71)

ஆல்கஹால் புன்னகையையும்,

அடுக்குமாடி குடியிருப்பையும்.

குறுஞ்செய்தி வாழ்த்துக்கள்ளையும்

களைந்து ஒரு துளி அன்புக்காக புத்தனின் ஞானம் (நிர்வாணம் )போல்

அதன் போதி மரங்களை தேடுகிறது.

“தாயுறக்கம் “என்ற கவிதையில் (பக் -86)

ஒரு நீண்ட பேருந்துப் பயணத்தின் வழியே தன் தோள் மீது சாய்ந்து உறங்கிப் போன அம்மாவை தனது மனத் தொட்டியில் தாலாட்டுகிறார்.

“அம்மாக்கள் மகள்களாக

இப்படி

ஒரு பேருந்துப் பயணமொன்றே போதுமானதாக இருக்கிறது. “

என்று பேருந்துக் குலுங்கல்களுக்கிடையே அவள் விழித்து விடாதவாறு சமன் செய்து அந்தக் கணத்தை உயிர்ப்பிக்கும் சொற்களுக்குள் சற்று நேரம் ஒவ்வொரு மகளும் தாயாக மாறும் அந்த அதிசய தருணங்கள் நம் விழிகளுக்குள் வந்து விழுந்து வியப்பை ஏற்படுத்துகின்றன.

வசீகரமான நடையில் தனது கவி மொழியை ஆங்காங்கே தூவிச் சென்றாலும் சில இடங்களில். மிகப்பெரிய இலக்கிய அறிவைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல்

தன்னைச் சுற்றி நடக்கும் சிறு சம்பவங்களைக் கவனித்து, அதைப் படைப்பாக்கம் செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

பரமக்குடியைச்  சேர்ந்த அனிதா சந்திர சேகர் வெகுஜன இதழ்களில் எழுதி வருபவர் என்றாலும், அதில் தனக்கான ஒரு இடத்தையும் பெற்றிருக்கிறார்.. ஆனால், தனது திறந்த மொழியை லாவகமாகவும் கையாளத் தெரிந்தவர் என்பதால் நேரிடையாகவே வாசக மனங்களை ஈர்த்துக் கொள்ளும் ஒரு பாணியில் எழுதி வருகிறார்.

அனிதாவின் பெரும்பாலான கவிதைகளில் வாழ்வில் நிகழும் சாதாரண சம்பவங்கள் கவிதையின் வடிவில் காட்சிகளாக விரிகின்றன.

சுப்பம்மாள் பாட்டி! (பக் 77)

“ஓலைக் கூடையைத் தலையில் சுமந்தபடி

தண்டங்கீரை அரைக்கீரை முருங்கை கீரை

எனக் கூவி கூவி விற்பாள் பாட்டி

சீசன் காலங்களில்

பழங்களும் நொங்கும் கிழங்கும் விற்பாள்

 

அவரிடம் ஐந்து பத்து ரூபாய்க் கெல்லாம்

அம்மா பேரம் பேசுவதுமுண்டு

அந்த பாட்டியும் அப்பாவியாய் கூறுவாள்

இதுல என்ன தாயி எனக்கு கட்டுமென்று

 

இன்றோ காலத்தின் சுழற்சியில் குளிரூட்டப்பட்ட

விலைவில்லை ஒட்டப்பட்டிருக்கும்

காய்கறிகளையும் பொருட்களையும்

வாய் மூடி வாங்கிச் செல்லும் போதெல்லாம்

அவ்வப்போது இல்லாவிட்டாலும்

எப்போதாவது நினைவுக்கு வந்து விடுகிறாள்

அந்த சுப்பம்மாள் பாட்டி ! “

வாழ்வின் ஒரு சிறு காட்சி, எதார்த்தம், மனவிளைவு, என்று அழகாய் நினைவில் பதிந்து கொள்ளும். இந்த கவிதை போல் நிறைய கவிதைகள் வெளிச்சத்துக்கு வராத விளக்கைப் போல் இந்த தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. இவரது தனித்துவம் இவரது திறந்த மொழியின் வழியாக வே அறியப்படுகிறது.

ஆரூர் தமிழ் நாடன், அமிர்தம் சூர்யா, பதிப்பாசிரியர் ம. வான்மதி இவர்களின் அணிந்துரை, வாழ்த்துரை, பதிப்புரைகளுடன் இந்த தொகுப்பு பாவைமதி வெளியீடாக வந்திருக்கிறது.


கவிஞர் மஞ்சுளா.

நூலிலிருந்து :

இந்த ஈரத் தொகுப்பிற்குள் பலமுறை நடந்து பார்த்தேன். பரவச சாரல் இதயம் நனைத்தது.

இவரது எழுத்துக்கள் அன்பின் நிறத்தோடும் மானுடத்தின் நறுமணத்தோடும் மலர்ந்து வருவதால் இலக்கிய உலகின் பெருங்கவனத்தை பெருமிதமாய் தன் பக்கம் திருப்பவும் செய்கிறார். இந்த சமூகத்தை பகலுக்குள் நனைத்தெடுக்கும் ஆவலோடு யோசிக்கிறார் அவற்றையே கவிதையாக நெய்கிறார். அதனால்தான் தன் வாழ்வின் எண்ணங்கள் இவரது எழுத்துக்களில் அபாரமாக படிகின்றன.

இவருடைய கவிதைகள் மேன்மையான சிந்தனைகளை மிருதுவாக பிரகடனம் செய்கின்றன அது அவருக்கு வைத்திருக்கிற வரம். இதயம் துடிக்கும் கவிதைகளையே அனிதா எழுதுகிறார். அதனால் அவர் இதயம் கவிதையாகவே துடித்து கொண்டிருக்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் தன் கவிதைகளால் தனக்கொரு சிம்மாசனத்தை உருவாக்கி கொண்டிருப்பது மட்டுமில்லாது சிறுகதைகள் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல தளங்களிலும் தன் ஆளுமையை நிலைநிறுத்தி வரும் கவிதாயினி அனிதா சந்திரசேகர் வரும் நூற்றாண்டுகளையும் தன் வற்றாத கவிதைகளால் வசப்படுத்துவார்.

– ஆரூர் தமிழ்நாடன்

நூல் தகவல்:
நூல் :

மனக்கூடு

பிரிவு : கவிதைகள்
ஆசிரியர்:  அனிதா சந்திரசேகர்
வெளியீடு: பாவைமதி வெளியீடு
வெளியான ஆண்டு : ஜனவரி 2021
பக்கங்கள் : 88
விலை : 80
தொடர்புக்கு: +91-98417 00087

 

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *