கொள்ளையடிப்பதை தொழிலாகக் கொண்ட கூட்டங்கள்…!

வெள்ளைக்காரர்கள் ஆட்சி அமுலில் இருந்த காலம்…!

இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக திருட்டு கொள்ளை அடிக்கும் இனத்தவர்கள் வாழும் பகுதிகளை குறி வைத்து அங்கே காவல் நிலையம் அமைத்து… பொறி வைத்து அந்த கும்பல்களை பிடித்து… ஆயுதங்களை பறிமுதல் செய்து தினமும் சாயங்காலம் வந்து கைரேகை பதித்து இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே தங்க வேண்டும்.

இது தான் அன்றைய ஆங்கிலேய ஆட்சியில் உடனடியாக உருவான சட்டம். அதற்கு முக்கியமான காரனம் ஒன்று இருந்தது. கொலை கொள்ளைகளை தடுப்பதற்காக மட்டுமில்லை. அந்த மாதிரி குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் போர் வீரர்களுக்கும் மேலான உடல் பலமும் வீரமும் கொண்டவர்கள், அவர்களுக்கு என்று ஒரு நேர்மையையும் கடைபிடத்தனர். அவர்கள் வைத்தது சட்டம் மனதுக்கு சரி என்று பட்டதை தைரியமாக செய்தனர்.

இது இந்தியாவில் உருவாகும் சுதந்திர கிளர்ச்சிக்கு ஏதுவாக அமையும் என்பது ஒன்று, மற்றொன்று இவர்கள் இருக்கும் பகுதிகளை ஆங்கிலேய படை பலம் நெருங்க முடியவில்லை, ஒரு பக்கம் சுற்றியுள்ள ஊர் மக்கள் அவர்களின் மேல் உள்ள மரியாதை மற்றும் பயம் என்று காட்டி கொடுக்கவும் காவல் நிலையம் அமைக்க போலிஸாருக்கு ஒத்துழைக்கவும் மறுத்தனர்.

இப்படி இருக்கும் போது முப்பது வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே ஆங்கிலேய போலிஸார்களால் துரத்தப்பட்டு பாதி பேர் கொல்லப்பட்டு மீதமுள்ளவர்கள் ரத்தம் வடிய பாதி உயிரில் இருக்கும் நிலையில்… ஆற்றங்கரை ஒதுங்கிய மக்களை தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காப்பாற்றி அவர்கள் தங்கி மலை காட்டில் வாழ உதவியாக இருக்கிறான். அந்த ஊருக்கு கொம்பூதி என்று பெயர். அந்த மக்கள் கொம்பூதி மக்கள் என்று அழைக்கப்பட்டனர் . தொழில்-கொள்ளை.

வையத்துரை- சிறுவனின் தாழ்த்தப்பட்ட குலத்தை சார்ந்த மக்கள் வாழும் இடம் கொம்பூதிக்கு அருகில் அள்ள பெரும்பாச்சேரி. அங்கு உள்ள மக்களை சுத்து பட்டு பக்கள் தீண்டாமையை பரப்பி நசுக்கி கொண்டிருந்தனர். பெரும்பாச்சேரி மக்கள் தினமும் கூலிக்கு வயல் வேலைக்கு செல்வது ‘பெருநாழி’ என்ற ஊர்- உயர்சாதி என்று தம்மை சொல்லிக்கொள்ளும் மக்கள் வாழும் இடம்.

வையத்துரை கொம்பூதி மக்களை காப்பாற்றியதிலிருந்து அவர்களுடனே சேர்ந்து வாழ்ந்து களவும் செய்து வந்தான்.

கொம்பூதி மக்களின் தலைவன் வேய்யன்னா- ஊரில் உள்ள அனைவரும் தெய்வமாகவே கருதினர், கொள்ளை அடிப்பதே தொழில் மற்றபடி சாதி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் உதவி செய்யும் மனப்பாங்கு… முதலில் அவர்களை துரத்த வந்த வெள்ளைக்கார அதிகாரியே வேய்யன்னாவின் குனத்தை கண்டு மரியாதை கொடுத்துப் போனார்.

பெரும்பாச்சாரியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட குலப் பெண் ஒருத்தி பச்சை பிள்ளைக்காரி தாகம் எடுக்கவே.. பெருநாழி கிணற்றில் தண்ணீர் எடுத்து விடுகிறாள். அதை கண்ட பெருநாழி மக்கள் தண்ணீர் தீட்டு பட்டுவிட்டது என்று அந்த பெண்ணின் கணவனைக் கட்டி வைத்து அடித்து கட்டெரும்புகளை உடல் முழுவதும் கடிக்க விட்டனர்.

இதை தட்டிக்கேட்க வேய்யன்னா பெருநாழி ஊருக்குள் புகுந்து இனிமேல் பெரும்பச்சேரி மக்கள் எல்லோரும் இந்த கிணற்றில் தான் தண்ணீர் எடிப்பார்கள் என்று அதிகார தோரணையில் சொல்லிவிட்டுச் செல்கிறார். மறுநாளே கிணற்றில் மலங்கள் மிதக்கின்றன…!

சினம் கொண்ட பெரும்பச்சேரி- கொடும்பூதி மக்கள் பெருநாழி ஊரை கொளுத்துகிறார்கள் மக்களை அடித்து துவைக்கிறார்கள்.

அங்கே தான் ஆங்கிலேய படை முதலில் உள்ளே வருகிறது.பெருநாழி அவர்களுக்கு உதவி செய்கிறது. கொம்பூதி மக்களை கைது செய்து அவர்களை தடுக்க முயல்கிறது. கொம்பூதி மக்கள் முதல் அதிகாரியை துரத்தி விடுகின்றனர்…இரண்டாம் அதிகாரியை கொன்றுவிடுகின்றனர்.

மூன்றாவது அதிகாரியாக வந்தது சிறுவயதில் தொலைந்து போன வேய்யன்னாவின் மூத்த மகன். மகன் பாசத்தை வைத்து வேய்யன்னாவிடம் கொள்ளையடிக்க மாட்டோம் என்று சத்தியம் வாங்குகிறான். கொம்பூதி மக்களும் கட்டுபடுகின்றனர். இது பிடிக்காத பெருநாழி மக்கள் சிலர் வஞ்சம் செய்து மகனுக்கும் தந்தைக்கும் விரோதம் உண்டு பண்ணுகின்றனர்.

இறுதியில் தந்தையின் சத்தியம் ஜெயித்ததா?, இல்லை மகனின் அதிகாரம் ஜெயித்ததா? என்பது தான் கதையின் முடிவு.

இக்கதை ஆசிரியரின் கதை சொல்லும் விதம் படிக்கும் போதே நமக்கு குருதியில் அனல் பறக்கும். ஒரு பக்கம் வெட்டு குத்து கொலை கொள்ளை என்று எழுதிக்கொண்டு நம்மை மிரட்டிக் கொண்டு வருபவர்… மறுபக்கம் கதையின் ஊடே ‘வஜ்ராயினி’ என்று ஒரு பெண்ணை வைத்து காதல் கவிதை இலக்கியத்தை வடித்து கொண்டு வருவார்.

இந்த புத்தகத்தை நேற்று ஒரே நாளில் படித்தேன்! முடிக்கும் போது காலை 3 மணி.  திரில்லர் சினிமா படம் போல படிப்பவனை கையோடு இழித்துக்கொண்டே போகும். கதை முடிந்த போதும் கனத்த இதையத்தோடு படுத்தேன்-தூக்கம் வர மறுத்தது.

நினைவு முழுவதும் வேய்யன்னாவும்- கொம்பூதியும் தான் நினைவில் நிரம்பி நிற்கிறது.

ரகுராவணன்

நூல் தகவல்:

நூல் : குற்றப் பரம்பரை

பிரிவு :  நாவல்

ஆசிரியர்: வேல.ராமமூரத்தி

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

வெளியான ஆண்டு :   2016

பக்கங்கள் : 448

விலை :  450

Buy On Amazon

 

 

 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *