சிறார் நூல்கள்சிறார் நூல்கள்

கனவை எழுதும் கலை

ஒரு கனவு ஏன் வருகிறது. அது எதைச் சுட்டுகிறது என்பதை இந்த உலகத்தில் ஒருவராலும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அது எல்லா வரையறகளையும் கடந்த, எதைக் கொண்டும் வகுத்துவிட முடியாத அபூர்வமான பாதை. அது இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. அந்த உலகத்துக்கும் இந்த உலகத்துக்குமான பாலமாக நீண்டிருக்கிறது கனவு. கனவிலிருந்து விழித்ததுமே அந்த உலகம் மறைந்து போய்விடும் என்பதுதான் துயரத்துக்குரிய செய்தி. அது முற்றிலும் கரைந்து போகும் முன்பாக அதற்கு ஒரு கரையையெழுப்பி சேமிப்பது என்பது எளிதான செயலல்ல. ஆயினும் அபூர்வமான மனங்களுக்கு அபூர்வமான கணங்களில் அது சாத்தியப்படுவதும் உண்டு. அப்படி அரிதாக சேமித்து வைத்த ஒரு கனவை எழுதிய முயற்சியாகவேவிட்டில்எழுதிய நாவலைக் கருதத் தோன்றுகிறது.

இந்தக் கனவுக்கு தர்க்கம் எதுவும் இல்லை; ஒழுங்கும் இல்லை; அடுக்குமுறை எதுவுமில்லை. ஆற்றோற்றத்துடன் செல்லும் பரிசிலைப் போல சென்று கொண்டே இருக்கிறது. அந்தக் கற்பனையினாலேயே அது சுவாரசியமாகவும் இருக்கிறது.

ஆசிரியையும், அவர் வைத்திருக்கும் புத்தகமும், அதில் அடங்கியிருக்கும் கேள்விப்பட்டியலும் வண்டாகக் குடைவதால் பதற்றம் கொண்ட சிறுமியொருத்தி ஆற்றங்கரைக்கு வந்து அமர்ந்திருக்கும் காட்சியிலிருந்து விட்டிக் தன் நாவலைத் தொடங்குகிறார். வழக்கமாக அச்சிறுமி கொஞ்சிப் பேசுகிற அணிலைப் பார்த்து தன் இயல்புக்கு மாறாக சிடுசிடுப்போடு பேசுகிறாள். அணிலுக்கே அது அதிர்ச்சியாக இருக்கிறது. அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் வருன் மான்தலை கொண்ட மீன் அவளை மோதித் தள்ளிவிட்டு ஆற்றுக்குள் குதிக்கிறது. தடுமாறி மயங்கி அதே ஆற்றுக்குள் விழும் சிறுமி மீனின் முதுகோடு ஒட்டிக் கொள்கிறாள்

அதற்குப் பிறகு கதை இன்னொரு உலகத்தில் நிகழ்கிறது. ஆழத்தில், ஆகாய நீலநிறத்தில் மீனுக்குச் சொந்தமான கண்ணாடி பங்களா இடம் பெறுகிறது. தன் தவறால் தன்னோடு வந்துவிட்டவள் என்ற காரணத்தாள் அவளை அங்கே தங்கிக் கொள்ள அனுமதிக்கிறது மீன். அந்தக் கண்ணாடி பங்களாவுக்குள் மீன்கள் ஒரு மேசையைச் சுற்றி உட்கார்ந்து சீட்டாடுகின்றன. குளிருக்கு இதமாக சூடாக தேநீர் அருந்துகின்றன. ஒரு மீன் தனக்கு க்ரீன் டீ வேண்டும் என்று வாங்கிப் பருகுகிறது. இப்படி ஒவ்வொரு காட்சியும் கற்பனைமயமானதாகவும், சுவாரசியம் நிறைந்ததாகவும் அமைந்திருக்கிறது.

சீட்டாட்டம் தொடர்கிற சமயத்தில் ஜியோகிலானி ஆமை பதற்றத்துடன் உள்ளே நுழைந்து ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது, வெள்ளிமணல் பகுதியில் திடீரென பறவைகள் மயங்கி விழுந்த செய்தியையும், கோம்ப் ஜெல்லி உதவியோடு தம்முடைய இடத்துக்கு அழைத்துச் சென்று வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறது. உடனே மருத்துவம் தெரிந்த கடல்பசு ஆவுளியா அந்த இடத்துக்குச் செல்கிறது. மயக்கத்தில் இருக்கும் பறவைகளின் வயிற்றைச் சோதித்துப் பார்த்து பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதைக் கண்டறிகிறது. அறுவை மருத்துவத்துக்குப் பிறகு அவற்றைக் காப்பாற்றுகிறது. காளான் தோட்டத்துக்குள் பிளாஸ்டிக் வந்து சேர்ந்த காரணத்தை அனைவரும் சேர்ந்து கண்டுபிடிக்கிறார்கள். அதற்கு அங்கு சென்று சேர்ந்த ஸ்நோ பாப்பா உதவுகிறாள்.

பிளாஸ்டிக் பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதற்கான வழியைப்பற்றி பேசுவதற்காக ஸ்நோ பாப்பாவும், மீனும், ஆந்தைகளின் அரசன் கேபி ஈகிளைச் சென்று சந்திக்கிறார்கள். பிறகு அங்கிருந்து முயல்கூடு தீவுக்குச் செல்கிறார்கள். அங்கு கதிரியக்க விஞ்ஞானி மிஸ்டர் ரேயை சந்திக்கிறார்கள். ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு கதையாக விரிகிறது

மருத்துவர் ரேயிடம் ஒரு கதிர் அலைமானி இருக்கிறது. அந்த அலைமானிக்கு தன் துடிப்பு வட்டத்துக்குள் எங்கேனும் பிளாஸ்டிக் துகள் இருப்பதை உணர்ந்து கொண்டால் எச்சரிக்கை மணியை எழுப்பும் ஆற்றல் உள்ளதுஅந்த எச்சரிக்கை மணியோசையைக் கேட்டு பறவைகளும் மீன்களும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சொல்கிறார் ரே. கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் இருப்பது போல கண்ணுக்குத் தெரியாத நண்பர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறாள் ஸ்நோ . இப்படி தாவித் தாவி போகிறது கதை. இறுதியில் துறவி நண்டு கொடுத்த அதிசய சக்தியால் மீண்டும் ஆற்றங்கரைக்கே வந்து சேர்கிறாள் சிறுமி.

கனவுப் பயணத்தின் விளைவாக அவள் மனசிலிருந்த இறுக்கம் முற்றிலும் கரைந்துவிடுகிறது. உற்சாகத்தில் அவள் உள்ளம் மிதக்கிறது. அந்த பயணம் அவளை இன்னொரு புதிய சிறுமியாக மாற்றிவிடுகிறது. புதிய கற்பனைகள் வழங்கும் புது அனுபவங்களும், புதிய அனுபவங்கள் ஊட்டும் புத்துணர்ச்சியும் மகத்தானவை. ஸ்நோ பாப்பாவை முன் வைத்து அந்த மகத்துவத்தை உணர்த்துகிறார் விட்டில் என்கிற அறிவழகன். அவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

 

  • பாவண்ணன்
நூல் தகவல்:

நூல் : ஸ்நோ பாப்பாவும் அதிசய கடலும்

பிரிவு: சிறார் நாவல்

ஆசிரியர் : விட்டில்

வெளியீடு : ‘அனன்யா’

முதற்பதிப்பு : டிசம்பர் 2020

பக்கங்கள் : 70  /  விலை : ரூ.90/-

அலைபேசி : 9442346504 

 


பாவண்ணன்

(1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட மொழியிலிருந்து பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என ஏராளமான படைப்புகளை மொழிபெயர்த்தளித்துள்ளார். கன்னடத்திலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் சிறப்பான இலக்கிய வளமைகளை தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்.புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது, இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவலுக்கான விருது, கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது,, சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது, சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது, என்.சி.பி.எச். வழங்கும் 2015 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரைத்தொகுதிக்கான விருது, வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கிய புதுமைப்பித்தன் விருது, ஆகிய இவர் பெற்றுள்ள விருதுகள் இவரது ஆளுமையையும், சிறப்பையும் உணர்த்தும்.) Cell : 9449567476  [email protected]

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “கனவை எழுதும் கலை

  • புத்தகத்தை வாசிக்க தூண்டும் விமர்சனம்.சிறப்பு தோழர்.40 ஆண்டுகால எழுத்துலக அனுபவத்தை தங்களின் எழுத்து நடையில் உணர முடிகிறது.பகிர்ந்தமைக்கு நன்றியும் பேரன்பும் தோழர் 👌👏👍🤝🙏😍

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *