நூல் விமர்சனம்புனைவு

நினைவுக் கலயத்திலிருந்து ஒரு துளி


விதைகள் பெருகி வரும் காலமிது. அதிலும் நவீன கவிதை மொழி நான்கு கால் பாய்ச்சலில் வேகமெடுத்து நம் இலக்கிய உலகமே அதற்குள் இயங்குவது போல் ஒரு பாவனையாகி விட்டதோ என்று எண்ணும்படியாக கவிதை தொகுப்புகள் வந்து குவிந்துள்ளன.  பதிப்பகங்கள் கவிதை தொகுப்பு விற்பனை குறித்து பேசும்போது நமக்கு கசப்பான உண்மைகள் தெரியவரும். ஆனாலும் கவிதை ஆர்வலர்கள் அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு தங்களது விடா முயற்சியால் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலான விஷயம். கவிதைகள் நமக்குள் எப்போதும் இயங்கி கொண்டிருப்பதையே இத்தகைய போக்குகள் நமக்கு உணர்த்துகின்றன. கவிதை குறித்த நமது எதிர்பார்ப்புகள் எத்தகையதாக இருப்பினும் மொழியில் சில மாயங்கள் வினோதங்கள் ஏற்பட்டு அவரவர் இருப்பில் வெவ்வேறு கருத்துக்களில், பார்வைகளில் அதன் மொழி வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.

ஒரு மாலை வேளையில் க.சி.அம்பிகவர்ஷினியின் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. கவிதைகளை எப்போதும் வாசிக்க விரும்பும் எனக்கு தற்போதெல்லாம் வரும் தொகுப்புகளின் அட்டைப்படமும் ஒரு வசீகரமான போதையை மனதில் நிரப்பி விடுகிறது. ஆகுதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த தொகுதியின் அட்டை வடிவமைப்பு கறுப்பும் வெள்ளையும் கலந்த ஒரு கலவையில் விரித்த கூந்தலுடன் கைகள் இரண்டையும் விரித்து ஒரு மங்கலான தீட்டலில் பெண்ணின் பின்புறத் தோற்றம் தெரியும் வண்ணம் இருக்கிறது. கவிதைப் பெண்ணின் அகமும் புறமும் கலந்த மன உலகங்களை விரித்துக் காட்டும் ஒரு கூட்டு உணர்வாகவே இந்த அட்டைப்படம் நமக்கு உணர்த்தி விடுகிறது.

இன்றைய வாழ்க்கைச்சூழல் கவிதைக்கான இயங்குதளத்தையும் கவிதை புழங்கும் மொழியையும் இணைத்து தனி மனித உணர்வில் நிகழ்த்தும் மாயங்கள் கவிதைக்கான உருவகங்களை அதன் நேரடித் தன்மையை விலக்கி விட்டு பூடகமான வெளிகளில் தன்னை நிறுவிக் கொள்வதில் தீவிரம் கொள்கின்றன.

க.சி.அம்பிகாவர்ஷ்னியின் இத் தொகுப்பு அத்தகைய மொழியையே தீவிரமாக கையாள்கிறது.

அம்பிகாவர்ஷினி இந்த தொகுப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பே அலாதியானது. “இந்த இரவு ஒரு சிறிய நூலகம்”.  ஏன் சிறிய? என்ற கேள்வியும் எழுகிறது. சிறியவற்றிலிருந்து பெரியவற்றை அறிந்து கொள்ளும் துடிப்பு அந்த தலைப்பில் ஒளிந்து கொண்டிருக்கலாம். நூலகம் என்ற வார்த்தையை வாசிப்பை நேசிக்கக்கூடிய மனிதர்களுக்கு தூய அறிவையே சுவாசிப்பாக மாற்றக்கூடிய அதாவது ஆக்சிஜன் போல் செலுத்தக்கூடிய ஒரு இடமாகவும் நகரத்தின் இரைச்சல் சந்தடிகளிலிருந்து விலகி நம்மை புத்தகங்கள் நிரம்பி வழியும் அடுக்குகளுக்குள் நுழைத்து அதன் எழுத்தை வாசித்து நமது அறியாமைகளை நீக்கிக் கொள்ளும் விந்தை நிகழும் இடமாகவே பார்க்கிறேன்.

இந்த தொகுப்பின் கவிதைகளுக்குள் நுழைவதற்கு முன்னால் ஒவ்வொரு கவிதையின் தலைப்பும் நாம் அறிந்தும்  அறியாமல் விட்ட சில முன்னுதாரணங்களை குறிப்பிடுவது போல் உள்ளது.

சகுனப்பறவை, ப்ரம்மம், மினர்வா ஒரு சிற்றூஞ்சல், பாலேவின் வெளிச்சம், பாளயம்பட்டி அய்யர் ஓட்டல், பூளைப்பூங்கொத்து, சூப்பர் மார்க்கெட் படிவரிசை, மீன்வடிவ ஆஷ்ட்ரே, சூதாடிகளுக்கு முன் கவிதை எழுதும் சல்லிசான அரசியல்…  என தலைப்புகள்  ஒரு புதிருக்கான முடிச்சை போல் நமக்குள் பெரும் வியப்பை நிகழ்த்திவிட்டு காத்திருகின்றன.

கவிதைகளை வாசிக்கும் போது கவிதைக்கான மொழி எந்த வரையறைக்குள்ளும் அடங்காமல் நமது கவிதைக்கான காவல் தெய்வங்கள் போல் இறுக்கி கட்டமைத்திருக்கும் பல காகித தர்மங்களையும் ,காவல் புலச் சுவர்களையும் உடைத்து மொழியின் வெளிக்குள் அனாயாசமாக புகுந்து கொள்ளும் தீவிரமும் கொண்டவை இவரது கவிதைகள் என்பது புரிகிறது.

 

மினர்வா ஒரு சிற்றூஞ்சல்

 

இருளில் ஒளி கலக்கும் நகரம் ரோம்

ரோமின் கண்களில் மினர்வா ஒரு சிற்றூஞ்சல்

அவளுடைய கைகளில்

வெட்டி முறிக்கப்பெற்ற தேக்குமரக்குச்சி

மினர்வா இருளை நோக்கி நடக்கிறாள்

ஒளி அவளை உள்ளும் புறமும்

ஆட்டி வைக்கிறது

 

உலகம் முழுவதும் பெண் தெய்வமாக ஆராதிக்கப்படுவதும் பின்பு உடலால் மனத்தால்  அலைகழிக்கப்படுவதும் அறிவு என்று வருகையில் அவளை அந்த இடத்திலிருந்து நீக்குவதும் பின்பு அழிப்பதுமாக நுட்பமான அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. மினர்வாவின் வழியாக பெருகும் ஒளியும் இருளும் அவள் கடக்கும் பாதையும் எப்போதும் உலகம் முழுமைக்கும்  பெண் எதிர் கொள்ளும் அரசியலின் ஒரு பகுதியாகவே உள்ளது.

காலத்தின் வேர்கள் சூசகமானது என்ற தலைப்பில் ஒரு கவிதை  – பெருமாள் கோயில் பூக்கடைக்காரி ஜாகையை மாற்றிக் கொள்வதும் புரட்டாசி சனிக்கிழமை கியூவும் நெற்றியில் திலகமிடுவது போல் கொரானா டெஸ்ட் கருவியும்

எல்லாம் கடந்து ஆரத்தி தட்டை நெருங்க அணைந்து விடுகிறது காணிக்கைகளுக்கான ஒளிச்சுடர் . புதிதாக ஏற்றிக் கொண்டு வருகிற திரியின் ஒளி காற்றுக்கு அல்லாடிக் கொண்டே வருகிறது என்று முடியும் இந்த கவிதையில் நிகழ்வுகளின் வரிசையில் காற்றுக்கும் ஒளிக்குமான ஒரு தொடர்பில் மனிதர்களாகிய நாமும்தான் அன்றாட அல்லல்களுக்குள் அல்லாடிக் கொண்டிருப்பது நம்மீதான காலத்தின் வேர்கள் வழியே சூசகமாக உணர்த்தப் படுகிறதோ? என்று தோன்றுகிறது.

கவிதை எந்த நேரத்திலும் எந்த நிமிடத்திலும் எந்த நொடியிலும் நிகழலாம். கோயில் பிரகாரத்திலும் ,கருவறையிலும் நிகழ்வதைப் போல குப்பை மேட்டிலும் நிகழலாம். அசையும் சுடரில் நிகழ்வதைப் போல அசையாத கோபுரங்களிலும் நிகழலாம் . மாட மாளிகைகளில் நிகழ்வதைப்போல மண் குடிசையிலும் நிகழலாம். வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது. கவிதையும் அவரவர் மனப்பாங்கிற்கேற்ப நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பாலேவின் வெளிச்சம்

நிழல்கள் இறங்கிவிட்ட காட்டுக்குள்

மேய்ச்சல் வெயில்

சிலையாக ஒடுங்குகிறது…

சிலையின் தீவிரம்

இரு விறகுகளைப் போலஒன்றுக்கொன்று

எதிரும் புதிருமாக நிற்க

பாலே நடனம் ஸ்தம்பிக்கிறது

மழையூறி நனைந்த மண்ணுழவில்

சிறகுகளைப் பிசைந்து பறந்து காட்டும்

கருங்காகத்தின் கிளைவாகிற்கு

பக்கபலமாக

ஜன்னல் கம்பிகளுக்கு பின்னால்

கண்வைத்து நிற்கிறேன்…

பாலேவின் வெளிச்சத்தில்

மூண்டெழும் வனப்பு சுண்டியிழுக்கிறது.   

நிகழ்வுத் துணுக்குகள் கவிதையின் பரப்பில் வெடிக்க…. வெடிக்க கவிதையின் காலமும் … இடமும்…. சொல்லும்….. பொருளும் அதன் உருவம் கடந்து நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.கவிதையின் மொழியை காற்றைப் போல் சுவாசிக்க விடுவதும் இன்றைய சூழலுக்கு ஏற்ப அவசர ஆக்சிஜன் செரிவூட்டியைப் போல் இயங்க விடுவதும் நவீன தமிழ்க் கவிதையின் பரப்பில் ஒரு புதிய மொழிப் பாய்ச்சலை தீவிரத் தன்மையுடன் நிகழ்த்துவதுமாக இன்றைய பின் நவீனத்துவவாதிகளிடம் கவிதையின் இயங்கியல் தனித்துவமுடையதாக இருந்து வருகிறது.

க.சி. அம்பிகாவர்ஷினியின்  இந்த தொகுப்பு அதற்கான முனைப்புகளில் தொடர்ந்து முயன்று தனது மொழியை முன் நகர்த்துவதாகவே அமைத்திருப்பது அவரது கவிதை மொழியின் வேறொரு பரிமாணமாகக் காணக் கிடைக்கிறது.


மஞ்சுளா      

நூல் தகவல்:

நூல் : இந்த இரவு ஒரு சிறிய நூலகம்

வகை :  கவிதைகள்

ஆசிரியர் : க.சி.அம்பிகாவர்ஷினி

வெளியீடு :   ஆகுதி பதிப்பகம்

வெளியான ஆண்டு: 2021

பக்கங்கள் :  88

விலை:  ₹  100

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *