
வாசகர்கள் எழுத்தாளர்களை விட முதிர்ச்சி கொண்டவர்கள் எனக் கூறும் எழுத்தாளர் மலர்வண்ணன். வாசகசாலை பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட, வேலூர் மற்றும் வேலூரின் முக்கிய அடையாளச் சின்னங்கள், இடங்களை முன் வைத்து எழுதப்பட்ட ”Mrs விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983 -1920) ” எனும் நாவல் மூலம் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். இந்நாவலை விசு எனும் எழுத்தாளர் உடன் இணைந்து எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவரின் இரண்டாவது நூலாக சிறுகதைத் தொகுப்பு வாசகசாலை இலக்கிய அமைப்பின் முப்பெரும் விழாவில் வெளியிடப்பட்டது. “அட்டவிகாரம்” எனும் தலைப்பில் வெளியான இந்நூல் குறித்தான அறிமுகமாக அறியும் பொருட்டு மலர்வண்ணன் அவர்களை விமர்சனம் இணையதளம் சார்பாக அணுகி சில கேள்விகளை கேட்டிருந்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள்… இதோ..!
வணக்கம் ! வாசகசாலை பதிப்பகம் வெளியிட்ட “அட்டவிகாரம்” சிறுகதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகள் !
- உங்கள் சிறுகதைத் தொகுப்பில் கதைமாந்தர்கள் எத்தகையவர்களாக இருப்பார்கள்?
கதை மாந்தர்களுக்கென எந்த சிறப்பியல்புகளும் கிடையாது, வலிந்தும் திணிக்கப் படாமல் இருக்கும். அவர்கள் நம்மில் ஒருவர், நம் குடும்பத்தினராகவோ, நண்பராகவோ, ஏன் நாமாகவோ இருக்கலாம்.
- கதை வடிவமைப்பில் எத்தகைய புது முயற்சி செய்து உள்ளீர்கள் ?
வாசகர்கள் எழுத்தாளர்களை விட முதிர்ச்சி கொண்டவர்கள் என்பதை கருத்தில் கொண்டு தேவையற்ற விவரணைகளை தவிர்த்து சொல்ல வந்ததை நேரடியாக வெளிப் படுத்தி ஒவ்வொரு கதையின் முடிவையும் தீர்வையும் வாசகர்களின் எண்ணங்களுக்கே விடுதல் என்பதே ஒவ்வொரு கதையின் வடிவமைப்பாக இருக்கும்.
- இத்தொகுப்பிலுள்ள கதைகள் சமூக நிகழ்வுகள் அல்லது தனி மனித நடத்தைகள் உண்மை சம்பவங்களின் தாக்கத்திலிருந்து எழுதப்பட்டதா அல்லது முற்றிலும் கற்பனையில் புனையப்பட்டதா?
தொகுப்பின் அனைத்து கதைகளுமே நானறிந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனையும் கலந்து எழுதப் பட்டவை.
- இச்சிறுகதைத் தொகுப்பு உங்களின் படைப்பாக்கங்களில் எத்தகைய முக்கியத்துவமாக இருக்குமென கருதுவீர்கள்?
இச் சிறுகதைத் தொகுப்பு என்னுடைய முதல் முயற்சியே, வாசகர்களின் விமர்சனங்களால் மட்டுமே இது எத்தைகைய முக்கியத்துவமாக இருக்கும் என்பது தெரியும்.
- சிறுகதைகளில் வட்டார வழக்கு பயன்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது. வட்டார வழக்கில் எழுதுவது உங்களுக்கு சாதகமான ஒன்றா? அல்லது சவால் மிகுந்ததாக இருந்ததா?
ஒரு கதையை மட்டுமே வட்டார வழக்கில் முயற்சித்துள்ளேன், அதுவும் கதைக்குத் தேவைப்பட்டதால் எழுதப் பட்டது. நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் சேலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பேசப் படும் வட்டார வழக்கில் எழுதுவது எனக்கு இயல்பாகவே வந்தது.
- கதைகளம், கதைக்கரு அல்லது கதைகளில் சொல்லப்படும் தகவல்களுக்காக ஏதேனும் கள ஆய்வு இத்தொகுப்பிற்காக செய்துள்ளீர்களா?
ஏற்கனவே சொன்னது போல, இக் கதைகள் அனைத்தும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டதால் பெரிய அளவில் கள ஆய்வுகள் தேவைப் படவில்லை.
நூல் : அட்டவிகாரம்
வகை : சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : மலர்வண்ணன்
வெளியீடு : வாசகசாலை பதிப்பகம்
வெளியான ஆண்டு: டிசம்பர் 2021
விலை: ₹ 140
நூலைப் பெற:
தொடர்புக்கு +91 9962814443, +91 9790443979
எழுதியவர்:
