சிறுகதைகள்நூல் அலமாரி

கவிஜியின் “இன்னொரு நான்”


விஜியின் ‘இன்னொரு நான்’ சிறுகதைத் தொகுப்பு சுய விவரிப்பு வகையிலான கதைகளைப் பெரும்பாலும் கொண்டுள்ள தொகுப்பாகத் திகழ்கின்றது.

மிகு புனைவுகளைக் கொண்டுள்ள கதைகளாக இருந்த போதிலும் இடையிடையே விரவி இருக்கும் ஞானம் சார்ந்த சொல்லாடல்கள், கவித்துவமான நடை, காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் திறன் ஆகியவை நூலினை தொய்வின்றி வாசிக்க வைக்கின்றன.

‘நிழலி’ சிறுகதை நுகர்வுப்பொருளாக மட்டும் பெண்ணினைப் பார்க்கும் ஆணின் பொதுப் புத்தியில் இருந்து விலகி முதிர் சிந்தனையின் வாயிலாகத் தன் மனதினைத் தெளிவாக வைத்துக்கொள்ள முயலும் இளைஞனின் கதையாக விரிகிறது.

‘புதிய கோடங்கி ‘சிறுகதை கதாசிரியர் கோடங்கி வேசம் போட்டுக் கொண்டு தனது ஊரைச் சுற்றி வரும் கதை. ஊரில் உள்ள வீட்டின் முன் நின்று கொண்டு கோடங்கி மறுமணம், பெண் கல்வி போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள காட்சி அழகானதொரு சிந்தனைப்போக்கு.

‘எமிலி மெடில்டா’ அற்புதமான ஒரு காதல் கதை. ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையில் தன்னை விட்டு விலகும் நாயகனை மறக்காமல் அவன் நினைவாகவே திருமணம் முடிக்காமல் வாழும் சிஸ்டர் எமிலி மெடில்டா மனதுக்குள் நிறைகிறார். ‘ஆதியும் நீயே அந்தமும் நீயே’ என முடியும் கதையின் கடைசி வரிகள் கலங்க வைக்கின்றன.

‘கருப்பு வெள்ளைக்காரன்’ சிறுகதை சவக்குழியைத் தோண்டும் பொழுது உள்ளிழுத்துக் செல்லப்படும் ஒருவன் தனது முன்னோர்களை காண்பதாக விரியும் கதையாகும். மாய உலகில்‌ தாத்தாவின் தாத்தாவை பார்க்க ஆவல் கொண்டு தானே அவர் என்று உணர்ந்த விதம் அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதாசிரியர் வாசிப்பவர்களையும் மாய உலகுக்கு விரல் பிடித்து அழைத்துச்சென்று விடுகிறார்.

இதரக் கதைகளும் அதனதன் போக்கிற்கேற்ப அழகாகவேப் பயணிக்கின்றன. வாசித்து முடித்த பிறகும் மானின் காலடி சப்தத்தை நினைவூட்டியவாறு மனக்காட்டுக்குள் ஏதோவொன்று மெல்லிய அதிர்வை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இயலவில்லை.


 – கூடல் தாரிக் 

 

நூலிலிருந்து ..

பதிப்பக உரை :

தொடரும் பணி

சமகாலத் தமிழ்ச் சிறுகதை நீரோட்டத்தில் இளைய தலைமுறையினரின் இணைவும் வீச்சும் மிக அபாரமாக இருப்பதாகவே நமக்குப் படுகிறது. அவர்கள் அந்த போக்கிலேயே போக முடிவெடுத்திருந்தாலும், அதிலும் தன்னுடைய பயணத்தின் பாங்கை வேறுபடுத்திக்காட்ட முனையும் பொருட்டு எடுக்கின்ற பல புதிய முயற்சியில் நிறையவே வெற்றி காண்கிறார்கள் என்று சொல்ல முடியும். தமிழில் மாத்திரமல்ல, உலகளாவிய சிறு கதைகளை அவர்கள் வாசிக்கிறார்கள் என்பது குறித்தும் நாம் நிறையவே அவதானிக்க முடிகிறது. இதனால் தற்போதைய நிலையிலிருக்கின்ற சிறுகதை என்கிற இலக்கியத் தளத்தை அடுத்தக் கட்டத்திற்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என்கிற நம்பிக்கையும் உருக்கொள்கிறது. பரந்து பட்ட வாசிப்பும், இவர்களின் அரசியல் சமூகம் குறித்தான களச் செயல்பாட்டின் அதிகரிப்பாலும் அது கைகூடி வருகின்ற நாள் தொலைவிலில்லை .

அந்த வகையில் தோழர் கவிஜியின் இத்தொகுப்பிலுள்ள கதைகள் வடிவம் மற்றும் பேசுபொருள் சார்ந்து புதிய கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. சுய விவரிப்பு வகைமையிலான (self narration) கதைகளே இத்தொகுப்பில் அதிகம். ஒரு புனைவாளனின் கனவு மனத்தை குதிரையேற்றி, வான் மீது பறக்கச் செய்து, அடுத்த உலகிற்குத் தாவச்செய்து, அந்த இடத்தில் அந்த மனத்தை நினைவுலகிற்கு வரச் செய்கின்ற அற்புதத்தை நிகழச் செய்கிறார் கவிஜி. இதுபோன்ற கதை உத்தி வாசகனுக்கு அலுப்புத் தட்டாமல் கதைக்களத்திற்குள் உள்ளிழுத்துச் செல்கிறது. இந்தத் தொகுப்பைப் பொருத்தளவில், புதிய கோடாங்கி, வேஷம் ஆகிய கதைகள் கவனங்கொள்ளத்தக்கது. நவீன இலக்கியத்தின்பாலான கவிஜியின் ஈடுபாடு வரவேற்கத்தக்கது. அடுத்தடுத்த முயற்சிகளில் அவரது கதைகள் இன்னும் அடர்த்தி பெறும் என்பது கண்கூடு.

கவிஜி போன்ற புனைவு எழுத்தாளர்களை வரவேற்பதற்காக பன்முக மேடை பதிப்பகம் – மெனக்கெட இருக்கிறது. 2022 டிசம்பர் இறுதிக் குறைந்தபட்சம் மேலும் இருபது இளைய தலைமுறையினர்களின் சிறுகதைகளைப் பதிப்பிக்கும் முயற்சியில் தோழர்களின் உதவியோடு பெரும் வெற்றி பெறுவோம். சிறுகதைக் தொகுப்பு என்ற வரிசையில் பன்முக மேடைக்கு இது இரண்டாவது நூல். பதிப்பகம் துவங்கி ஐந்தாண்டுகள் என்று பார்க்கின்ற போது, இது தொய்வுதான் என்றாலும், மேற்கூறிய முயற்சி இந்தத் தொய்வைச் சரிசெய்து புதிய இலக்கை எட்டும்படியாக அமையும் என்று நம்புகிறோம்.

இதற்கு முன்பாக கவிதைத் தொகுப்புகளும், இரண்டு நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளோம். தற்போது தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் கோவை மாவட்டச் செயலாளராகவும் இருக்கின்ற அன்பின் இளம் தோழர் கவிஜிக்கு வாழ்த்தும் பாராட்டும்.

பன்முக மேடை.
26.12.2021

 

நூல் தகவல்:

நூல் : இன்னொரு நான்

வகை :  சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : கவிஜி

வெளியீடு :  பன்முக மேடை,

வெளியான ஆண்டு:  டிசம்பர் – 2021

பக்கங்கள் : 99

விலை:  ₹ 140

நூலைப் பெற :  +91 9487845666

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *