நாவல்நூல் அலமாரி

இலட்சங்களுடன் வெளிவந்த இமயவேந்தன் கரிகாலன்


ரு புத்தகம் என்னவெல்லாம் மாயம் செய்யும்? ஒரு கடலாய் வாசிப்பவரை தனக்குள் கரைக்கும். முத்தாய் மாற்றி அறிவுக்கரையேற்றும்.‌ புத்தக வாசிப்பில் உயிர் கரைபவர் என்னவெல்லாம் செய்வார்? தேர்ந்த எழுத்தாளரை அடையாளம் கண்டவர் தன் உள்ளப்பூரிப்பை வெளிக்காட்ட பரிசுகளை வழங்கி மகிழ்வார். அப்படியோர் அதிசயம் நிகழ்ந்தது சென்றவாரம் எளிமையாய் நிகழ்ந்த இமயவேந்தன் கரிகாலன் புத்தக வெளியீட்டில்.. ஆம்.. வெளிவரும்போதே பரிசுகளுடன், சீர்வரிசைகளுடன் அமர்க்களமாய் வந்தான் கரிகாலன். சோழவேங்கை கரிகாலனின் அடுத்த பகுதியாக இமயவேந்தன் கரிகாலன். தொடர்ச்சி எனினும் தனியாக வாசித்தாலும் விளங்கிக்கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது இமயவேந்தன் கரிகாலன். ஆசிரியரின் புனைவில், எழுத்தில் உளம் உருகிய புரவலர் திரு பி.எல். சுப்ரமணியம் தனதன்பை வெளிக்காட்ட, இனி ஆசிரியர் எழுதும் இதே போன்ற ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு லட்சம் வழங்கப்போவதாகவும் உவகையுடன் அறிவித்து மகிழ்ந்தார். அத்துடன் தொடர்ந்து பேசிய மருத்துவர் ஆர். விஜயராகவன் அவர்கள் இந்த நாவலுக்கான சிறந்த கருத்தாய்வு எழுதும் மூன்று பெண்களுக்கு தங்கக்காசுகள் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்..

மனிதருக்குள் ஒளிந்திருக்கும் திறமை எப்பொழுது யாரால் வெளிப்படும் என எவரும் அறியமுடியாது. அப்படி தேர்ந்த எழுத்தாளராய் ஒருவர் இலக்கிய உலகில் கால் பதித்தது சென்ற ஆண்டு. எந்த இலக்கிய பின்புலமும் இல்லாத ஆசிரியர்.. எந்த இலக்கிய ஆளுமைகளின் ஆதரவும், தொடர்பும், நட்பும் இல்லாத ஆசிரியர்.. நண்பர்களின் ஊக்கத்தை மட்டுமே உரமாய்க் கொண்டு பெரும் ஆலமாய் கிளை பரப்பியவர்.. அவர் சுங்கத்துறையில் பணிபுரியும் திரு. அசோக் குமார்.

சென்ற‌ ஆண்டு இவருடைய முதல் புத்தகம் “சோழவேங்கை கரிகாலன்” எனும் வரலாற்று புதினம் வெளியானது. முதல் நாவலே ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இவருடைய எழுத்தைப்படித்த உடனே ஆச்சரியப்பட்டுப்போன விஜயா பதிப்பகத்தார் இந்த புதினம் மாபெரும் வெற்றி பெறும் கணித்து நாங்களே வெளியிடுகிறோம் எனக்கூறி இரண்டு புத்தகங்களாக வெளியிட்டனர். எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பான வரவேற்பைப்பெற்றது இந்த நாவல். தீவிர வாசகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது சோழவேங்கை கரிகாலன். கதை எழுதிய விதனம், உரையாடல்கள், பக்கத்துக்கு இரண்டு தத்துவங்கள், போர்வியூகங்கள் என கதையை படைத்த நேர்த்தி வரலாற்று நாவல் வாசிப்பாளர் மத்தியில் புதிதாய் பார்க்கப்பட்டன. கரிகாலனின் கதையை வாசித்த திருவனந்தபுரத்தை சேர்ந்த வாசகர் திரு முத்துசாமி அதன் கதையம்சத்தில் கவரப்பட்டு இந்த புதினம் அனைவரையும் சென்று சேரவேண்டும் எனும் நோக்கில், நாவலை வாசித்து சிறந்த விமர்சனம் எழுதுவோருக்கு பரிசுகளை வழங்குவதாக அறிவித்தார். அதை இந்த புத்தக வெளியீட்டில் வழங்கி மகிழ்ந்தார்.

அது மட்டுமன்றி இந்த நாவல், உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலாசிரியருக்கான சிறப்பு விருதுடன், பரிசுத்தொகை ரூபாய் ஐம்பதாயிரம் பெற்றது. தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் சார்பில் தென்னமநாடு இராமசாமி நினைவு விருதும், (தமுஎச)வின் மேடை விருதுகளில் நூலகச்சிற்பி எஸ்.ஆர்.ரெங்கநாதன் நினைவு விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாய் வெளிவந்துள்ள இமயவேந்தன் கரிகாலன் புத்தக வெளியீட்டில் இலக்கிய ஆளுமை நிறைந்த பேச்சாளர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்றது. வாசகர் மனதில் நீங்கா இடம் பிடித்த கரிகாலன் இமயம் வரை புகழ்கொள்வான் என்பதில் ஐயமில்லை.

இமயவேந்தன் கரிகாலன் சரித்திர சாதனை படைக்க வாழ்த்துகள் !


நூல் தகவல்:

நூல் :   இமயவேந்தன் கரிகாலன்

ஆசிரியர் :  அசோக் குமார்

வகை :  நாவல் 

வெளியீடு :   விஜயா பதிப்பகம்

வெளியான ஆண்டு :   ஜூன் - 2023

பக்கங்கள் :  736 + 13

விலை : ₹  800

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *