நூல் விமர்சனம்புனைவு

பொன்னிறகுப் பறவையின் பயணம்: இச்சா


சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது

பிரமிள்

தீரமிக்க ஆலா பறவை ஷோபாசக்தியின் சொற்களில் முதல் பக்கத்தில் உயிர்த்தெழுகிறது. பொன்னிறகுகள் கொண்ட அப்பறவையின் பயணம் தான் “இச்சா”.

வரைபடத்தில் கண்ணீர்துளியென தோற்றமளிக்கும் இலங்கையில், மண்ணெல்லாம் எளியவரின் ரத்தம் கொண்டும், காற்றெல்லாம் கண்ணீராலும் ஈரமாகவே இருக்கும் போலும். இச்சாவின் பக்கங்களைப் புரட்டும் போது அந்த ஈரத்தை விரல்கள் உணர்கின்றன.

பதுமர் குலத்தைச்சேர்ந்த தமிழ்ச்சிறுமி ஆலா. எளிமையான கிராமத்து வாழ்க்கை. தமிழ்க்குடும்பங்கள் சந்திக்கும் நிரந்தரப் பிரச்சினைகளான குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போவது, வீடுகள் எரிக்கப்படுவது என எல்லா அலைக்கழிப்புகளுடன் பாலியல் சீண்டலும் சேர்ந்தது அவளின் பால்யம். அவள் பருவமடைந்த பொழுதும், அரசியல் அறிமுகம் ஆனதும் ஒரே காலகட்டமாக அமைகிறது. தம்பியின் மரணம் பெருந்துயரென சூழ்கையில், பாலியல் துன்புறுத்தலும் எல்லை மீறுகையில், வெளிச்சப்பாதையாக இயக்கம் அவளின் கண்முன்னே தெரிகிறது.

1980 களில், இந்தியாவை உலுக்கிய 22 பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் கொள்ளையர் கூட்டத்தலைவி என்று அறியப்பட்டவர் பூலான் தேவி. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அவர், 18 வயதில் சூழ்நிலை காரணமாக அதே சமூகத்தைச்சேர்ந்த ஒரு கொள்ளையனுடன் திருட்டு செயல்களில் ஈடுபடுகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகம், பெண் என்ற இரு காரணிகளால் எரிச்சலுற்ற டாக்கூர் சமூக கொள்ளையர்கள் அவரை கடத்தி வந்து, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு நில்லாமல், அந்த ஊரில் இருந்த பல ஆண்களுக்கு இரையாக்கினர். அவரது உடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கி, வேலைகளை செய்ய பணித்தனர். ஊரில் இருந்த அனைவரும் மெளன சாட்சிகளாக மட்டுமே இருந்தனர். உயிர் மட்டுமே மிச்சமாய் இருந்த பூலான் தேவி, ஏற்கனவே கொள்ளையர் செயல்பாட்டில் இருந்ததனால், மன உறுதியோடு தப்பி சென்றார். வேறொரு தருணத்தில் துப்பாக்கியோடு அதே ஊரில் நுழைந்த அவர், தன் மீது வன்முறை செலுத்தியவர்களை அடையாளம் காண முடியாமல், 22 ஆண்களை ஊருக்கு நடுவே நிற்க வைத்து, அனைவரையும் சுட்டுக் கொன்றார். சர்வதேச அளவில் அச்சம்பவம் பேசப்பட்டது. மஞ்சரி அக்கா அத்தகைய உதவியை தான் ஆலாவுக்கு செய்தார்.

கூண்டுப் பறவை

“தனிக்கொட்டடி என்பது வரிசையாய் அமைந்த இருட்டுக் கிடங்குகளாகும். இந்தக் கிடங்குகள் வெளியிலிருந்து தாளிடப்பட்டுப் பூட்டப் பெற்றவை. அவற்றில், கட்டிலோ, நாற்காலியோ, மேசையோ இல்லை. ஆகவே, கைதிகள் அழுக்குத் தரையில் அமர்ந்தோ, படுத்திருந்தோ பொழுதைக் கழிக்க வேண்டும். அங்கே ஏராளமாய் இருந்த எலிகள் அவர்கள் மீதேறி ஓடின. கைதிகளுடைய ரொட்டியை அவை திருடிச் சென்றன. அவர்களது கையிலிருந்தும் கூட பறித்துக் கொண்டு ஓடின – அந்த அளவுக்குத் துணிச்சல் வாய்ந்தவை.”- இது ரஷ்ய சிறைச்சாலை குறித்து, 1899 ல் வெளியான  புத்துயிர்ப்பு நாவலில் லியோ டால்ஸ்டாய் எழுதியது. எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன.. தேசத்தின் எல்லைகள் மாறினால் தான் என்ன.. சிறைச்சாலையின் சூழல் எப்பொழுதும் மாறுவதேயில்லை.

“சிறை என்னும் போது, உங்களுக்கு ஓங்கிய மதிற்சுவர்களும் வரிசையாக  அமைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கொட்டடிகளும் சுவாரஸ்யமான குற்றவாளிகளும் கண்டிப்பு நிறைந்த காவலர்களும் ஞாபகத்துக்கு வரலாம். சிலவேளைகளில் அநாதையாகக் கிடக்கும் இரக்கத்துக்குரிய கைதிகளையும் நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள். ஓரினக் காதல் காட்சிகள் கூட உங்கள் கற்பனையில் தோன்றக்கூடும். கைதிகளின் சிறைப்போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதப் போராட்டங்கள் உங்கள் ஞாபகத்துக்கு வந்து உங்கள் உணர்ச்சி நரம்புகளைத் தட்டியெழுப்பக்கூடும். எத்தனையோ கதைப் புத்தகங்களில் சிறையைப் பற்றிப் படித்து லயித்திருப்பீர்கள்.

ஆனால், உள்ளேயிருக்கும் ஒரு தண்டனைக்கைதிக்கு, சிறை என்பதற்கு ஒரேயொரு பொருள் மட்டுமே உண்டு. அது வெறுமை! நீங்கள் சித்திரவதை செய்யப்படும் போதோ அல்லது பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படும்போதோ உங்களை வலி,அச்சம், அவமானம், கூச்சம், எதிர்ப்பு அல்லது கீழ்ப்படிவு  போன்ற உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுசியாக அவர்கள் கணிக்கிறார்கள். குறைந்தது நீங்கள் ஒரு மனித உயிரென்றாவது  அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் சிறையில் நீங்கள் யாருமேயில்லை. உங்களுக்குப் பெயர் கூட இல்லை. நீங்கள் இங்கே புண்ணிலிருந்து உருவாகிய சிறு புழு மட்டுமே.” இது ஆலாவின் விவரிப்பு.

உள்முகப் பயணம்

வாழ்க்கையெனும் மாபெரும் புத்தகத்தில், ஏற்கனவே திட்டமிட்ட பல நாடகங்கள் நாள்தோறும் இணைக்கப்படுகின்றன. நாம் அவற்றுள் ஏதோ ஒன்றில், நமக்கான பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறோம். எந்தவொரு சிறிய நகர்வையும் நம்மால் மாற்றவே இயலாது என்பதை முழுமையாக உணரும் போது தான், வாழ்க்கையெனும் புத்தகம் நமக்கு புரியத் துவங்குகிறது.

விபத்தைப் போல் தான் ஆலா இயக்கத்துக்குள் நுழைய நேர்கிறது. கூத்துக் கலையில் பரிச்சயமும், ஆடல் பாடலில் ருசியுள்ள, பத்துவயதிலேயே சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைப் பார்க்கத் துவங்கும் எளிமையான சிறுமி, சிங்கள மொழியறிவால் மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபடுவதும், போராளியாக உருவெடுப்பதையும் விதி என்பதைத் தவிர வேறெந்த சொல் கொண்டும் விளக்கி விட முடியாது. சுல்தான் பப்பாவின் மீதான அன்பு, அந்தத் தகிக்கும் பொழுதுகளின் மிகச்சிறிய இளைப்பாறுதல். தன் வளர்ந்த சூழலின் பாதிப்பு, துவக்கு எனும் துப்பாக்கியை குறளி என அழைக்கச் செய்கிறது. இறுதிவரை அதுவே ஆலாவின் உற்ற துணையாகிறது.

மகிமை பொருந்திய மரணத்தைக் கனவாகச் சுமந்து, அக்கனவின் நிழலில் சிறைக்கொடுமைகள் அனைத்தையும் உறுதியோடு ஒவ்வொரு கணமும் கடக்கிறாள் ஆலா. உடலே புண்ணாக மணத்த போதும், தினசரி ஒரு தாளைக் கொடையாக கேட்டுப் பெற்று, தன்னையே அதில் எழுத்துக்களாக மாற்றி வைக்கிறாள்.

// என் தேகத்தின் நெய் அருவியாகிறது. என் ஆன்மாவின் அக்னி கோடையாகிறது. என் மூச்சுக்காற்றுச் சுழலாகிறது, என் நாக்கு நீர் உடும்பாகிறது//

அம்மாவின் புதிய வாழ்க்கை ஏதோ ஒரு ஆறுதல். “ மகளே, நீ ஒருபோதும் இந்த நாட்டுக்கு திரும்பி வந்து விடாதே” என்ற தாயின் சொற்கள் எத்தனை மகத்தான வாழ்த்து. 300 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றவளின் வாழ்வில், விடுதலை, திருமணம் என்ற வார்த்தைகள் பெருங்கனவுச் சொற்கள் அல்லவா.  அவள், தான் வாழாத வாழ்வைத் தாள்களில் தீட்டினாள்.

தாள்களை தந்த கண்காணிப்பாளர் லொக்கு நோனாவின் பெண் குழந்தை இறந்தே பிறந்தது என்றதொரு குறிப்பு தரும் ஆலாவின் நுண் குரூர வெளிப்பாடு தொந்தரவு செய்கிறது. அதீதமான துயரங்களைக் கடந்து வரும் பெண்களின் ஆழ்மன கனவு வாழ்க்கைகூட கடுமையான மன உளைச்சலையும், அடிகளையும் தாங்குவதாகவே அமைந்ததை என்னவென்று சொல்வது. வானொலி சேவை நடத்தும் வாம தேவனின் பாத்திரம் ஆலாவின் கசப்புணர்வில் இருந்து உயிர்த்தது போலும். உலகெங்கிலும் பெண்களின் ஒரே மொழி கண்ணீராகத் தான் இருக்கிறது. குறளி அவள் கையில் வந்த பின், “கேப்டன் ஆலா பேசுகிறேன்” என்று கட்டளை பிறப்பிக்கும் தொனியில் தான் இச்சாவின் சாரம் அடங்கி இருக்கிறது.

புதிர் நிலத்தின் விவரிப்பு

உலகின் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு சிறு பெட்டிச் செய்திகளாக வெளியாகும் சம்பவங்கள், எத்தனை பேரின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக சுமந்திருக்கிறது என்பதை ஷோபாசக்தியின் விவரிப்பு உணர்த்துகிறது. நாட்டார் மரபு சார்ந்த கூத்துப் பாடல்கள், கதைகளின் இணைப்பு ஒரு மர்மமான உணர்வை ஏற்படுத்துகிறது.  இச்சாவின் தனித்துவமான தன்மையாகவும் அது அமைந்திருக்கிறது. இச்சா நாவலின் வெளியீட்டு விழாவில் பேசும் போது ஷோபாசக்தி, “நான் யுத்தத்தோடு பிறந்து வளர்ந்தேன். என் படைப்புகளில் பெரும்பாலும் போர், போர் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகியவை தான் இடம்பெறும். இழந்தவற்றின் கணக்கு எவரிடமும் இல்லை” என்றார். உண்மை தான். போரின் காரணம் எதுவாக இருந்தாலும், இழப்புகளை சந்திப்பது அப்பாவி பொதுமக்கள் தானே.

புலம்பெயர் வாழ்க்கையில் இருந்தாலும், அவரின் எழுத்துக்கள் ஈழத்தின் மணத்தோடு திகழ்கின்றன.

// கிணற்று நீரில் மணமிருக்காது நிறமிருக்காது. பட்டிப்பளை ஆற்றின் நீருக்கு மீனின் நிறம்! மாதுளை மணம்!!//

ஒரு புதினம் என்பது வெறும் சம்பவங்களின் விவரிப்பு அல்ல. வாசகருக்கு ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையை அணுக புதிய தரிசனத்தை வழங்குவதாகவும் இருக்க வேண்டும்.

//உண்மை என்பது நாம் முன் கூட்டியே அறிந்திருப்பதல்ல. அந்தக் கணத்தில் நாமாகத் தேடிக் கண்டடைவதே உண்மை. உண்மையை எழுதுவது என்பது சமுத்திரத்தில் கல்வீசி அலைகளில் நீர்வளையங்களை உருவாக்குவதைப் போன்றது. ஒரு பெரிய வளையத்துக்குள் சிறு சிறு வளையங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கும். பெரிய வளையம் முதலில் அழிந்து போகும். பெரிய உண்மைகளே முதலில் மறைந்தும் போவன.//  – இது போன்ற பல தரிசனத் துணுக்குகள் இச்சா முழுவதும் விரவியிருக்கின்றன.

ஏவல் சூனியம் என்ற மர்ம உலகின் தடங்கள் இந்த நவீன உலகிலும் பதியத்தான் செய்கின்றன. ஈழத்தின் மரபு வேர்களுள் ஒன்றான கூத்துக் கலையின் விவரிப்பு, ஆலாவின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.

மட்டபனை ஓலை

மயில் அடையும் பூஞ்சோலை

மயிலு விடுங்கண்ணீரு – இந்த

மாளிகையில் சுத்துதம்மா

 

குட்டைப் பனையோலை

குயிலடையும் பூஞ்சோலை

குயிலு விடுங்கண்ணீரு – இந்தக்

கோட்டையிலே கத்துதம்மா

இந்தப் பாடல் இச்சாவை வாசித்து முடித்து பல நாட்கள் கடந்தாலும், மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

கதை சொல்லியிடம் நீலக்கண்களுடன் ரோஜா நிறப் பெண்மணியாகவும் அறிமுகமாகும் மர்லின் டேமி, இயேசு கிறிஸ்து உயிர்த்த நாளில், கொழும்பு நகரில், 2 குழந்தைகளை அணைத்தவாறு, வயிற்றுப் பிள்ளையோடு தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் உயிரிழக்கிறார். இது ஆரம்பத்தில் வருகிறது. நாவலின் இறுதியில், அவர் தான் லொக்கு நோனா என ஆலாவின் பக்கங்களில் குறிப்பிடப்பட்டவர் என வருகிறது. ஆலாவின் குறிப்புகளில், அவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்ததாக இருக்கிறது.  கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலில், தனது மூன்று குழந்தைகளுடன் ஈஸ்டர் ஆராதனையில் இருந்த போது கொல்லப்பட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது. சிறிது தகவல் குழப்பம் இருக்கிறது.

முதல் பக்கத்தில் ஆலாப் பறவையின் குறிப்பை வாசிக்கையில் நாம் அந்த புதிர் நிலத்தில் பயணிக்கத் துவங்குகிறோம். ஆலா என்ற வெள்ளிப்பாவை உருவாக்கிய உரோவன் தமிழ் அகராதியில் இச்சா வின் அர்த்தத்தை வாசிக்கையில் அப்பயணம் முடிகிறது. நிறைவடையவில்லை. ஆலாவின் சொற்களில்

“இந்தச் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கும் எனது ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறகு. ஒவ்வோர் எழுத்தும் ஓர் இறகு”

– ரஞ்சனி பாசு

நூல் தகவல்:

நூல் : இக்சா

பிரிவு :  நாவல்

ஆசிரியர்: ஷோபா சக்தி

வெளியீடு :  கருப்புப் பிரதிகள்

வெளியான ஆண்டு :   முதற்பதிப்பு2019

பக்கங்கள் :  304

விலை :  ₹290

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “பொன்னிறகுப் பறவையின் பயணம்: இச்சா

  • அருமை,, சிறப்பான விமர்சனப் பதிவு,, வாழ்த்துக்கள். 📚🇨🇭📘📒📙🙏

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *