அபுனைவுமொழிபெயர்ப்பு

ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை- ஒரு பார்வை


ப்பானிய மக்களின் சராசரி ஆயுள் 85 என்று ஒரு செய்தியில் படித்தேன். இதற்குக் காரணம் அவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது இக்கிகய் நூலைப் படித்த போது தெரிந்தது. ஆனால் அதே ஜப்பானியர்கள்தான் இயற்கையால் மிகவும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள். 2011 ல் வந்த முப்பெரும் விபத்துகள் ஜப்பானைப் புரட்டிப் போட்டன.

பேரா.மிக்கயில் ஃபெரியே டோக்கியோவில் பணிபுரியும் பிரென்ச் பேராசிரியர். பிரான்ஸில் பிறந்தவர்.

ஃபுக்குஷிமா அணு உலை விபத்து ஏற்பட்ட போதும், சுனாமி மற்றும் நிலநடுக்கத்தின் போதும் ஜப்பானில் பல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, மக்களை நேரில் கண்டு, அவர்களின் அனுபவங்களை, பார்வைகளை, பயங்களை, நடுக்கங்களை நேரடியாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். நம்மிடையே புதுச்சேரியில் வசிக்கும் பேரா. சு. ஆ. வெங்கட சுப்பராய நாயகர் பிரென்ச்சிலிருந்து நேரடி மொழிபெயர்ப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

இயற்கைப் பேரிடர்களையும் அறியாமை, சுயநலம், நுகர்வு வெறி முதலிய காரணங்களால் மனிதர்களே தருவித்துக் கொள்ளும் பேராபத்துகளையும் சமூகக் கடமையோடும் இலக்கிய ரசனையோடும் அணுகும் நூல் இது.

மார்ச், 2011. நில அதிர்வில் இருந்து தொடங்குகிறது. ஒவ்வொன்றையும் நேரடி கமெண்டரி போல ஃபெரியே விளக்க, விளக்க வியந்து போகிறோம்.

 

பூகம்ப விளைவுகள்

 

ஜப்பானைத் தாங்கும் புவியமைப்பு ஓடு 30 மீ நகர்ந்துள்ளது. 400 கி. மீ. அகலத்திற்கு இந்த பாதிப்பு உள்ளது.

நிலத்தடியில் இருந்த வாகன நிறுத்துமிடம் (parking space), திறந்தவெளி நிறுத்தமாக மாறியது. பூமியின் அச்சே 10 cm நகர்ந்து விட்டது போல இருந்தது.

ஆரம்பத்தில் மார்ச் 11 அன்று இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பூமி நடுங்கியபடியே இருந்தது. சென்சார்கள் தாறுமாறாக இயங்கி, தவறான தரவுகளைப் பொழிந்தன.

இரண்டு அலைகளைப் பற்றிக் கூறுகிறார். செங்குத்தாக இயங்கும் P அலைகள் முதன்மையானவை. (primary). மிகவும் வேகமானவை.அடுத்து  S அலைகள். இவை செகண்டரி. மிதமான வேகம், ஆனால் பக்கவாட்டில் நகர்பவை. சப்தத்துடன் வருபவை. இவ்வலைகளை மனிதர்கள் உணரமுடிவதில்லை. சிலவகை மிருகங்களும், பறவைகளும் உணர்கின்றன.

நிலநடுக்கம் எதிர்நோக்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளைச் சொல்கிறார். இன்றியமையா ஆவணங்கள், உணவுப் பொருள்கள், தண்ணீர், மருந்துகள், அளவான உடை, போர்வை, டார்ச் போன்றவை வைத்த பைகளை வாசலிலேயே வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

ரிக்டர் அளவு பற்றி இவர் சொல்வது அருமையான தகவல். அது நேர்கோட்டு அளவு அல்ல, மடக்கையின் படி என்கிறார். அதாவது அளவு 7 எனில் 6 போல பத்து மடங்கு, 5 ஐப் போல 100 மடங்கு.

நிலநடுக்கம் வந்த அன்று 17 நிமிடத்திற்கு ஒரு முறை 5 அளவு வந்து கொண்டே இருந்ததாம். மார்ச் 11- முதல் நடுக்கம் எனில், பின்பு நிலநடுக்கம் இல்லாத நாள் வருவதற்கு ஜுன் 8 வரை காத்திருக்க நேர்ந்தததாம். அனுதினமும் அவலங்கள். என்னவொரு வாழ்க்கை!.

நிலநடுக்கத்தை ஒரு குஸ்தி வீரனுடன் ஒப்பிடுகிறார். அதனிடம் யுக்தி, பொறுமை, பலம் மூன்றும் இருக்குமாம்.

ஜப்பான் செய்தி நிறுவனங்கள் எத்தகைய பய உணர்ச்சிகளைத் தோற்றுவித்தன என்கிறார். டோக்யோவிலிருந்து வெளியேறுங்கள் என்றனவாம். மனிதர்கள் வாழ்வைப் பற்றிய பயத்தில், எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில் உலாவினர் ;திருமணங்கள் அதிகரித்தன என்கிறார். இதே சமயம், அணுவுலை விபத்தின் போது அதே மக்கள் தங்கள் வாரிசுகள் பாதிக்கப் படுவார்கள் என்று, திருமணங்களை ஒத்திப் போட்டதையும் பதிவு செய்கிறார்.

“பயணத்தின் போது, ஒரு திருப்பத்தில் வெறுமையை உணர்வோம். ஒன்றுமே இருக்காது. மரங்கள் இல்லை, வீடுகள் இல்லை, தோட்டங்கள் இல்லை, எங்கும் இடிபாடுகளின் குவியல்.. மலைகள் தரைமட்டமாகியிருக்கும். நிலம் திட்டு போலக் காட்சியளிக்கும்.”

 

சுனாமி அனுபவங்கள்

 

சுனாமி வந்த 10 நிமிடங்களில் கண்காணிப்புக் கருவிகள் இயங்காமல் போயின. கருவிகளே அடித்துச் செல்லப்பட்டன.

சுனாமியின் வேகம் 5 கி.மீ..பகுதிக்கு 800 கி. மீ. வேகத்தில், விமான வேகம் இருக்குமாம். 500 மீ. பகுதிக்கு 250 கி. மீ. வேகத்தில் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் போல இருக்குமாம். 100 மீ. கடற்கரைப் பகுதியில் 100 கி. மீ. வேகத்தில் காரைப் போலப் பறக்கும் என்கிறார். வரைபடங்களை மீண்டும் திருத்தி வரையவேண்டி வரலாம்.

  • ஒரு மலை அசைந்து வருவது போலிருக்குமாம்.
  • வீடுகள் நங்கூரமிட்ட படகுகளாகிப் போனதாம்.
  • காமேஷி நகரம் அரை மணி நேரத்தில் மூழ்கிப் போனதாம்.
  • பேசும் போது கண்களில் நீர் வழிய, கை நடுங்கப் பேசுவார்கள்.
  • 20,000 பேர்கள் காணாமலோ, இறந்தோ போனதாக அறிவிக்கப்பட்டது என்கிறார்.
  • சில இடங்களில் இரண்டு அலைகள் வந்தவுடன், ஆபத்து முடிந்தது என்று மக்கள் கரையில் சென்று பார்த்தனராம். தாங்கள் பார்க்கக் கூடிய கடைசிக் காட்சி இது என்று அறியாமல், அனைவரும் விழுங்கப்பட்டனர்.

சுனாமி பின்வாங்கும் போது சேதம் அதிகமாம். வீடுகள் பெயர்த்தெடுக்கப்பட்டு, வத்திப் பெட்டிகள் போல மிதந்து செல்லும் என்கிறார். இரவு நேரம் இன்னும் ஆபத்து. ஆங்காங்கு தீப்பற்றும். ஜுவாலை ஜோ வென எரியுமாம். மின் கம்பங்கள் விழுந்திருக்க, மீன் வலைகள் சூழ்ந்திருக்குமாம்.

அடித்துச் செல்லப்பட்ட கோவில்கள், திறந்துக் கிடந்த புதைகுழிகள் நடுவே மெழுகுவர்த்தியுடன் பிரார்த்தனை செய்யும் மக்களைக் கண்டதாகக் கூறுகிறார்.

அனைத்தையும் விட, மோசமான துர்நாற்றம் வயிற்றைப் பிசையுமாம். கரையொதுங்கிய இறந்த மீன்கள், ஆடைகலைந்து நிர்வாணமான உடல்கள்.. கைபேசிகள் மனிதரை அடையாளம் காண உபயோகப்பட்டன என்பது என்னவொரு முரண். (irony)

ஒரு நாளிதழின் நிருபர்கள், மூழ்கிப் போன நூலகங்கள், சேதமடைந்த கிடங்குகள் போன்ற எல்லாவற்றிலும் கிடைத்த தாள்களில் எழுதிக்கொண்டிருந்தனராம்.

நகரத்தின் நடுவில் 379  டன் எடையுள்ள கப்பல் உடைந்து போய் 48 மீ தூரத்திற்கு பரவிக் கிடந்ததாம். இடிபாடுகளில் மூன்று வர்ணங்களில் கொடிகள் நட்டிருந்தார்களாம்.

தொடக்கூடாதவை பச்சை, அப்புறப்படுத்தவேண்டியவை மஞ்சள், முழுமையாக இடிக்க வேண்டியவை சிவப்பு.

 

அணு உலை விபத்து

 

யாருக்கும் என்ன, எதனால் என்றே தெரியவில்லை. எவ்வளவு எரிபொருள் ஃபுக்குஷிமா-வில் வைக்கப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரம் இல்லை. உலையின் மையப்பகுதி விவரங்கள் தெரியவில்லை. வெடிவிபத்திற்கான வெடிபொருள் பற்றியும் தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் திருத்தப்பட்டிருந்தன. அவ்வப்போது மாற்றி மாற்றி தகவல்கள் தந்தனர்.

முதலில் 3 கி. மீ, பின்பு 20 கி. மீ. தொலைவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். திருமணங்கள் தடைபட்டன. மனவுளைச்சலில் தூக்கிட்டுக் கொண்டனர்.

ஃபுக்குஷிமா போர்க்களம் போலக் காட்சியளித்தது.

மீட்புப் பணியாளர்களுக்கு இரண்டு வேலைகள் ஒன்றாக செய்யவேண்டியிருந்தன. நச்சு நீரை வெளியேற்றுவது, குளிர்ந்த நீரால் அணு உலைகளைக் குளிர்விப்பது.. இரண்டும் கலந்து விடக்கூடாது.

குழாய்களில் வரும் குடிதண்ணீர் நிறுத்தப்பட்டது. கழிவுகளின் மேலாண்மையே வாழ்க்கையானது.

அன்றாட வேலைகள்:

*நாள்தோறும்  தரை முழுவதும் துடைத்தல்.

*தூசு நீக்கும் கருவியைப் பயன்படுத்தி தூசு சேராமல் காத்தல்

*பண்ணைப் பொருள்களைத் தவிர்த்தல்

*காய்கறி பழங்களைக் கழுவுதல்

*மினரல் வாட்டரில் உணவு சமைத்தல்.

செய்திகள் அதிகமானதால் பதிவு நீண்டுவிட்டது.. மிகெய்ல் ஃபெரியே பிரென்ச்சுக்கே உரிய அழகியலலோடு, கவித்துவமாக எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு தமிழ்க் கவிதையைப் படிப்பது போல உள்ளது.. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களை எவ்வளவு ரசித்திருக்கிறோம். அப்படி ரசிக்கலாம்.

முடிக்கையில் கொரோனா ஒன்றுமேயில்லை என்று தோன்றியது.


கோவை பிரசன்னா.

 

நூல் தகவல்:
நூல்: ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை
பிரிவு : மொழிபெயர்ப்பு  கட்டுரைகள்
ஆசிரியர்: மிக்கேயில் ஃபெரியே
தமிழில்: சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
வெளியீடு: தடாகம் வெளியீடு
வெளியான ஆண்டு  2012
பக்கங்கள்:  260
விலை : ₹ 200
நூலைப் பெற:

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

One thought on “ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை- ஒரு பார்வை

  • மிகச் சிறப்பு , வாழ்த்துக்கள்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *