பதினெட்டாம் நூற்றாண்டு நடுப் பகுதியின் கதைக் களமான அ. மாதையாவின் கிளாரிந்தா ஆங்கில நாவலின் தமிழாக்கம் இந்நூல்.

அன்றைய தஞ்சாவூர் மன்னன் பிரதாப் சிங் ஆட்சியில் இருந்த போது ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள்…

ஆட்சியில் அதிகாரமும் ஆதிக்கமும் நிறைந்த அதிகாரியாய் இருக்கும் வயது முதிர்ந்த திவான் இருபது வயதே நிரம்பிய கிளாரிந்தாவை சூழ்ச்சியால் மணமுடித்து அவளை தனது மனைவியாக்கி கொள்ளும் தந்திரம்…

அறிவும் தெளிவும் நிரம்பிய கிளாரிந்தா தனது மணவாழ்க்கையில் படும் துன்பங்களுக்கு அளவேயில்லை.. மேலும் அவளுக்கு உரிமையான சொத்துக்களை அவளிடமிருந்து பறிக்க காத்திருக்கும் உறவுகள்…

திவான் இறக்க.. அவளை சதியாகும் படி வற்புறுத்தும் சூழல் உருவாக்கப்படுகிறது. அவளின் நினைவை மயங்கச் செய்து அவளை சிதையில் தூக்கிப் போய் போடும் நிலையில் அவளை காப்பாற்றும் லிட்டில்டன் என்ற ஆங்கில ராணுவ வீரர்…

அவரின் பாதுகாப்பில் தனது வாழ்க்கையை தொடரும் கிளாரிந்தாவின் வாழ்வு மீண்டும் ஒரு சிக்கலை சந்திக்கிறது.

கிளாரிந்தா லிட்டில்டன் இருவரும் எளிய முறையில் தங்கள் வாழ்வை இணைத்துக் கொண்டாலும் கிறிஸ்துவ மதத்தில் தன்னை இணைத்துக் கொள்ள அந்த மதத்தின் முறையில் ஞானஸ்நானம் பெறவேண்டும்.. கிளாரிந்தா ஞானஸ்நானம் பெற ஸ்வார்ட்ஸ் பாதிரியிடம் வரும் போது என்ன நடக்கிறது? ஞானஸ்நானம் பெற்றாரா? கிளாரிந்தாவின் துன்பங்கள் முடிவுக்கு வந்தனவா?

ஒரு வரலாற்று நிகழ்வு அன்றைய சமுதாய வாழ்வை பிரதிபலிக்கும் போது அன்றைய வாழ்வில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட சமூக கொடுமைகளை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அதிலிருந்து இன்று பெற்றுள்ள சமூக அறிவை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை வாசிப்பின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.

அன்றைய சமூக மூடத்தனங்களும் அறியாமைகளும் பெண்களை எந்த நிலையில் வைத்திருந்தது…, இந்து மத பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளும் ஒரு ஆங்கிலேயர் அதன் விசித்திரமான போக்குக்குகளை அறிந்து அதை மிகத் துணிவோடு எதிர்க்கும் தீரம்..,
கிளாரிந்தாவின் இறுதிக்காலம் வரையில் அவர் கடைப்பிடித்து வந்த நற்குணங்கள்.., அறப்பணிகளில் அவர் கொண்டிருந்த ஆர்வம்..,
இன்றும் பாளையங்கோட்டையில் வரலாற்றின் சாட்சியாக இருக்கும் கிளாரிந்தா தேவாலயம் என வரலாறும் புனைவுமாக இந்த நாவல் விரிவதை பார்க்க முடிகிறது.

அ. மாதையாவின் கிளாரிந்தா சரித்திரம் அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம். நாவலை முழுவதும் வாசித்து அனுபவிப்பவர்களுக்கே அதன் முக்கியத்துவம் புரியும். நாவலில் வரும் உரையாடல்கள் அத்தகையவை. நாவலில் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் கேள்விகள் நிறைந்து கிடக்கிறது. கேள்விக்கு பதில், சமூக நீதியை போராடி பெற வேண்டும் என்பதே..!

சரித்திரம் என்பது வெறும் வீரர்களின் போராட்டம் மட்டுமல்ல., சமத்துவம் மிக்க சமூகத்தில் மட்டுமே மனித ஆன்மாவை நாம் கண்டடைய முடியும் என்பதை ஆணித்தரமாக கிளாரிந்தா கண்டு கொள்ளும் அறிவு என்றைக்கும் ஆனது தானே.!


 

www.vimarsanam.in
பதிவுகள் குறித்து அறிய

We don’t spam! Read our privacy policy for more info.

நூல் தகவல்:

நூல் : கிளாரிந்தா

ஆசிரியர் : அ. மாதவையா

தமிழில் : சரோஜினி பாக்கியமுத்து

வெளியீடு : அடையாளம் பதிப்பகம்

ஆண்டு :   2015

பக்கங்கள் :  284

விலை : ₹ 230

 

எழுதியவர்:

1 thought on “அ. மாதையாவின் கிளாரிந்தா – நாவல் ஒரு பார்வை.

  1. அ. மாதையாவின் கிளாரிந்தா – நாவல் ஒரு பார்வை. – அருமையான புத்தக மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மஞ்சுளா கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *