மொழிபெயர்ப்பு

செர்னோபிலின் குரல்கள் -விமர்சனம்


“ நான் அவரோடு இல்லாத நேரத்தில் அவரை நிர்வாணமாக்கி, ஒரு மெல்லிய துணியை மட்டும் அவர்மேல் போர்த்தி புகைப்படம் எடுத்தார்கள். அந்த மெல்லிய துணியை நான் தினமும் மாற்றினாலும் சாயங்காலத்தில் அந்தத் துணி முழுவதும் இரத்தமாக ஆகிவிடும். நான் அவரை தூக்கினால், அவர் உடம்பில் உள்ள தோல் என் கையில் ஒட்டிக்கொள்ளும். நான் அவரிடம் அன்பே நீங்களே உங்களால் முடிந்த அளவு முட்டுக்கொடுத்து கை முழங்கை ஆகியவற்றை தூக்கினால் எனக்கு உங்கள் படுக்கையில் முடிச்சுகள் எதுவும் இல்லாமல் சரி செய்வதற்கு வசதியாக இருக்கும் என்றேன்” அதாவது ஒரு சிறு முடி கூட இருந்தால், அது அவர் உடம்பில் புண் வரும்படி செய்தது. எனது நகம் அவர்மேல் தற்செயலாக பட்டுவிடக் கூடாது என்பதற்காக நகங்களை ரத்தம் வருமளவிற்கு நன்றாக ஒட்ட வெட்டிக் கொண்டேன். நர்ஸ்கள் யாரும் அவரை அணுக வில்லை. ஏதேனும் வேண்டுமெனில் என்னைத்தான் அவர்கள் கூப்பிட்டார்கள். ”

”நான் எனது உடமைகளை எல்லாம் எடுத்துச் செல்லவில்லை, ஆனால் ஒன்றை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். எனது வீட்டில் கதவை மட்டும் எடுத்துச் செல்வது அவசியமாகும். என்னால் அதனை விட்டுவிட்டு செல்ல முடியாது. எங்களுடைய வீட்டின் கதவு எங்கள் குடும்பத்தின் நினைவுச்சின்னம். என்னுடைய அப்பா கதவின் மேல் தான் படுத்து இருந்தார். இது யாருடைய மரபு என்று எனக்குத் தெரியாது, ஆனால் குடும்பத்தில் இறந்தவர்களை அந்த கதவின் மேல் தான் படுக்க வைப்பார்கள், என்று அம்மா சொல்லுவார். அப்பா இறந்த போது சவப்பெட்டி வரும் வரைக்கும் அவரது உடல் அதில்தான் கிடத்தப்பட்டிருந்தது. அன்றிரவு முழுவதும் நான் அப்பாவுடன் இருந்தேன். அந்தக் கதவில் சிறிய குழிகள் இருந்தன. அதை நான் வளரும்போது குறிக்கப்பட்ட குறிப்புக்களாகும். முதல் கிரேட், இரண்டாம் கிரேட், என அதில் எழுதப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் எனது பிள்ளைகள் எப்படி வளர்ந்தார்கள் என்ற முழு வாழ்க்கையும் அந்தக் கதவில் எழுதப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட இந்த கலவை விட்டுவிட்டு நான் எப்படி செல்ல முடியும்.”

நிக்கோலாய் ஃபோமிச் கலுகின் அவரது அப்பாவின் வாக்குமூலம்.


செர்னோபிலின் குரல்கள்  1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் செர்னோபில்- இல் உள்ள அணுமின் நிலையத்தில் ஏற்பட்டது மிக பயங்கரமான வெடி விபத்து. அதனைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து அங்கு அங்கு வாழும் மக்களுடன் ஒன்றாக கலந்து, அவர்களின் குரல்களை பதிவு செய்திருக்கின்றார் ஆசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இவருடைய தந்தை பெலாரஸையும், தாய் உக்றைனையும் சேர்ந்தவர்கள். தனது பட்டப்படிப்புகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்து, பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்து பல அனுபவங்களின் பின் பல நாவல்களை எழுதி அதன்மூலம் சிறந்த பரிசுகளை பெற்றிருக்கும் ஆசிரியர், சோவியத் ரஷ்யாவில் நடைபெற்றுவரும் தற்கால உண்மை நிலைமைகளை எடுத்துக் கூறத் தவறவில்லை. அதே நேரத்தில் ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் வெளியாகிய இப்புத்தகத்தை, எங்கள் தமிழ் வாசகர்கள் சிறந்த முறையில் வாசித்து அதை உள்வாங்க வேண்டும் என்ற முறையில் மொழிபெயர்ப்பு செய்திருக்கின்றார் சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள். அவர்களுடைய மொழிபெயர்ப்பு நடை வாசிப்போரைச் சோர்ந்து விடாது, உற்சாகத்துடன் என்னைக் கொண்டு செல்வதை நான் இந்நூல் வாசிப்பு மூலம் அறிந்து கொண்டேன்.  மொழிபெயர்ப்பாளர் சித்தார்த்தன் சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.

 

ஆசிரியரின்  நாவலை  மூன்று பகுதிகளாக பிரித்து மிக நுட்பமாக அலசி அலசி ஆராய்ந்து உள்ளார். இந்தக் கொடிய நிகழ்ச்சி நடைபெற்ற பின் அங்கு வாழும் மக்கள் தங்களுடைய நிலங்களை பல துயரங்களுக்கு மத்தியில் எப்படி எல்லாம் அவர்கள் விட்டுச் சென்றார்கள், அப்போது ஏற்பட்ட வலி, ரணம் அவர்களை எப்படியெல்லாம் துக்கத்தில் ஆழ்த்தியது, கதிர்வீச்சினால் அங்குள்ள உயிர்களின் விலை எந்த அளவுக்கு ரஷ்ய அரசாங்கம் கணக்கு போட்டது, இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இயங்கி வரும் நிறுவனங்கள் எப்படியான கட்டளைகளை நிறைவேற்றின, என்பதனை முதலாவது பகுதியில் வாசிக்க கூடியதாக இருக்கின்றது.

இரண்டாவது பகுதியில், தற்போது தடைசெய்யப்பட்ட  செர்நோபில் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் மக்களின் துயர காட்சிகளைப் பகிர்ந்து கொள்கின்றார் ஆசிரியர். அந்த அழிவு நடைபெற்று பத்து வருடங்கள் கழித்து மக்கள் தங்களது உண்மை நிலையை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறார்கள். அவர்கள் பட்ட கஷ்டங்கள் துயரங்கள் சிந்திக்கவே முடியாத அளவுக்கு பல மன வேதனைகளை இந்த நாவலை எடுத்துக் கூறுகின்றது.

மூன்றாவது பகுதியில்,  சோவியத்தில் அந்த காலகட்டத்தின் அரசு அதிபர் மிகையல் கோர்ப்பச்சோவ்வின் ஆட்சியில் எப்படியான தவறுகளை செய்தது, மக்கள் இது எங்கள் நாடு, நாட்டுக்காக எதையும் செய்வோம், என்று மனரீதியாக பழக்கப்பட்டவர்கள், அதிலே களப்பணியாளர்களாக ஈடுபட்டனர். பின்னாளில் அவர்களின் தரப்புகளின் முடிவில் நாங்கள் பெரிய தவறை செய்து விட்டோம் என்று சிந்திக்கின்ற அவர்களது தீவிரமான குரல்கள் வெளிப்படுவதை ஆசிரியர்கள் மிகத் துணிவுடன் இங்கே கூறுகின்றார். அந்த காலகட்டத்தில் செர்னோபிலில் பொருட்களின் விலைகள், மரணங்கள் நோய்கள், அன்பு, காதல் அரவணைப்பு, கூட்டு வாழ்க்கை முறைகள் எல்லாம் எப்படி சிதறுண்டு போனது என்பதனை வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளர் இன் நாவலை நகர்த்தியுள்ளார்.

தனிப்பட்ட மனிதனின் குரல்கள் என்று பார்க்கும்போது, காலம்சென்ற தீயணைப்பு படை வீரரான வாஸிலி என்பவரின் மனைவி  லூட்மில்லா இக்னாடென்கோ தந்திருக்கும் செய்திகள் உங்களை திகைக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை நண்பர்களே. வெடிவிபத்து ஏற்பட்ட பின்பு முதலில் அங்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் பலர் தங்கள் வீடு திரும்பாமல் அங்கிருந்தபடியே *மாஸ்கோவுக்கு* உடனடியாக  ஸ்பெஷல் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களை தனிப்பட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு யாருமே செல்ல முடியாது, அப்படியிருந்தும் எப்படி அந்தது தீயணைப்பு படை வீரரின் மனைவி அங்கு சென்றார், அவருடன் எப்படி  14 நாட்கள் இருந்தார், தினமும் அவரது உருமாற்றங்கள் எப்படி உருவாகின, தனது கணவனை அணுகுவதற்கு டாக்டர்களும் நர்சுகளும் மிகவும் பயந்த நிலையில் அந்தப் பெண் துணிந்து தனது கணவனுக்கு எல்லாம் என்ன பணிவிடைகள் செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செய்த செய்திகளை வாசிக்கும் போதும் கண் கலங்குகிறது நண்பர்களே. கடைசியாக அவர் இறந்தபோது எப்படி அவர்கள் புதைக்கப்பட்டார்கள், சோவியத் அரசாங்கத்தின் கெடுபிடிகள் எப்படி இருந்தன போன்ற பல செய்திகளை தனது குரல்கள் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

அத்துடன் அங்கு எப்படி விபத்து ஏற்பட்டது என்பதனை, அனுபவமற்ற நிர்வாகத்தினால் ஏற்பட்ட தவறுகால்தான் இந்த அழிவு நடந்தது என்பதனை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். விபத்து ஏற்பட்ட உடனேயே ராணுவத்துக்கு உடனடியாக தகவல்கள் கொடுக்கப் பட்டு, அங்கிருந்த மக்களை இரண்டு நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அத்துடன் வீட்டுப் பிராணிகள் ஒன்றும் எடுத்து செல்லக்கூடாது என்றும், உங்களுக்கு தேவையான மிக முக்கிய பொருட்களை மட்டுமே எடுக்க வேண்டுமென்றும் வானொலி மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் அறிவித்துக் கொண்டிருந்தார் கள். அங்குள்ள வீட்டு பிராணிகள் எல்லாம் சுட்டுக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டன. வீடுகளை அடித்து உடைத்து நொறுக்கப்பட்டு பூமிக்கு அடியில் தோண்டப்பட்டு எல்லாம் மூடப்பட்டன. மிருகங்கள் அவர்களுடைய சுய அறிவில்லாது மூர்க்கத்தனமான குணங்களை அடைந்தன. இதுபோன்ற பல தகவல்களை இந்த நாவல் உங்களுக்கு தந்துள்ளது.

கூடுதலாக இந்த நாவலில் மக்களின் குரல்கள், அவர்களுடைய உண்மை நிலைமைகள், அவர்கள் பத்து வருடங்களுக்கு பின்னோக்கி என்ன நடந்தது, அதில் தாங்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை தான் இங்கே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஒரு உண்மையை கண்டறியப் பத்தாண்டுகள் செல்ல வேண்டி இருக்கிறது. இன்று கூட மிகவும் கஸ்டமான நிலையில் மக்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு போவதற்கு பூமி தனது இருப்பிடத்தைக் கொடுக்க மறுக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் எங்கே போவது எங்க ஆத்மாக்கள் இங்குதான் இருக்கின்றன. அவர்களை விட்டுப் பிரிய எங்களுக்கு ஒரு துளி கூட மனமில்லை. இன்றும் கூட பல ஆண்டுகளாக கதிர்வீச்சுக்கள் இருந்தாலும், இதுதான் எங்கள் தலைவிதி என்று நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

விபத்து ஏற்பட்ட பின்பு அதனை அணைப்பதற்கு அங்கு கூடுதலாக இராணுவத்தினரையும் களப்பணியாளர்களையும் அமர்த்தினார்கள். அவர்களுக்கு மிகவும் சொற்ப கூலியே வழங்கப்பட்டது. உலக போர்களை விட, அதற்கும் மேலாக அதிக பாதிப்புகளைத் தந்த நிகழ்ச்சியாகவே மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்கின்றார்கள். கதிரியக்கத்தின் தாக்கத்தை மக்களுக்கோ அல்லது அங்கு வேலைசெய்பவர்களுக்கோ அரசு மறைத்துவிட்டது.

உங்களுக்கு ஆடர் வந்துவிட்டது, இப்போதே புகைவண்டியில் ஏறலாம் என்ற கட்டளைகளை அவர்கள் நிறைவேற்றினர். பல கிராமங்கள் தாண்டிய பிற்பாடுதான் வழித்துக்கொண்டனர். ஓகோ நாங்கள்  செர்நோபிலை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக உணர்ந்தனர்.

கதிரியக்கத்தைத் தடுக்கக் கூடிய எந்த ஒரு  கவசங்களையும் அணியாது அதன் மேற் கூரையில் ஏறி துப்புரவுப் பணிகளைச் செய்தனர்.  கெலிகொப்டர்  மூலமாக மண்மூடைகளைப் போட்டனர். பின்னாளில் (4 அல்லது 5 வருடங்களுக்குள்) அவர்கள் அடுக்கடுக்காக பல விசித்திரமான நோய்களினால் இறந்து போனார்கள். 200,000 பொண்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டது. ஆப்பகான்போருக்குப் போய் வந்த (அங்கிருந்து உயிரோடு வந்ததே நமது மறு பிறப்பு என்று கூறும்) பல இராணுவ சிப்பாய்கள் இங்கும் அனுப்பப்பட்டனர். இதைவிட அங்கயே செத்திருந்தால் மாவீரன் என்ற மெடல் கிடைத்திருக்கும். என்று ஆதங்கப்பட்டார். அதில் ஒரு இராணுவ சிப்பாய் செர்நோபில்  பணிமுடிந்து திரும்பியபோது, அவர் அணிந்திருந்த தொப்பியை தனது மகன்  ஆசையாய் கேட்டு வாங்கிப் போடுகிறார். தினமும் பாடசாலையில் தனது அப்பா ஒரு  மாகாவீரன்என்ற சொல்கிறார். காலப்போக்கில் ஒருநாள் அந்தப் பையன் மயங்கி விழ, டாக்டரிடம் ஓடுகிறார்கள், டாக்டர் பரிசோதனை யின் பின் பிள்ளைக்குக்  மூளையில் கான்ஸர் என அறிவிக்கிறார். சில நாட்களின் பின் அந்தப் பிள்ளை தன் நிலத்தை விட்டு மறைகிறது.

மரணம் அவ்வளவு அழகாக இருக்கும் என்பதனை நான் ஒருமுறை திரும்பி பார்க்கிறேன் என்கிறார்  நாடெஷ்டா பெர்ரனோவா விகொவ்ஸ்த்யா விபத்து நடந்த நகரமான ப்ரீபியாட் விபத்தினால் ஏற்படும் விளைவுகளை அறியாத மக்கள் அந்த வானலைகளில்  சிவப்பும் நீலமும் கலந்த ஒரு வண்ணமான ஒளியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் நகரத்தை விட்டு வெளியேற்றப் படுகிறார்கள்.

சோவியத் மக்களுக்கு அணுகுண்டு வெடித்தால் நாம் அதிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றுதான் கற்றுக் கொடுத்ததே தவிர ஒரு அணுஉலை வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி அவர்களுக்கு ஒரு விளக்கமும் தெரியப்படுத்தவில்லை. இது நடந்த முடிந்த பின் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தங்களுடைய அன்றாட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தை நினைவுக்குக் கொண்டு வருகிறார் ஆசிரியர்.

செர்னோபிலின் பிறந்த குழந்தைகளின் உடம்பில் ரத்தத்திற்கு பதிலாக எதோ மஞ்சள் நிறத்திலான திரவம் இருக்கிறதாம், கதிர்வீச்சுக்கு பக்கத்தில் வசித்து வந்த குரங்குகள் எல்லாம் புத்திசாலி ஆகிவிட்டன, என்று விஞ்ஞானிகள் உறுதிபட கூறினார். மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு குழந்தைகள்  ஐன்ஸ்டீன் மாதிரி இருப்பார்கள். பேர் அண்டவியல் பரிசோதனை தான் நம் மீது நடத்தப்படுகிறது என்று கூறுகிறார் அனடோலி ஷமான்ஸ்கி என்னும் பத்திரிகையாளர்.

அந்த மக்கள் விட்டுச்சென்ற வீட்டின் கதவு குறிப்பு ஒன்றில் இந்த வசனத்தை நினைத்துப் பாருங்கள். அன்புள்ள கருணை உள்ளம் கொண்டவர்களே, விலை மதிப்பற்ற பொருட்கள் எதையும் இங்கே தேட வேண்டாம். ஒருபோதும் எங்களிடம் அவை இருந்ததில்லை உங்களுக்கு ஏதேனும் பொருட்கள் தேவை எனில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் இடத்தை குப்பை ஆக்கிவிடாதீர்கள் நாங்கள் மீண்டும் வருவோம் இதேபோல் இன்னொரு கதவில் எழுதப்பட்ட வாக்கியம், பிரியமான வீடே, எங்களை மன்னித்துவிடு. மனிதர்களுக்குக் குட் பாய்  சொல்வது போல் சிலர் தங்கள் வீடுகளுக்குக் குட்பை சொல்லி இருந்தனர். அல்லது நாங்கள் இரவில் செல்லவிருக்கிறோம் அல்லது  நாங்கள் காலை செல்ல இருக்கின்றோம் என்கிற தகவலுடன், தேதி, நேரம் முதலியவற்றை குறிப்பிட்டிருந்தனர் அந்த மக்கள். பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்தில் பூனையை அடிக்காதீர்கள் அப்படி அடித்தால், எலிகள் எல்லாவற்றையும் தின்று தொலைத்துவிடும் என்று எழுதியுள்ளனர். இப்படியான கருணை உள்ளம் கொண்ட அந்த மக்கள் நாடற்றவர்களாக வெளியேற்றப்பட்டனர்.

அணுசக்தி அங்கு வெடித்த பயத்தை விட மக்கள் சரி, நிர்வாகிகள் சரி தலைமைக்கே பயப்படுகிறார்கள். எல்லோருமே தங்கள் சிந்தனைப்படி செயல்ப்படாது தொலைபேசி, மற்றும் நிர்வாக மேலிடத்திற்காகவும் காத்துக் கிடக்கின்றனர், என்று வாக்குமூலங்கள் கூறுகின்றன. இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தது என்றால் அவை கரப்பான் பூச்சிகளும் மண்புழுக்கழும் தான் என்று முடிக்கும் ஆசிரியர், நாங்கள், எமது என்று பன்மையில் வாழ்ந்து வந்த மக்கள் இந்த அழிவின் பின் நான் எனது என சிந்திக்க தொடங்கி விட்டனர், என்கிறார் தனது சேகரிப்பு குரல்களிலிருந்து.

நண்பர்களே! எல்லாம் எழுதி விட்டால் வாசிக்கும் உங்கள் ஊக்கத்தை கத்திரிக் கோலால் வெட்டுவது போன்று இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படியான நாவல்களை மீள் வாசிப்பு செய்யும் போது, பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கதிர்வீச்சு இப்போது நம்மை நோக்கி வந்தால் எப்படி இருக்கும்? என்று எண்ணத் தோன்றுகின்றது. சுவிற்சலாந்தில் உள்ள அணு ஆலைகளை படிப்படியாக மூடு விழா செய்ய அரசு முடிவு செய்துள்ளது மிக வரவேற்கத்தக்கது என்றே சொல்ல வேண்டும்.


பொன் விஜி

– சுவிஸ்

நூல் தகவல்:
நூல்: செர்னோபிலின் குரல்கள்

அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு

பிரிவு : மொழிபெயர்ப்பு, ஆய்வறிக்கை
ஆசிரியர்: ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்
தமிழில்:  சித்தார்த்தன் சுந்தரம்
வெளியீடு: எதிர் வெளியீடு
வெளியான ஆண்டு  2016
பக்கங்கள்: 364
விலை : ₹ 300
நூலைப் பெற:

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *