நூல் விமர்சனம்புனைவு

பிருந்தா சாரதியின் “பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்” – ஒரு பார்வை


“எழுதும்போது உனக்கும் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது” உள் மனதோடு நேரடியாகப் பேசு – எண்ணங்களைக் கலைந்து போக விடாதே – நேரடியாகச் சொல்” என்கிற பாஷோவினுடைய வரிகளை பதிப்புரையில் குறிப்பிட்டு இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது படைப்பு பதிப்பகம்.

ஜப்பானியர்கள் பருவங்களை வைத்துக் கொண்டு இலக்கியத்தை வரையறை செய்து கொண்டார்கள் என்றால் நாம் திணைப் பிரிவுகளால் வகுத்துக் கொண்டோம். அதனால்தான் ஜப்பானிய இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஊடாக ஓர் அந்தரங்க ரத்த ஓட்டம் நிகழ்கிறது என்று ஓர் ஆய்வின் வரிகளை தன்னுரையாகத் தந்திருக்கின்றார் பிருந்தா சாரதி.

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார் மகாகவி பாரதியார். சுதேசமித்திரனில் அவர் எழுதிய ஜப்பானியக் கவிதை எனும் கட்டுரையினை பதிவு இருப்பது சிறப்பு.

“யாருமற்ற நீர்நிலை

தன் பிம்பத்தைத் தானே பருகுகிறது தனித்து நிற்கும் மாடு”

இக்ஹைக்கூவை வாசித்த உடன் சிறுவயதில் எனக்குச் சொன்ன குட்டிக்கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இணை மான்கள் பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது தாகமெடுக்கிறதாம். அவை ஓர் நீர்நிலையைக் காண்கிறது. ஒருவர் மட்டுமே அருந்தக்கூடிய அளவிற்கே அந்த நீர்நிலையில் நீர் இருக்கிறது. பெண்மான் சூலுற்றிருப்பதால் அதனிடம் நீரினைப் பருக ஆண்மான் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இல்லை இல்லை என்று நீங்கள் பருகுங்களென்று ஆண்மானிடம் சொல்கிறது பெண்மான். இரு மான்களுமே அந்த நீர்நிலையிலுள்ள நீரினைப் பருகுவது போன்று பாவனை செய்கின்றன. அந்த பாலை நில வெப்பம் அந்த நீரை ஆவியாக்கி விடுகிறது. இரு மான்களும் ஒன்றுக்கொன்று அவையவை பருகியிருக்கும் என்று எண்ணிக் கொண்டனவாம். இங்கே அதைப் போன்ற ஒரு காட்சி அமைப்பினை காண்பித்திருக்கின்றார். ஆனால் தன் பிம்பத்தைத் தானே பருகுவதைப் போல என்று. அந்த மாட்டிற்கும் தன் பிம்பத்தைப் பார்க்க ஆசை இருக்கும் தானே. அதுவும் தனியாக இருக்கும்போது ஒருவித நாணத்துடனும் பெருமிதத்துடனும்.

கண்ணாடித் தொட்டியில் வளர்க்கப்படும் மீன்களைப் பார்க்கும்போதெல்லாம் அவற்றின் அழகு நம்மை வசீகரிக்கும். நிறையப் பேர் நிறைய விதமாக அந்த தொட்டி மீன்களுடைய அழகினை கவிதையாக வடித்திருக்கிறார்கள். இவர் வடித்திருக்கின்ற விதம் வாஞ்சை கொள்ளச் செய்கிறது.

“முத்தமிட்டுக் கொள்கின்றன தொட்டி மீன்கள்
சிலிர்க்கிறது தண்ணீர்’.
நிச்சயம் முத்தமிட்டுக் கொண்டேயிருக்கும். இனி நாம் கண்ணுறுவோம்.

தன்னுடைய கூட்டில் குயில் முட்டை இட்டுச் செல்வது தெரியாமல் அவற்றையும் தன் தன் முட்டைகளைப் போன்று அடைகாத்து குஞ்சு பொரிக்க வைக்கிறது காகம். அந்த கரிய நிறப் பறவையினுடைய தாய்மையினை எழுத்தில் வடித்திருப்பது வசீகரிக்கிறது.

“குயிலின் குரலை விட
இனிது
காகமே உன் தாய்மை”

என்னதான் வெள்ளமாய் ஓடினாலும் நாய் தண்ணீரை நக்கித்தான் குடிக்கும் என்று ஓர் சொலவடை உண்டு. அதுபோன்று இயற்கை தருகின்ற மழைநீரினைச் சேகரித்துப் பாதுகாப்பதை விட்டு விட்டு வணிக தண்ணீருக்கு அலைகின்ற நம்மைத் தலையில் குட்டி இந்த கவிதையினைப் படைத்திருக்கிறார்.

“கொட்டும் மழை
குடைபிடித்து வாங்கி வருகிறான் மினரல் வாட்டர்.”

சத்து தரும் மினரல்களையெல்லாம் எடுத்து விட்டு நெகிழிக் குடுவையில் அடைக்கப்பட்டிருக்கின்ற அந்த தண்ணீரினை தாகம் தணிக்க வாங்கிக் குடித்து நோய்களை நாம் வரவைத்து கொண்டு இருக்கின்றோம் என்பதனை மூன்று வரிகளில் நச்சென்று சொல்லி விழிப்புணர்வைத் தூண்டி இருக்கின்றார்.

வண்ணத்துப்பூச்சி என்தே அழகு. அதனைப் பார்க்கப் பார்க்க இன்னும் அழகு. செடி கொடிகளில் அவை தாவித்தாவிப் பறந்து செல்லும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால், அதன் போக்கில் போக இயலாமல் தவிக்கும் வலியினை இப்படி வரிகளால் வடிக்க இயலாது என்பதனை இந்த ஹைக்கூவில் காண இயலுகிறது.

“உள்ளே வர தவிக்கிறது வண்ணத்துப்பூச்சி
கண்ணாடி சுவர்”

இதயத்தில் இடி கண்களில் மழை என்று கவிதை ஒன்று படித்த ஞாபகம். அதன் சாயலில் இல்லாமல் அதன் வலியைச் சுமந்து கொண்டு இந்த ஹைக்கூவைப் படைத்திருக்கின்றார்.

“இறக்கிவைக்க முடியாத சுமையை இறக்கி வைக்கிறது
ஒரு சொட்டுக் கண்ணீர்”

உண்மைதானே. அழுது தீர்த்து விட்டால் அனைத்துச் சோகங்களும் நம்மை விட்டுக் கரைந்து போய்விடுகிறது.

நம் தொப்புள் கொடி உறவாம் இலங்கைச் சகோதரர்களைப் போன்று நிறையப் பேர் தற்போது தன்னுடைய சொந்த நாட்டிலிருந்து தவிர்க்க இயலாத காரணங்களுக்காக அல்லது போரின் காரணமாகப் புலம் பெயர்ந்து போகின்றார்கள். அவர்களுக்கு நாம் கொடுக்கும் அடைமொழி அகதி. இந்த வரிகளை வடித்த விதம் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

“தாய்நாட்டை சுமக்கும் அகதி கைப்பையில்
கைப்பிடி மண்”.

இந்தக் கவிதையைப் படிக்கும் போது எனக்கு சர்வர் சுந்தரம் திரைப்படத்தில், இயக்குநர் பாலச்சந்தர் எழுதிய வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது. நாகேஷ் கே.ஆர்.விஜயாவைச் சந்தித்து ஒரு பூங்கொத்து கொடுத்து தன் காதலைச் சொல்லும்போது கே.ஆர் .விஜயா நாகேஷினுடைய நண்பர் முத்து ராமனைத்தான் விரும்புவதாகச் சொல்லி முடித்ததும் தோற்றது தன் நண்பரிடம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, அந்தப் பூங்கொத்தை நான் எடுத்துச் செல்கிறேன். ஏனெனில் அது தன் அன்பைச் சுமந்து வந்தது. அதனைக் குப்பைத்தொட்டி தாங்க தனக்கு மனமில்லை என்று சொல்லி எடுத்துச் செல்வார். அதன் சாயலிலேயே

“குப்பைத் தொட்டியைப்
பூந்தொட்டியாய் மாற்றுகின்றன விற்காத பூக்கள்’
என்று பாடுகிறார்.
விற்காத பூக்களுக்குச் செய்கின்ற ஒரு மரியாதை மட்டுமல்ல அதன்மேல் கொண்ட ஓர் வாஞ்சையுமாகும் இது.

வலசை போன பறவைகள் திரும்பி வந்து கூடடையும் இந்தக் காட்சியைக் கண்ணுற்று வெகு நேர்த்தியாக இயற்கையோடு பொருத்தி இந்த ஹைக்கூவைப் படைத்திருக்கின்றார்.

“கிழக்கும் மேற்கும்
தொட்டுக் கொள்கின்றன பறவையின் சிறகுகளில்”

கூடடைதலை திசைகளோடு பொருத்தி கவிதையாக்கியிருப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இப்படி நிறைய ஹைக்கூக்களைச் சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனையும் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த நூலை வாங்கி வாசிப்பது எப்படி?

ஹைக்கூ கவிதைக்கென சில நெறிமுறைகள் உள்ளன. அதன் முதல் இரண்டு அடிகள் கேள்விகளாகவும் மூன்றாவது அடி பதிலாகவும் இருக்க வேண்டும் என்பதே விதி. ஹைக்கூ எழுதுவதென்பது வயதானவன் காதலிக்க முயற்சிப்பதை போல ஒரு கடினமான சவால். ஆனால் அந்த சவாலை வென்று தமதாக்கி காதலெனும் ஹைக்கூவில் வென்றிருக்கிறார் பிருந்தா சாரதியென்று இயக்குநர் வசந்தபாலன் அணிந்துரை தந்திருப்பது இந்த நூலுக்குப் பெருமை.

பொறியாளர் கோ.லீலா அவர்களுடைய ஆய்வுரை இந்த கவிதைத் தொகுப்பிற்குக் கிடைத்த ஒரு மணிமகுடம்.

“பாட்டி அணியும்
பாதணிகளில் ஒன்று
இறந்த தாத்தாவுடையது”

இதனை, “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற செம்புலப்பெயனீரார் வரிகளோடு பொருத்தியிருப்பது அவருடைய ஆய்வின் ஆழத்தைப் பறைசாற்றுகிறது. எவ்வளவு உள்வாங்கி இருந்தால் இதுபோன்றதொரு ஆய்வுரை தரமுடியும் என்று வியக்கிறேன்.

வாழ்வின் ஆழ்ந்த சுவாசமென்பது ஹைக்கூ எனும் கூற்று என்பார்கள். இப்படி சமகாலத்தில் வாழும் ஒரு கவிஞரின் ஹைக்கூ பல நூற்றாண்டுகளைக் கடந்த பாஷோவிற்கு இணையாக இருப்பதைப் போன்று படைத்த பிருந்தாசாரதி நமக்குக் கிடைத்த பொக்கிஷம். இப்படி ஹைக்கூவிற்குப் பெருமை சேர்த்திருக்கும் பிருந்தா சாரதிக்கு வந்தனங்கள்.


நூல் தகவல்:

நூல் : பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்

வகை :  ஹைக்கூ கவிதைகள்

ஆசிரியர் : பிருந்தா சாரதி

வெளியீடு :   படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு: 2021

பக்கங்கள் : 188

விலை:  ₹  150

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *