மொழிபெயர்ப்பு

அன்னா கரீனினா – நாவல் விமர்சனம்


            புதின எழுத்தாளர்களில் மிகச்சிறந்தவர்களுள் ஒருவராக மதிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ரஷ்யாவின் லியோடால்ஸ்டாய் இந்நாவலை எழுதியிருக்கிறார்.”வறுமையும் புலமையும் சேர்ந்தே இருக்கும் என்பது வழமையான ஒரு கருத்து. ஆனால் லியோடால்ஸ்டாய் ரஷ்யாவில் பெயர் பெற்ற பழைய பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்.

ஆயிரக்கணக்கான வேலையாட்கள் இவரது பண்ணையில் வேலை பார்த்தார்கள். “அலெக்ஸாண்டர் புஷ்கின்” என்ற புகழ்பெற்ற ரஷ்ய கவிஞர் இவரது உறவினர். லியோடால்ஸ்டாயின் படைப்புக்கள் எல்லாம் மனிதர்களுக்காக மனித நேயத்தை வளர்ப்பதற்காக எழுதப்பட்டவைகள் ஆகும். அவை அழியாத காவியங்களாக எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தாலும், நேசிக்கப்படும் அமர காவியங்கள் ஆகும்.

அன்னகரீனினா, போரும் அமைதியும், ஹதாஜி முரத்,  இவான் இலிச்சின் மரணம் ஆகியவை இவரது மிகச்சிறந்த ஆக்கங்கள் ஆகும்.

ந்நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் நா.தர்மராஜன்.

இவர் சிவகங்கையில் வசதியான வேளாண்மை குடும்பத்தில் பிறந்தவர். இவர் படித்த துரைசிங்கம் நினைவு கல்லூரியிலேயே ஆங்கில பேராசிரியராக பணியாற்றினார்.

தோழர் ஜீவாவின் பொது உடைமைச் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு மாணவப் பருவத்திலேயே கம்ப்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்

எந்த புத்தகத்தையும் அதன் காலச்சூழலையும்  அறிவுச் சூழலையும் உள்வாங்கிக் கொண்டு

மொழிப்பெயர்க்க வேண்டும் .ஒரு படைப்பை மொழிப் பெயர்க்க மூலநூலை படித்திருந்தால் மட்டும் போதாது. எழுதப்பட்ட நாட்டின் பண்பாடு, சமூகம் போன்ற பின்னணிகள் தெரிந்திருந்தால் மட்டுமே அந்நூலை மொழிப் பெயர்க்க முடியும் எனக் கூறியவர் நா.தர்மராஜன்.

8 ஆண்டுகள் இவர் மாஸ்கோவில் தமிழ்ப் பிரிவில் ழொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அங்கு இலக்கியம், தத்துவம், அரசியல் என்று பல்வகை நூல்களை மொழிப்பெயர்த்திருக்கிறார். பின் 2007 ல் அன்னகரீனினா புத்தகத்தை மொழிப்பெயர்த்திருக்கிறார்.


இனி நாவலைப்பற்றி.. 

இந்நாவல் இரு பாகங்களாக இரண்டு புத்தகங்களாக உள்ளது.

ஒருவருடைய சந்தோசம் எதில் இருக்கிறது? காதலிப்பதிலும், விரும்புவதிலும், நேசிப்பதிலும், அன்பு செலுத்துவதிலும் தான் சந்தோசம் இருக்கிறது. ஒருவருடைய விருப்பங்களை விரும்புவதிலும், அவர்களுடைய சிந்தனைகளைப் பற்றி சிந்திப்பதிலும், அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நம் விருப்பமாகி, அவர்கள் நினைப்பது எல்லாம் நம் நினைப்பாகி,  காதல் புரிவதிலும், காதலை நாடுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.

ஆனால் இந்த இன்பங்கள், சந்தோசங்கள் எல்லாம் நாம் சரியான நபரை தேர்ந்தெடுக்கிறோமா என்பதைப் பொறுத்துதான் அமைகின்றன.

ஒரு ஆணோ,  பெண்ணோ திருமண வாழ்வில் இருந்து கொண்டே வேறு ஒருவரின் அன்பால் ஈர்க்கப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானதாக தான் இருக்கும். தன் கணவனை விடுத்து தான் காதலிக்கும் நபருடன் செல்வது என முடிவெடுத்து விட்டால் அவள் விரும்பிய காதல் அவள் வாழ்வில் இருக்கும் தான். ஆனால் காதல் மட்டுமே வாழ்க்கை அல்லவே. அதன்பிறகு அவள் எடுத்த முடிவால்  படும் அவமானங்களும்,  அல்லல்களும், அளவற்றவையாக இருக்கும்.  எந்த காதலுக்காக அவள் திருமண பந்தத்தை விட்டு வெளியேறினாலோ அதுவே சுமையாகவும்,  மனவுளைச்சலாகவும் ஆகிவிடுகிறது. குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்லும் காதல் உண்மையிலேயே சுயநலமான காதலாகத்தானே இருக்க முடியும். எல்லாம் முடிந்த பிறகு குழந்தைக்காக ஏங்குவது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது.

அதுபோலதான் இந்நாவலின் நாயகி அன்னாவின் காதலும். அன்னா மிக அழகான, புத்திசாலியான, நேர்மையான, நல்ல சமூக அந்தஸ்து உள்ள ஒரு உயர்குடிப்  பெண். பதவிகளாலும், கௌரவத்தாலும் உருவாக்கப்பட்ட ஒருவர் கரீனின். அன்னாவின் கணவன். கணவனுக்கு தன் மேலும் தன் மகன் மீதும் அன்பும் காதலும் இல்லையென நினைத்து விரான்ஸ்கியின் காதல் வலையில் விழுந்து தன் வாழ்வை சிதைத்துக் கொள்கிறாள் அன்னா.

தன் மகனை தன் கணவனிடம் விட்டுவிட்டு விரான்ஸ்கியுடன் சென்றுவிட்ட பின் அன்னாவின் மகனின் நிலையை விவரிக்கும் போது கண்களில் நீரை வரவழைக்கிறது. அப்போதே அந்த காதல் சபிக்கப்பட்ட காதலாகி விடுகிறது.

காதலனுடன் சென்று விட்ட பின்னும் அவளால் முழு சந்தோசத்துடன் வாழ முடியவில்லை. தான் மிகவும்  மோசமான அருவருப்பான பெண் என மனம் புழுங்குகிறாள். எங்கே விரான்ஸ்கி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் போய்விடுவானோ என்று அவனை கண்காணிப்பதிலேயே அவள் வாழ்க்கை செல்கிறது.

ஆனால் விரான்ஸ்கியின் பாடு பரிதாபம். தன்னைக் காதலித்த கிட்டியை விட்டுவிட்டு அன்னாவின் காதலை ஏற்கும் அவன் தன் காதலை நிருபிக்க முடியாமல் திண்டாடுவதும் அன்னாவால் தன் வேலையையும் விடுத்து சுதந்திரத்தையும் இழந்து தவிப்பதும் அன்னாவின் மேல் கோபத்தையே தூண்டுகிறது அவனுக்கு.

இறுதியில்  சந்தோசமான வாழ்க்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை இதுபோன்ற வேதனைகள், சித்ரவதைகள், சண்டைகள் இல்லாத வாழ்க்கையே போதும் என நினைக்க வைத்து விடுகிறது இந்த காதல்.

ஒரு குடும்பத்தில் எழும் கடுமையான பிரச்சினையுடன் இந்நாவல் துவங்குகிறது. சூறாவளி, புயல் என்று சின்னாபின்னப் படுத்தப்படும் குடும்ப உறவுகளை விவரித்த பின்பு புயலுக்கு பின் அமைதியை ஏற்படுத்திவிட்டுப் போகிறது.

நாவலில் இது சிறு விவரிப்பு மட்டுமே. இன்னும் ஆப்லான்ஸ்கி -டாலியின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், லெவின் _ கிட்டியின் காதல்+ கல்யாணம்+ வாழ்க்கை என்று குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், பெண் இனத்தின் பரிதாபமான நிலைகளையும் அதன் தீர்வுகளையும் குறிப்பிடுகிறது.

நாட்டின் வரலாற்றையும் அதன் பொருளாதார சிக்கல்களையும் விவசாயிகளின் பிரச்சனைகளையும்,பெண்களின் பரிதாபமான நிலைகளையும்,நில உடைமையாளர்களின் தோல்விகளையும் அலசுகிறது இந்நாவல்.

அன்னா கரீனினா உலகின் மிகச்சிறந்த நாவல்  என்பதில் எந்த ஐயமும் இல்லை


நூல் தகவல்:

நூல் : அன்னா கரீனினா

வகை : மொழிபெயர்ப்பு நாவல்

ஆசிரியர் (ரஷ்யா)  : லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy

தமிழில் : நா.தர்மராஜன் 

வெளியீடு :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வெளியான ஆண்டு: 2018 – முதல் பதிப்பு

பக்கங்கள் :  1190

விலை:  ₹ 1100

Buy on Amazon : 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *