நாம் சிறு வயதில் நம் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ கதை கேட்டு வளர்ந்திருப்போம். நமது நினைவில் அந்த குழந்தைப் பருவ நினைவுகள் அழியாமல் ஒளிந்து கொண்டுஇருப்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோமா? என்ற கேள்வியோடு இந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.

நம் வீட்டு குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது நம்மையும் நம் குழந்தைகளையும் இணைக்கும் ஒரு புள்ளியில் கதைகள்தான் நமக்கு கை கொடுக்கின்றன. அவ்வப்போது நம்மை மீட்டெடுக்கும் தருணங்களாக சில வாய்ப்புகள்தான் அமைகின்றன. அந்த வாய்ப்பை நமக்குத் தருபவர்கள மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றனர்.

அண்மைக்காலமாக தமிழில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் கதைகள் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் தொடர்ந்து குழந்தை இலக்கியம் படைப்பவராகவும், ஹைக்கூ கவிதைகளில் நன்கு அறியபட்டவராகவும் இருப்பவர். தமிழ் கூறும் நல்லுலகில் குழந்தை இலக்கியம் வளர்த்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராக அழ.வள்ளியப்பா அவர்களை நாம் நன்கறிவோம். அவர் தமிழகத்து நேரு மாமா என்றும் அழைக்கப்படுகிறார். அதற்கான சிறப்பும் தகுதியும் பெற்றவர் அவர். அவரைத் தொடர்ந்து தமிழில் எழுதப்பட்ட குழந்தை இலக்கியங்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தன என்பது ஆய்வுக்கு உரியதாகும்.

குழந்தைகளின் கவனத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதல்ல.அவர்களுக்கான உலகம் தனித்துவமானது. அந்த உலகத்தில் இருக்கும் கற்பனைகள் நம்மால் அளவிட முடியாதது. மிகவும் சிறிய குழந்தைகளை நாம் கவனித்துப் பார்த்தோமானால் நமக்குச் சில விஷயங்கள் புரிந்துவிடும்.

அவர்களின் மீது நாம் அக்கறையும் கவனிப்பும் கொள்ள வேண்டி நம்மை சதா நச்சரித்துக் கொண்டிருப்பார்கள்.

உண்மையில் அந்த நச்சரிப்புக்கு அவர்கள் உலகத்தில் வேறு அர்த்தம் உள்ளது,. அவர்கள் உலகத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குறிப்புதான் அது. அதை நாமும் புரிந்து கொண்டு அவர்களுக்கான உலகில் சற்று நேரமாவது நமது நேரங்களை செலவிட வேண்டும். அதற்கான வழிமுறையில் ஒன்றுதான் குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்துவதற்காகவும், அவர்களின் கற்பனைத் திறனை வளர்த்தெடுப்பதற்காகவும் நாம் உருவாக்கும் கதைகள்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு நாம் நீதிக் கதைகளையே உருவாக்குகிறோம். அவர்களின் உலகம் கள்ளம் கபடமற்றது. அந்த கள்ளமற்ற உலகத்தில் ஏன் நமது நீதிகளை புகுத்த வேண்டும்? என்ற கேள்வியை நாம் அவசியம் கேட்டுத்தான ஆக வேண்டியுள்ளது.  குழந்தைகளுக்கான உலகம் அதிசயங்களும் வினோதமான கற்பனைகளும் நிறைந்தது. அந்த கற்பனைகளுக்கு ஈடு கொடுக்கும்போது மட்டுமே அந்த கதைகள் அவர்களிடம் வெற்றிகரமாக பயணப்படும். இங்கே இந்த பயணம் என்று நான் குறிப்பிடுவது ஒரு குழந்தை மற்றொரு குழந்தைக்கு அந்த கதையை தனது கற்பனையில் வேறு விதமாக கடத்தும் என்பதைத் தான் குறிப்பிடுகிறேன்.

நமக்கு நம் பெரியோர்களால் முன்பு சொல்லப்பட்ட நீதிக்கதைகள் காலம் காலமாக புழங்கிய நமது பழைய மனோபாவங்களை அடியொற்றியது. நீதிகள் நமக்கு கதைகளின் வழியாகவே பெரியோர்கள் புகட்டியதுதான். மறுப்பதற்கில்லை. அதே வேளையில் நவீன காலத்திற்கேற்ற வகையில் இன்றைய குழந்தைகளும் வேறு வேறு புதிய அனுபவங்களை கற்றுக் கொண்டு விடுகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கேற்ற வகையில் கதைகளில் புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய அவசியமும் அறிவியல் சிந்தனைகளை புகுத்த வேண்டிய அவசியமும் நமக்கு முன்னே மிகப்பெரிய கடமையாகவும் இருக்கிறது. குழந்தை இலக்கியத்தில் இது மிகப்பெரிய சவால்தான். குழந்தைகளுக்காக கதைகள் எழுதுபவர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு எழுத வேண்டும்.

மு.முருகேஷ் அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்.

‘அம்மாவுக்காக மகள் சொன்ன உலகின் முதல் கதை’ 2021 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பில் மொத்தம் பதினாறு கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் மரபிலிருந்து புதுபிக்கப்பட்ட கதையாக உள்ளது. காலம் காலமாக நம்பப்பட்டு வந்த ஏமாற்று வித்தைகள் இதில் மாற்றப் பட்டு புதியதோர் உலகத்தை அடையாளம் காட்டுகின்றன. அதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் “பழைய பாட்டியும் புது வடையும்” என்றொரு கதை. நம் காலத்து குழந்தைகளுக்கு ஏற்ற புதியதொரு கற்பனையையும் ,ஒருவரையொருவர் ஏமாற்றி பிழைக்காமல் உழைத்து வாழ வேண்டிய அவசியத்தையும் இக்கதை வலியுறுத்துகிறது. மனித வாழ்வுக்கு நேர்மையும் அதே சமயம் பிறரை அண்டிப் பிழைக்கும் அவசியமற்ற குணங்களையும் குழந்தைகளுக்கு எளிதான முறையில் புரிய வைத்திருப்பது இந்த கதையின் முக்கியத்துவமாகிறது.

அடுத்து கட்டை விரலின் கதை …. இது நமக்கு புராண காலத்து ஏகலைவனை நினைவு படுத்தும். ஆனால் இந்த கதையில் நவீன காலத்து ஏகலைவனை படைத்துள்ளார்.

மகாபாரதத்தில் குரு துரோணாச்சாரியார் தன்னிடம் வில் வித்தை பயிலும் அரச குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தங்களுடைய திறமையை மெய்பித்துக் காட்டும் விதமான பயிற்சிகளை அளிக்கிறார். அதையும் தாண்டிய தன்னிடம் கூட இல்லாத ஒரு தனித்திறமையை  வேட்டுவ குலத்தைச் சேர்ந்த ஏகலைவனிடம் கண்டு அதிர்ச்சியடைகிறார். அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்  அவனிடம் குரு காணிக்கையாக அவனின் கட்டை விரலை கேட்கிறார். ஏகலைவனோ குருவின் நியாயமற்ற தன்மையை எதிர்த்து தனது கட்டைவிரலை தர மறுக்கிறான். பிறந்த குலத்தை காரணம் காட்டி எனக்கு வில் வித்தை கற்றுத் தர மறுத்த குருவிற்காக நான் ஏன் எனது கட்டை விரலை தரவேண்டும்? என வாதிடும்போதும் அவன் வாதத்தை மறுத்து அவனது கட்டைவிரல் வீரர்களால் வெட்டப்படுகிறது. அந்தக் கட்டைவிரல் காலம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறது. அதன் கதை கேட்ட சிறுவர்கள் தங்கள் கரங்களை ஒன்றாக கோர்த்து இனி தங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை என்பதாக கதை முடிகிறது. பிறப்பின் பெயரால் ஒருவரை உயர்த்தியும் மற்றொருவரை தாழ்த்தியும் வைக்கும் நமது இந்திய புராண மரபுகளை கேள்விக்குள்ளாக்கும் இது போன்ற கதைகள் குழந்தைகளிடத்தில் கொண்டு சேர்க்கும் போது அதை மறுகட்டமைப்பு செய்துள்ளார் முருகேஷ். சிறுவர்கள் மனதில் பதியும் விதமாக இந்த கதையை வடிவமைத்திருப்பது தான் இதன் தனிச்சிறப்பு.

காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி கதையில் பலவிதமான பறவைகள் போட்டியில் பங்கு பெருகின்றன. மைனா,சேவல்,கிளி, கழுகு, கொக்கு, குயில், காக்கை போன்ற பறவைகள் தங்களது இன்னிசை கீதத்தை இசைத்துப் போவதையும், இறுதியில் போட்டியில் கலந்து கொள்ள வந்த காகம் மற்ற பறவைகளால் ஏலனப்படுவதும், இறுதியில் காக்கை தனது இயல்பான குரலால் பலவித சுரங்களை ஏற்றியும் இறக்கியும் பாடும்போது மற்ற பறவைகளும்,விலங்குகளும் அதை ஆமோதித்து பாராட்டுவதும் நிகழ்கிறது. பாட்டு ராணி பட்டத்தை வென்ற காக்கையின் மூலம்

இசை என்பது யாரோ ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல… நமது இசை பாரம்பரியத்தில் நாட்டுப்புற பாடல்களும், வயலில் ஏற்றம் இறைக்கும் போது உருவாகும் பாடல்களும், பறையிசையும், தாலாட்டும் பல்வேறு இசை வடிவங்களாக நம்முடன் இருந்து வருகின்றன. மேட்டுக்குடிகள் சிலாகிக்கும் இசையை விட பாமர மக்களிடம் இசை அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. இதை சிறுவர்களுக்கும் மெய்ப்பிக்கும் வகையில் இந்த கதை அமைத்துள்ளது.

“அம்மாவுக்கு மகள் சொன்ன முதல் கதை”யில் வழக்கமான முயல் ஆமை கதையை தாண்டி இந்த கதை வேறொரு கோணத்தில் பயணிக்கிறது. நீதிகள் வெறும் வாயளவில் நின்று விடுவதைவிட அதை செயலாக்கி காண்பிக்கும்போதுதான் அதன் வெற்றியை உணரமுடியும். இந்த கதையில் வரும் ஆமையும் தனது வெற்றியை விட, அவரவர் பலத்தையும், திறமையையும் பெரிதாக மதிக்கும் அதே வேளையில், அதைக் கொண்டு மற்றவர்களை போட்டிக்கு அழைத்து சிறுமைப் படுத்தி விடாமல் இருக்கும் நற்பண்பை கற்றுத் தருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கற்றுத் தேற வேண்டிய பாடமும் இதுதான்.

மு. முருகேஷ் இந்த தொகுப்பின் மூலமாக ஒவ்வொருவருக்குள்ளும் இயங்கும் குழந்தையை மீட்டுக் கொண்டு வந்துள்ளார். நாமும் நமது குழந்தைகளைச் சுற்றியே அவர்களுக்கான எதிர்காலத்தை திட்டமிட முயல்கிறோம். அந்த திட்டங்களில் இது போன்ற கதைகள்  குழந்தைகளிடையே புதியதொரு மலர்ச்சியையும் நல்லதொரு சமூக சூழலையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. கதைகளின் வழியாகவே புதியதொரு சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமல்லவா?

 

   இந்த நூலிற்காக 2021 ஆம் ஆண்டின்  பால சாகித்திய அகாடமி விருது பெற்ற மு.முருகேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

– மஞ்சுளா


நூல் தகவல்:

நூல் : அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

வகை :  சிறுவர் கதை

ஆசிரியர் : மு.முருகேஷ்

வெளியீடு : அகநி வெளியீடு

வெளியான ஆண்டு:  2017

பக்கங்கள் : 104

விலை:  ₹  120